மனம் திறக்கிறார் கனிமொழி கருணாநிதி !

தினசரிகளில் இப்போதெல்லாம் ‘கனிமொழி கருணாநிதி’ என்றே குறிப்பிடுகிறார்கள். தமது சுய அடையாளம் குறித்து பெருமைபட்டுக் கொள்ளும் இயல்புடைய கனிமொழி, இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்?

“பள்ளி, கல்லூரியில் என் அதிகாரபூர்வமான பெயர் கனிமொழி கருணாநிதி தான். இத்தனை காலமாக இது போன்று குறிப்பிடாத பத்திரிகைகள், இப்போது குறிப்பிடுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கவிதை என்பது ஆத்மார்த்தமான ஒரு விஷயம் என்பதால் ‘கவிஞர்’ என்றுகூட அடைமொழி கொடுக்க வேண்டாம் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் .

அவருடனான சந்திப்பிலிருந்து...

தினமும் நாளிதழ்களில் உங்களைப் பார்க்க முடிகிறது... மீடியா உங்களை ஓவராக வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக நினைக்கிறீர்களா?

“மீடியா என்னைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகச் சொல்லப்படுவதுகூட, நான் சமீப காலங்களில் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் காரணமாகத்தான் என்றே
நினைக்கிறேன். நான் என்றைக்கும் மீடியாவை அணுகியது கிடையாது.”

உங்கள் களம், இலக்கியம். முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு துறைக்கு (அரசியல்) வந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

“நிச்சயமாக இல்லை. அரசியல் சூழல், போராட்டங்கள் என்பது நான் நினைவு தெரிந்த நாளிலிருந்தே பார்த்து வளர்ந்த விஷயம். திராவிட இயக்கச் சிந்தனைகள், சமூக நீதி ஆகியவை பற்றிய புரிதலை குடும்பச் சூழலே சொல்லிக் கொடுத்தது. சுருக்கமாகச் சொன்னால் என்னைச் சுற்றி அரசியல் இருந்தது; அதில் நானும் இருந்தேன்.”

நீங்கள் அரசியலுக்கு வந்ததே திணிக்கப்பட்ட நிகழ்வுதான் என்று சொல்லப்படும் கருத்து பற்றி...

“எதுவும் என் மேல் திணிக்கப்படவில்லை. சில விஷயங்கள் என்னிடம் எதிர்பார்க்கப்பட்டபோது, அதற்கு நான் தயாராக இருந்தேன் என்பதே நிஜம்.”

தயாநிதி மாறன் பிரச்னைக்குப் பிறகு நீங்கள் ஏன் களமிறக்கப்பட வேண்டும்? முன்னரே உங்கள் அரசியல் பிரவேசம் நிகழ்ந்திருக்கலாமே?

“தயாநிதி அவர்கள் தொடர்ந்து அதே நிலையில் நீடித்திருந்தால்கூட நான் அரசியலுக்கு வந்திருக்கலாம். தயாநிதி பிரச்னை வருவதற்கு முன்பேயேகூட ‘நான் அரசியலுக்கு வருவேன்’ என்று ஊடகங்கள் ஆரூடங்கள் கூறி வந்தனவே.”

தயாநிதிக்கு நீங்கள் மாற்று என்பதை திட்டவட்டமாக மறுக்கிறீர்களா?

"இரண்டு பேருக்கும் அரசியல் குடும்பப் பின்னணி என்பதுதான் ஒரே ஒற்றுமை. மீடியா, வர்த்தக உலகப் பின்னணியில் வந்தவர் தயாநிதி. அவருடைய அரசியல் நம்பிக்கை, அனுபவங்கள் என்பவை வேறு. கலை, இலக்கியம் பின்னணியுடன் வந்த என்னை அவரோடு ஒப்பிடக் கூடாது. தி.மு.க. போன்ற மாபெரும் இயக்கத்தில் குறிப்பிட்ட ஒருவருக்கு மாற்றாக, தலைவர் குடும்பத்திலிருந்து தான் வர வேண்டும் என்பது கிடையாது. தகுதியுள்ளவர்கள் இங்கே நிறையவே இருக்கிறார்கள்."

ஒரு ராஜ்ய சபை உறுப்பினரின் கடமையாக எதைக் கருதுகிறீர்கள்?

“இதுவரை அதிகம் பேசப்படாத, மக்களுக்குத் தேவையான விஷயங்களை விவாதத்துக்குக் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடுக்கு என் குரல் ஓங்கி ஒலிக்கும். மற்றபடி தி.மு.க. முன் வைக்க விரும்பும் விஷயங்களை என் குரலும் எதிரொலிக்கும்.”

தமிழக மக்களுக்கு உங்களின் பங்களிப்பு என்ன வாக இருக்கும்?

“‘இருக்கும் கட்டமைப்புக்குள் என்ன மாற்றங்களைக் கொண்டு வர முடியுமோ, அதைச் செய்ய முயற்சி செய்வேன். என் வேர்கள் தமிழகத்தில்தான் இருக்கின்றன. நான் சார்ந்திருக்கும் இயக்கக் கொள்கைகள் வழிகாட்ட, என்னால் முடிந்ததை தமிழக மக்களுக்குச் செய்ய, தமிழகத்தின் பிரதிநிதியாய் டெல்லி செல்கிறேன்.”

உங்களைப் பற்றிய தமிழக மக்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்யப் போகிறீர்கள்?

“என்னால் முடிந்த அளவு உண்மையாகவும், நியாயமாகவும், எதிர்பார்ப்பு ஏதுமின்றியும், மனப்பூர்வமாகவும் மக்களுக்குத் தொண்டாற்றுவேன்.”

அரசியல் பணியால் உங்கள் இலக்கியப் பணிகள் பாதிக்க வில்லையா?

“பாதிக்கவிட்டால்தானே பாதிக்கும். தனிநபர் சரியான திட்டமிடுதல் மூலம் பலவகையான பணிகளைச் செய்துகொள்ள முடியும். இதற்குச் சரியான உதாரணம் என் தந்தை. அவரது இலக்கியப் பணிகள் அரசியலால் பாதிக்கப்படுவதேயில்லை.”

ஒரு தந்தையாக - அரசியல்வாதியாக உங்களுக்கான கலைஞரின் அறிவுரைகள் என்ன?

“முக்கியமாக என் தந்தை எனக்குச் சொன்னது ‘எப்போதும் எதிர் கருத்துக்கள் என்னவென்பதை தெரிந்துகொள்’ என்பதுதான்.”

அமைச்சராவதற்கு முதல்கட்டமாகத்தான் எம்.பி. பதவி தரப்பட்டதா?

“எத்தனையோ எம்.பிக்கள், எம்.பிக்களாகவே இருந்து விடுகிறார்கள். சிலருக்கு நேரடியாக அமைச்சர் ஆகும் வாய்ப்பே கிடைக்கிறது. எனவே முதற்கட்டம், இரண்டாவது கட்டம் என்றெல்லாம் ஏதுமில்லை. எல்லாம் அவசியத்தைப் பொறுத்தது. எனக்குத் தெரிந்து அதுபோன்ற யோசனை எதுவும் பரிசீலனையில் இல்லை.”

முரசொலி மாறன், தயாநிதி மாறன் என்று கலைஞர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்தான் டெல்லிப் பிரதிநிதியாக இருந்தார்கள். அந்த வரிசைக்குத்தான் தாங்கள் தயாராவதாகப் பேச்சிருக்கிறதே!

“டெல்லிப் பிரதிநிதியாக இருக்கப் பல தகுதி வாய்ந்த ஸீனியர் தலைவர்கள் தி.மு.க.வில் இருக் கிறார்கள். எனக்கு அந்த பொறுப்பு வகிக்க அனுபவமும் இல்லை; அது இருக்கிறது என்று நினைத்துக் கொள்வதற்கு நான் முட்டாளும் இல்லை!”

ஜனாதிபதி தேர்தலில் தங்கள் கட்சியினர் வோட்டளித்தது தமக்குத் தெரியாது என்று ஜெ. கூறியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

“இந்த ஜனாதிபதி தேர்தலை ஒரு நகைச் சுவை என்று வர்ணிக்கத் தொடங்கி, பிறகு தாமே அதில் ஓர் உச்சகட்ட நகைச்சுவைக் காட்சியை நடத்தி முடித்திருக்கிறார் ஜெயலலிதா...”

கூட்டணிக் கட்சிகள் தி.மு.க.வை விமர்சிக்கத் துவங்கி விட்டனவே!

“ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம் ஆட்சித் தேரை ஓட விடுங்கள். முட்டுக்கட்டை போடா தீர்கள் என்று முதல்வரே மிக அழகாகச் சொல்லி யிருக்கிறாரே!”

தேர்தலுக்குத் தேர்தல் முன்னேறி வரும் விஜயகாந்த் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

“இது ஜனநாயக நாடு; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் யாரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வாழ்த்துக்கள்.”

உங்கள் வளர்ச்சியில் உங்கள் அம்மாவின் பங்கு?

“தாயாக மட்டுமல்லாமல் பல விஷயங்களில் எல்லா விதங்களிலும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். சரியாகச் சொல்வதென்றால் வார்த்தைகளில் அடக்கி விட முடியாத அளவுக்கு என் வளர்ச்சியில் அவரது பங்களிப்பு இருக்கிறது.”

சமீபகாலமாக பெண் சிசுக் கொலை பற்றிய செய்திகள் மீண்டும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்னையில் ஒரு பெண்ணியவாதியாக - சமூக ஆர்வலராக - அரசியல்வாதியாக என்ன செய்யப் போகிறீர்கள்?

“சட்டம் போட்டெல்லாம் இந்தக் கொடுமையை ஒழிக்க முடியாது. பிரச்னையின் ஆணிவேரை அறுக்க வேண்டும். பெண்களைப் பெற்றால் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாகத் தடுமாற வேண்டும் என்ற நினைப்புதானே இதுபோன்ற கொடுமைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, கல்வி, விழிப்புணர்வின் மூலம் இது போன்ற கொடுமையை ஒழிக்க முடியும். ‘பெண் குழந்தையைக் காப்பாற்றுவோம்’ என்ற இயக்கத்தில் என் பங்கு சிறிய அளவில் இருக்கிறது. இன்னமும் அதிக கவனம் செலுத்துவேன்.”

- ப்ரியன்

தரவு - கல்கி

2 comments:

August 8, 2007 at 7:21 PM Thamizhan said...

மடக்கப் பார்த்தவர்களை அருமையாக மடக்கியிருக்கிறார்.