அணுசக்தி ஒப்பந்தத்தில் பின்வாங்க மாட்டோம்.ஆதரவை வாபஸ் பெற்றாலும் கவலை இல்லை -இடதுசாரிகளுக்கு பிரதமர் அதிரடி பதில்
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற விரும்பினால் அப்படியே செய்யட்டும் என்றும் பிரதமர் தெளிவுபட கூறிவிட்டார். இதனால், டெல்லி அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
இந்தியா - அமெரிக்கா இடையிலான 123 அணு சக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பலவழிகளில் பாதிப்பு ஏற்படும் என எதிர்க்கட்சிகள் குறை கூறிவந்தன. இந்த ஒப்பந்தத்துக்கு ஐ.மு. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பார்லிமென்டில் இந்தப் பிரச்னையை பெரிதாக எழுப்புவோம் என்றும் இடதுசாரிகள் கூறின.
இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பார்லிமென்டில் 14 மற்றும் 16-ம் தேதிகளில் விவாதம் நடக்க உள்ளது. விவாதத்தின்போது கையாள வேண்டிய உத்திகள் பற்றி இடதுசாரி முன்னணி தலைவர்கள் டெல்லியில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். அதன்பின், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் குருதாஸ் தாஸ் குப்தா, டி.ராஜா, மார்க்சிஸ்ட் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது, "எங்கள் எதிர்ப்பை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மாற்ற மாட்டோம் என பிரதமர் கூறியிருக்கிறார். எங்கள் கோரிக்கையை ஏற்று அணுசக்தி ஒப்பந்தத்தை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். அது என்னவென்று பிரதமருக்கும் எங்களுக்கும் தெரியும்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர்.
இடதுசாரி தலைவர்களின் இந்தப் பேட்டியால் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், பதவியை அவர் ராஜினாமா செய்யப் போவதாகவும் நேற்று வதந்தி பரவியது. ஆனால், இதை மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மறுத்துள்ளார்.
இதற்கிடையே, 'தி டெலிகிராப்' என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங், அணுசக்தி ஒப்பந்தத்தில் அரசு உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி மறுபேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை. இது ஒரு மதிப்புக்குரிய ஒப்பந்தம். இதில் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை சிறிதளவு கூட விட்டுக் கொடுக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும். அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதிலிருந்து பின்வாங்க முடியாது.
ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இடதுசாரிகள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெற விரும்பினால், அதன்படியே செய்யுங்கள் என அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்.
இந்த ஒப்பந்தத்தை இடது சாரிகள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவுடன் அவர்களுக்கு ஏதோ பிரச்னை இருப்பதுபோல் தெரிகிறது. வியட்நாம், சீனா போன்ற நாடுகள் எல்லாம் எந்த அச்சமும் இல்லாமல் அமெரிக்காவுடன் பல ஒப்பந்தங்கள் செய்கின்றன.
நான் கோபப்படவில்லை. கடுமையான வார்த்தைகளையும் உபயோகிக்க விரும்பவில்லை. இடதுசாரி தலைவர்கள் என்னுடன் பணியாற்றுபவர்கள். ஆனால், அவர்கள் எங்களுடன் சேர்ந்து செயல்படவும் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறினார்.
ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற விரும்பினால் வாங்கிக் கொள்ளட்டும் என பிரதமர் வெளிப்படையாக அறிவித்திருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தரவு - தமிழ்முரசு
0 comments:
Post a Comment