தென்மாவட்ட திசை நோக்கி வேண்டுகிறேன்! - கலைஞர் கவிதை



அய்யா கலைஞரே; அமர்த்தியா சென்

ஆய்ந்தறிந்து வெளியிட்ட ஆழமான கருத்தை;

அன்றாடம் எழுதும் மடலில் குறிப்பிட்டு

உழவுத் தொழிலும் தொழிற்சாலைப் பெருக்கமும்,

ஒன்றுக்கொன்று முரணானதேயில்லை யென்று

ஒன்றையொன்று தழுவி வளர்வதே உயர்வான பொருளாதாரம் என்று;

ஒப்பற்றதோர் கருத்தை உரைத்துள்ளார் - மிக நன்று!

ஒரு பகுதியில் நிலத்தையெடுத்தங்கே ஆலை அமைக்கும்போது,

வருங்காலத்தில் அவ்வாலை தர இருக்கும் வருமானத்தையும்

ஒரு கணக்கிட்டு அந்நில விலைக்கு ஈடாகவோ;

அல்லால் சில மடங்கு மிகையாகவோ வழங்குவது தான்

அந்நிலமுடையார் அகமகிழச் செய்யும் செயலாகும் - அதனால்

அமர்த்தியா சென் அறிவித்துள்ள கருத்தை ஏற்கின்றேன், என –

அருங் கவிஞர் வைரமுத்து சொன்ன போது,

கண்ணீர் கலந்த மகிழ்வுடனே அவர் படைத்த

"கள்ளிக்காட்டு இதிகாசம்" நூலின் பெயரை நினைவூட்டினேன்.

அவரோ; தண்ணீரில் பல கிராமங்கள்,

அடியோடு மூழ்கிப் போக அன்றொரு நாள்

வைகை அணை கட்டுதற்காக

வகைப்படுத்திய ஏற்பாட்டில்

வெள்ளக்காட்டில் மிதந்தனவே கிராமங்கள் என ஏங்கி

உள்ளம் நோக முடித்திருந்தார் நூலை எனினும் ஒரு வகையில் ஆறுதல் எமக்கு!

வைகையினால் வளம் பெருகும், செழிக்கும் சிற்றூர் பேரூர்கள்;

வயல்களிலே பயிர் குலுங்கும்!

பாதிப்பு சிலருக்கே எனினும்

பல்வேறு நன்மை கிட்டுமே பலருக்கு என்று

கள்ளிக்காட்டு இதிகாசமென எழுதிய நூலில்

வடுகப்பட்டிக் கவிஞர்

வார்த்தைகளால் அல்ல;

வடித்துள்ளார் கண்ணீரால் -

ஆயினும் அணையினால் அந்தப் பகுதி வளம்

வாய்ந்து வாலைக் குமரி போல்

இயற்கை அழகு கூட்டி

ஏழ்மை போக்குவது கண்டு

இருவரும் ஆறுதல் பெற்றோம்

அங்கு வாழ் மக்கள் எல்லோரும் தான்!

இது போல;

சாத்தான்குளம் பகுதியும்

வளமிகு வாழ்வு - நலமிகு வாழ்வு பெற்றிட

வேலை வாய்ப்பு இளைஞர்க்குக் கிட்டிட

பாலைவனத்தைப் பசுஞ்சோலையாக்கிட

தொழில் வளம் தொடங்கலாமெனத்

தோன்றிய எண்ணம் தொடர்ந்திட இயலாமல்

தொல்லைகள் பல்லுருவில் படையெடுப்பது காண

எல்லையிலாத் துயரம் எமை வாட்டுவதாலே

இந்தியப் பெரு நாட்டில்

இந்த ஒரு பிரச்சினைக்காக

எத்தனை கட்சிகள் கொடி பிடித்துப் பயணங்கள்

எத்துணை எத்துணை பேட்டிகள் -

இடைத் தேர்தல் போல் நடைபெறும்

இடையறாப் பிரச்சாரங்கள் -

இந்தத் தொல்லைதனை இப்போது எண்ணிப் பார்த்து

இரு பிரிவாய் கருத்து மோதல் தவிர்த்து

எப்போதும் போல் இருக்கட்டும்

இனிய சாத்தான்குளம் என்று

திட்டத்தை ஒத்தி வைத்தால் அது

திருட்டுக் கனிமம் எடுப்போர்க்கு

தித்திப்புச் செய்தியாகும் - அதனாலே

திட்டமிட்டவாறு அமைச்சர் குழு ;

திங்களன்று ஆய்வுக்கு வரும்போது

தெரிவித்திடுக தெளிவான கருத்தையென்று

தென் மாவட்ட மக்கள் வாழும்

திசைநோக்கி வேண்டுகின்றேன்!

0 comments: