சூர்யா, கார்த்தி மீது ரூ. 80 லட்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார் டைரக்டர் அமீர்

'பருத்தி வீரன்' படத்தை தயாரித்ததற்காக தனக்கு 80 லட்சம் ரூபாயை வட்டியுடன் தர வேண்டும் என்று கேட்டு நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் மீது இயக்குனர் அமீர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் டைரக்டர் அமீர் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தியிடம் 2005-ம் ஆண்டு 'பருத்திவீரன்' கதையை கூறினேன். அவர்களுக்கு கதை பிடித்திருந்ததால், ஞானவேல் ராஜா என்பவரை அறிமுகப்படுத்தி இவர்தான் தயாரிக்கிறார் என்றார்கள். 2006-ம் ஆண்டுவரை பாதி படம் ஷ¨ட்டிங் நடந்தது. இதற்கிடையே ஞானவேல், நடிகர் சூர்யாவை நாயகனாக வைத்து 'சில்லுனு ஒரு காதல்' என்ற படத்தை தயாரித்தார். இதனால் 'பருத்தி வீரன்' படத்தை தயாரிக்க பணம் தராமல் நிறுத்திவிட்டார்.

இந்நிலையில், சூர்யா ரூ.47 லட்சம் பணத்தை கொடுத்து நீங்களே (அமீர்) 'பருத்தி வீரன்' படத்தை தயாரித்து வெளியிடுங்கள் என்றார். அதை ஏற்று டீம் ஒர்க் நிறுவனம் சார்பில் வெளியில் பணம் வாங்கி படம் தயாரித்தேன். என் பெயரில்தான் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது.

படத்தை சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஞானவேல் ஆகியோருக்கு போட்டுக் காட்டினேன். படம் நன்றாக இருந்ததால் அவர்கள் மனம் மாறி, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் என் மீது புகார் கொடுத்தனர். தயாரிப்பாளர் சங்கத்தினர் இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தினர். ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் என்னுடைய டீம் ஒர்க் நிறுவனம் ஆகிய 2 பட நிறுவன பெயரையும் சேர்த்து படத்தில் போட வேண்டும், அதன் பிறகு இருதரப்பின் கணக்கு வழக்கும் பார்த்து தயாரிப்பாளர் சங்கம் இறுதி முடிவு எடுக்கும், இதற்கிடையில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் ரீமேக் ரைட்ஸ், டப்பிங் ரைட்ஸ், டி.வி. ரைட்ஸ் போன்றவற்றை விற்கக்கூடாது என அவர்கள் கூறினர்.

அதன்படியே, இரண்டு நிறுவனம் பெயரையும் போட்டு படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் எனக்கு தெரியாமல் இப்படத்தை வேறு மொழிக்கு விற்பதற்கான முயற்சியை ஞானவேல் செய்து வருகிறார். மேலும் விளம்பரங்களில் எனது பட நிறுவமான டீம் ஒர்க் பெயரை போடாமல் புறக்கணிக்கிறார். இது ஒப்பந்தத்தை மீறிய செயல். எனவே எனக்கு ஏற்பட்ட செலவான ரூ. 80 லட்சத்தை வட்டியுடன் தர உத்தரவிட வேண்டும். மேலும் மாற்று மொழி உரிமையையோ, டி.வி. ரைட்சையோ எனக்கு தெரியாமல் யாருக்கும் வழங்கக்கூடாது என உத்தர வேண்டும்.
இவ்வாறு அமீர் கூறி இருந்தார்.

நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ஞானவேல் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம், பிரசாத் பிலிம் லேப் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கை நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் விசாரித்து, சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஞானவேல் ஆகியோர் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார். அமீர் சார்பில் வக்கீல்கள் என்.கண்ணன், எஸ்.நம்பி அரூரான் ஆகியோர் ஆஜராயினர்.

தரவு - தமிழ்முரசு

1 comments:

August 19, 2007 at 1:50 PM யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்னமோ போங்க இந்தச் சாத்திரக் காரர், பேத்தி பிறந்த பலன் என அந்தப் பிறந்த பிஞ்சின் தலையில் போடப் போறாங்க.