Ôஅன்பு பாசம் எல்லாம் அப்புறம்... அல்ஜீப்ரா கணக்குகள்தான் முக்கியம்!Õ என்கிற வாத்தியார் அப்பா. பிரம்புக்கே வலிக்கிற மாதிரி அவர் கொடுக்கிற தண்டனைகள் பிள்ளையை முரடணாக்க, அப்பா-பிள்ளை உறவு "அதோகதி"யாகிறது. தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளையிடம் அப்பா காட்டுகிற வீராப்புதான் இந்த "வீராப்பு"
அப்பா பிரகாஷ்ராஜ். பிள்ளை சுந்தர் சி. அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டிய பாத்திரம் இல்லை. போலீஸ் நிலயத்தில் காக்கிசட்டைகளால் கந்தல் ஆக்கப்படுகிற போதும், காதல் காட்சிகளின் போதும் ஒரே மாதிரி முகபாவம். இந்த அலட்சியம்தான் சுந்தர்சியின் கேரக்டரை சூப்பர்மேன் ஆக்குகிறது. இவர் பள்ளிக்கு செல்வதை நிறுத்திய நாளை ஏதோ சுதந்திர தினம்போல் இவருடைய கோஷ்டிகள் கொண்டாடுவது ஓவர் என்றால், மொத்த ஸ்கூலுக்கும் லீவு விட சொல்வதெல்லாம் ஓவரோ ஓவர் சாமி.
எரியும் சிகரெட்டை அலட்சியமாக நாக்கால் அணைப்பது, வேட்டியை அவிழ்த்து எதிரிகளை மூடி, அவர்களின் மண்டையை பிளப்பது என்று சுந்தர் சி யை சூப்பர்சி ஆக்கும் ஸ்டைல்களை ரசித்தே ஆக வேண்டும்.
ரவுடிகளை காதலிக்கும் படித்த பெண்கள் வரிசையில் கோபிகா. டீச்சர் எதற்கு இந்த ரவுடியை காதலிக்க வேண்டும் என்று கேள்வி கேட்கவிடாமல் லாஜிக்கை காப்பாற்றியிருக்கிறார் டைரக்டர் பத்ரி. சிறு வயது மாணவன் சுந்தர்சி செய்கிற ஸ்கூல் மணி டெக்னாலிஜியை அவரே எதிர்பார்க்காத தருணத்தில் கண்காட்சியில் காண்பித்து அவரை அழைத்து பரிசு கொடுப்பது நெகிழ்ச்சி.
முன்வரிசை தாய்குலங்களின் மொத்த சாபத்தையும் வாங்கிக் கொள்கிறார் பிரகாஷ்ராஜ். போலீஸ் ஸ்டேஷனில் அடிவாங்கும் பிள்ளைய காப்பாற்றுவார் என்று பார்த்தால், என்ன வேணாலும் செஞ்சுக்கங்க. அவனை தேடி எங்க வீட்டுக்கு வராதீங்க என்கிறாரே, கல்நெஞ்ச பார்ட்டி! கடைசியில் ஒரு கொலை பழியில் சிக்கி சிறைக்கு போய் கலங்குவதெல்லாம் சினிமாட்டிக் சென்டிமென்ட்.
லாரியை வைத்து பிஸினஸ் துவங்கி கடைசியில் சைக்கிளில் தாயத்து விற்பது வரை விவேக்கின் நக்கல் உச்சஸ்தாயில் ஒலிக்கிறது. இந்த முறை இவருக்கு ஜோடி 100 கிலோ தாஜ்மகால் அஞ்சு. மழைய நிறுத்த இவரை அம்மணமாக ஊருக்குள் திரிய வைக்கும் பஞ்சாயத்து பெருசுகளிடம் விவேக் புலம்புவது வெடிச்சிரிப்பு.
இசை டி.இமான். இரைச்சல்களே பாடல்களாகியிருக்கிறது.
தளபதி தினேஷின் சண்டைக்காட்சிகளில் சூடு பறக்கிறது.
வீராப்பு... விறுவிறுப்பு!
0 comments:
Post a Comment