இன்றைக்கு சாத்தான்குளம் பகுதியில் டாட்டாவின் டைட் டானியம் தொழிற்சாலை என்ற தும், ஏ அப்பா! எத்தனை கட்சிகளின் குழுக்கள் - எத்தனை நெடிய பயணங்கள் - எத்தனை கொடிய விமர்சனங்கள் - எத்தனை எத்தனை மாற்று யோசனைகள் - மக்கள் கண்ணீரில் மாளிகை அமைக்காதீர் என்று எவ்வளவு அருமையான மாணிக்க வாசகங்கள் - எங்களூர் திருக்குவளைக்கு மிக அருகிலுள்ள எட்டுகுடி முருகன் ஆலயத்துக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான காவடிகள் வருகிற மகத்தான திருவிழா நடைபெறுவது கண்டு சிறுவனாக இருந்த நான் ரசித்திருக்கிறேன்.
எட்டுகுடியைச் சுற்றியுள்ள எல்லா கிராமங்கள், நகரங்களி லிருந்து ``வேண்டுதல் செய்து கொண்ட பக்தர்கள் காவடிகள் எடுத்துவரும் காட்சி, கண்கொள் ளாக் காட்சியாக இருக்கும். சிறப்புக் காவடிகள் என்ற பெயரால் திருக்குவளையிலிருந்து சில கல் தொலைவிலுள்ள திருப்பூண்டி பகுதியிலிருந்து ஆண்டுதோறும் ஒரு காவடிக் குழு வரும். அந்தக் குழுவுக்கு முன் பகுதியில் சிலபேர் கோலாட்டம் அடித்துப் பாடி கொண்டு வருவர்! காவடி வருவதோ கோயிலுக்கு; முருகன் சன்னதிக்கு! ஆனால், கோலாட்டம் அடித்துக் கொண்டு வருபவர்கள் பாடுகிற பாட்டோ பெரியாரைப்பற்றி யதாக இருக்கும்.
"ஈரேழுலகம் புகழுகின்ற எட்டுகுடி முருகா! என்ற பக்தி வரிகளை பாடியவாறு கோலாட்டம் அடித்து ஆடுவார்கள். காரப் பிடாகை பக்கிரிசாமி என்பவர் தலைமையில் வரும் அந்தக் காவடிக் கோஷ்டியினர் - கடவுள் பற்றியும் பாடிக் கொண்டு, ``ஈரோடு தந்த வள்ளல் ஈ.வெ.ரா வாழ்க! வாழ்க!! என்று பின்னர் கோலாட் டம் அடித்து முழக்கும்போது அந்தக் கிராமத்து இளைஞர் களாகிய எங்களை அந்த ஆட்ட மும் பாட்டமும் கிறுகிறுக்க வைத்துவிடும்.
இப்படிப் பல ஊர்களில் இருந்து காவடிகள் வந்து, திருக் குவளை குளத்தில் நீராடிவிட்டு இறுதியாக எட்டுக்குடி செல்லும். காலைமுதல் பல ஊர்க் காவடிகள் வந்து போனாலும், இன்னும் நாகையிலிருந்து``வேணு காவடி வரவில்லையே என்று நாங்கள் வழிமேல் விழி வைத்துக் காத் திருப்போம். கடைசியாக மாலை 6 மணிக்கு அந்த வேணு காவடி வரும். அப்போதிருந்த நாகை ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் வேணு நாயக்கர் எடுத்துவரும் காவடிதான் வேணுக்காவடி எனப்படுவதாகும்.
இப்படிக் காவடி கோஷ்டிகள் ஒவ்வொன்றாக வருவதைப் பார்த்து பார்த்து ரசித்த அதே உணர்வுடன் இன்றைக்கு சாத் தான்குளத்து மக்கள் தி.மு.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளும் அவர்களைச் சந்திக்கச் சாத்தான் குளத்துக்கு வந்து வந்து போவதைப் பார்த்து; `ஓ! இது இன்னைக்கு புதுக் காவடியா? இது என்ன சொல்லப் போவுது என்று காவடியைக் கண்கொட்டாமல் பார்த்து காதுகளை வளைத்துக் கொண்டு கவனிக்கிறார்கள்.
ஆனால், அந்தப் பகுதி மக் களுக்கு ஒரு சந்தேகம்; இதே டைடானியம் தொழிற் சாலையை, இதே பகுதியில் அமைத்திட - ஜெயலலிதா ஆட்சியில் இதே ``டாட்டாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதே, அப்போது எந்தக் கட்சியும் இங்கே வந்து இதுமாதிரி முகாம் அடித்து, முழக்கம் செய்ய வில்லையே - இப்போது மட்டும் தி.மு.க. ஆட்சி என்றதும் இத்தனை கட்சிகள் இங்கே வந்து போர் முழக்கம் செய்கின்றனவே என்ன காரணம் என்று புரியாமல் சில கட்சிகள் மட்டுமல்ல, சாத்தான் குளம் பகுதி மக்களும் விழிக் கிறார்கள்.
இதிலே இன்னும் வேடிக்கை என்னவென்றால், டாட்டாவுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்டு அந்தத் தொழிற்சாலை வருவதற்கான ஏற்பாடுகளையெல் லாம் செய்தவர்களே கூட இப் போது அங்கே அந்தத் தொழிற் சாலை வருவது பற்றி அங்கே சென்று கருத்துக் கேட்பு நடத்து வோம் என்று சென்றிருக் கிறார்கள். வன்முறையைத் தூண்டிவிடும் பேச்சுகள் - ``வரட்டும் பார்க்கலாம் என்று தோளைத் தட்டும் போர் முழக்கங்கள் - தி.மு.க. ஒரு திட்டத்தை அறிவித்து அதனை செயல்படுத்த முனைந்தாலே - இப்படிச் சில கட்சிகள் (தோழமைக் கட்சிகள் உட்பட) அறைகூவல் விடுத்து அரசை மிரட்டத் தொடங்குகின்றன.
16 ஆண்டுகளுக்கு முன்பு சென் னையை அடுத்த சோளிங்கநல்லூரில் வீட்டு வசதி வாரியம் எடுத்துள்ள நிலத்தை இப்போது திருப்பிக் கொடுக்கச் சொல்லும் ஒரு போராட்டத்தை அறிவித்து, அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தை வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்து, அதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டவர்களே மீண்டும் அந்த இடத்தைத் தங்களிடம் கொடுக்க வேண்டுமென்று கேட்டு கோரிக்கை, அதற்கு ஆதரவாகப் போராட்டம் என்று கூறி, ``சாவியை பிடுங்குங்கள் - பூட்டை உடையுங்கள் என்று ஒரு தலைவர் பகிரங்கமாகச் சொல்லி அது பத்திரிகையிலும் வெளி வருகிறது என்றால், என்ன செய்வது - தமிழகத்தின் அமைதி கருதி தலை குனிந்து கொண்டுதான் இருக்க வேண்டியுள்ளது.
சில அரசியல் கட்சிகள் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக எதையும் பேசலாம், எத்தகைய அராஜகப் போராட்டத்தையும் நடத்தலாம் என்று நிலைமை வளர்ந்து விட்டச் சூழலில்,
வன்முறையற்ற - அமைதி - நட்புறவு - தோழமை ஆகிய உணர் வுகளுக்கு நாம் மதிப்பு கொடுப் பதாலேயே; நாட்டைக் காடாக்கும் நாகரிகமற்ற முறைகளுக்குக் கைலாகு கொடுப்பவர்கள் என்ற குற்றத்திற்கு நாமும் ஆளாகி விடுவதா?
இதனை யோசித்து முடிவெடுக்கும் காலம் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment