அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் அதிரடி ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் அவரது உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், நயினார் நாகேந்திரன், தளவாய் சுந்தரம், பாண்டுரங்கன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஏற்கனவே சோதனை நடத்தி பல கோடி மதிப்புள்ள சொத்துக்கான ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி வசிக்கும் சென்னை கே.கே. நகர் முதல் செக்டர் 6வது தெருவில் உள்ள வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். வளசரவாக்கத்தில் உள்ள அவரின் தம்பி பொற்செழியன் வீட்டிலும் கேளம்பாக்கம் தாழம்பூரில் உள்ள வளர்மதியின் மாமனாருடைய பண்ணை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இதுதவிர திருப்போரூர், மதுரையில் உள்ள வளர்மதியின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 12 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஐஜி உமா கணபதி சாஸ்திரி, எஸ்பி சமுத்திரபாண்டி ஆகியோர் தலைமையில் கூடுதல் எஸ்பி பாலச்சந்திரன், டிஎஸ்பிக்கள் குலோத்துங்கபாண்டியன், ஜெயபால், முரளி, நடராஜன், பொன்னுச்சாமி, வல்சராஜன், தாமஸ், இக்பால், ராஜேந்திரன், ஜோசப் தலைமையில் 12 குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று மாலை வரை சோதனை நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று ரெய்டு நடத்திய 12 இடங்களின் விவரம்:
1. கே.கே.நகர் முதல் செக்டர் 6வது தெருவில் உள்ள வளர்மதியின் வீடு.
2. இதே தெருவில் உள்ள அவரின் தம்பி பொற்செழியன் வீடு
3. கேளம்பாக்கம் தாழம்பூர் கிராமத்தில் உள்ள மாமனாருக்குச் சொந்தமான பண்ணை வீடு.
4. அம்மா வகை உறவினர் நடன காசிநாதன், மல்லீஸ்வரர் நகர், சேலையூர், சென்னை
5. கொழுந்தனார் குமார்ராஜன், புவனேஸ்வரி நகர், சேலையூர், சென்னை
6. உறவினர் நாச்சியப்பன், பாரதிதாசன் சாலை, கே.கே.நகர், சென்னை.
7. மைத்துனி மணிமொழி, சிதம்பரம்.
8. உறவினர் நாராயணன், ராமசாமி நகர், கே.கே.நகர், சென்னை.
9. சிதம்பரம், சவுத்ரி நகர், வளசரவாக்கம், சென்னை.
10. கணவருக்கு சொந்தமான ஆசிரியர் பயிற்சி பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை, புலிவாக்கம்.
11. பாண்டியன், ஐயப்பன நகர், மதுரை
12. சென்னை நாகல்கேணியில் உள்ள உறவினர் வீடு


இதற்கிடையில், திருச்சியைச் சேர்ந்த முக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் முறையான தகவல்கள் அரசுக்கு தெரிவிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களின் அலுவலகங்கள் உள்ள ஸ்ரீரங்கம், தில்லைநகர் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களின் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது ஒரே நேரத்தில் சம்மந்தப்பட்டவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 25 பிரிவுகளாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். திருச்சியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது"என்றார்.

தரவு - தமிழ்முரசு

0 comments: