பூரணம் விஸ்வநாதன், அரிவாளை சுழற்றி ஆக்ஷன் ஹீரோவானால் எப்படியிருக்கும்? பாவனாவுக்கு அப்படியரு கேரக்டர். அந்த அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாத நமக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை தருகிறது ஆரியா. சிட்டியை கலக்கும் தாதாவான பிரகாஷ்ராஜின் செல்ல தங்கச்சி பாவனா. கல்லூரியில் சீட் கேட்டால் கல்லூரியையே வாங்கி தருகிற அளவுக்கு பாசம். ஆனால், பாவனா லவ் பண்ணும் மாதவனை வாங்கி தர அவர் எடுக்கிற முயற்சிகளும், அதை எப்படி எதிர்கொள்கிறார் மாதவன் என்பதும்தான் படம்.
டாக்டருக்கு படிக்கும் பாவனா ஒவ்வொரு நாளும் கல்லூரிக்கு வருவார். ஆனால் படிக்க அல்ல. அங்கிருக்கும் ஆசிரியர்களை அழ வைப்பதற்கும், நோ பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தி கலாட்டா செய்வதற்கும்தான். ஆனால், வெளியூரில் இருந்து மேற்படி கல்லூரிக்கு படிக்க வரும் மாதவன், இந்த நவீன நீலாம்பரியின் அட்டகாசத்திற்கு அடங்காமல் அவரை பரிதவிக்க விடுகிறார். தன் அண்ணனிடம் சொல்லி எப்படி எப்படியெல்லாமோ மாதவனை மடக்க நினைக்கிற பாவனாவுக்கு கடைசியில் கிடைப்பது தோல்விதான். ரவுடி வீட்டில் பெண்ணெடுப்பதா என்று ஒதுங்கி போகும் அவரையே ரவுடியாக்கிவிட்டால் என்ன என்று அண்ணன் பிரகாஷ்ராஜுக்கு யோசனை தருகிறார் பாவனா. மாதவனை சீண்டுகிறார்கள் முடி வளர்த்த புண்ணியவான்கள். (தமிழ்சினிமா ஸ்டண்ட் மேன்கள்தான்) இவர்கள் உபயத்தில் இரண்டு மூன்று சண்டைக்காட்சிகள் அரங்கேறுகிறதே தவிர, மாதவனின் மனசில் மாற்றம் மட்டும் ம்ஹ§ம்...
கடைசியில் எப்படி பாவனா-மாதவன் ஒன்றிணைந்தார்கள் என்பதோடு சுபம். பாவனாவின் அழகான பூ முகத்திற்கு பொருந்தாத கேரக்டர். எப்படியாவது சரி பண்ணிவிடலாம் என்று மூக்குத்தியெல்லாம் போட்டு சமன் செய்திருக்கிறார்கள். ஆனால், ஒரு டயலாக்கில் நான் அப்பா அம்மாவோடு இருந்திருந்தா இப்படி இருந்திருக்க மாட்டேன். என்னை தூக்கி வளர்த்தது ஒரு ரவுடி. என்னை ஸ்கூலுக்கு அழைச்சுட்டு போனது ஒரு ரவுடி, என்னை சுற்றி ரவுடிகள் மட்டுமே இருக்கும்போது நான் மட்டும் எப்படி நல்லவளா இருக்க முடியும்? என்ற அவர் கேட்கிறபோது, சரிதானே என்றுதான் தோன்றுகிறது.
பாவனாவின் வில்லத்தனங்களில் ஒன்றை மட்டும் ரசிக்க முடிகிறது. மாதவனின் தங்கச்சியை கடத்திக் கொண்டு போய் காலையில் இருந்து இரவு வரை அவருக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தே அழ வைப்பது....
மாப்பிளை ரவுடியாகிவிட்டார் என்று நினைத்து சந்தோஷப்படும் பிரகாஷ்ராஜ், எல்லாம் காட்சிகளிலும் அப்ளாஸ்களை அள்ளிக் கொண்டு போகிறார். என்னதான் ரவுடி என்றாலும், போலீஸ் கமிஷனரை போல ஜெயிலுக்கு போய் பூட்டை திறந்து ரவுடிகளை விடுவிப்பதெல்லாம் அநியாயம் சாமி.
முதல் படத்தில் பார்த்த மாதிரியே இன்னமும் ரகசிய சினேகிதனாகவே இருக்கிறார் மாதவன். குட்மார்னிங் சொல்ல சொன்ன பாவனாவுக்கு, அதிகாலை ஐந்து மணிக்கே அவர் வீட்டுக்கு போய் முகத்தில் பக்கெட் நிறைய தண்ணீரை கொட்டி குட்மார்னிங் சொல்லி கொட்டத்தை அடக்குகிறாரே, சுவாரஸ்யம். எந்த நேரம் கத்தியை எடுப்பாரோ என்று பதைபதைக்க விட்டிருக்கிறார்.
லைசென்ஸ் இல்லாத எம்.எஸ்.ஓக்களாக மாறி, நடக்கிற அத்தனையையும் ரகசியமாகவும், நேரடியாகவும், டி.வி யில் ஒளிபரப்பி உண்மையை ஊருக்கு சொல்லும் நூறாவது க்ளைமாக்ஸ். ஆனாலும் பொன்னம்பலத்தின் மீசை சென்ட்டிமென்ட்டை உள்ளே புகுத்தியது கம்பீரம்.
மாதவனின் தம்பி என்று சொல்லிக் கொண்டு இடைநுழைகிற கேரக்டர், ஒரு சுவாரஸ்யத்திற்கும் உதவவில்லை.
ஏரியா கவுன்சிலர்களின் ஏரியாவையே கலங்கடித்திருக்கிறார் வடிவேலு. அடிமேல் அடிவாங்குகிற வேடம்தான் இந்த படத்திலும். ஆனாலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கிற மாதிரியாகவா நடிக்கிறார். அடேயப்பா...!
மணிசர்மா இசையில் சில்லென்ற தீயே... இனிப்பு.
ஆர்யா, ஜோர்யா..!
விமர்சனம்
தரவு-தமிழ்சினிமா.காம்
0 comments:
Post a Comment