'விடுதலை' தலையங்கம்

எது குறுகிய வாதம்`கல்கியாரே?




கேள்வி: தமிழகத்தில் இன்னும் பகுத்தறிவுப் பக்குவம் ஏற்படாமல் மக்கள் காசி, ராமேசுவரம் என்று போவதும், நெற்றி யில் விபூதி, குங்குமம் பூசுவதும் தமிழக முதல்வருக்கு வேதனையாக இருக்கிறதாமே?

பதில்: `பகுத்தறிவு என்பது, சமய நிராகரிப்பு, கடவுள் மறுப்பு என்ற குறுகிய நோக்கைவிட்டு வெளியே வருவது முதல்வருக்கு நல்லது. கோயிலுக்குப் போவதும், திருநீறு குங்குமம் பூசுவதும் மூட நம்பிக்கை வட்டத்துக்குள் வராது. பகுத்தறிவு வாதமே இன்றைய விண்வெளி யுகத்தில் எல்லாம் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது.

இது `கல்கி வார இதழில் இந்த வாரம் (26.8.2007, பக்கம் 66) இடம்பெற்றிருக்கும் பகுதியாகும்.

(1) கடவுளுக்கு உருவம் கிடையாது, தூணிலும், துரும்பிலும் இருப்பான் என்று ஒரு பக்கத்தில் கூறிவிட்டு இன்னொரு பக்கத்தில் கோயில் கட்டி கடவுளுக்கு ஆயிரக்கணக்கான உருவங்கள் வடித்து, கடவுளுக்குப் பெண்டாட்டிகள் வைப்பாட்டிகள், பிள்ளைகள் என்று புராணங்கள் எழுதி வைத்து, ஆண்டு முழுமையும் விழா கொண்டாடிக் கொண்டு இருப்பது - அவர்கள் கூறும் ஆன்மீகத்துக்கே எதிரானதா இல்லையா?

(2) சர்வ சக்தி வாய்ந்தவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் பேசிவிட்டு, இன்னொரு பக்கத்தில் பக்தர்கள் தங்கள் குறைகளைச் சொல்லவேண்டும் என்றும், கண்ணீர் விட்டுக் கதறவேண்டும் என்றும், கடவுளுக்கு நேர்த்திக் கடன்கள் செய்யவேண்டும் என்பதும், முரண்பாடா இல்லையா?

(3) கோயிலுக்குச் சென்று வணங்கினால், கோயில் குளத்தில் குளித்தால், புண்ணிய நதிகளில் நீராடினால் பஞ்சமா பாதகங்கள் தொலைந்து போகும் என்ற பிராயச்சித்தங்களை மதத்தில் ஏற்பாடு செய்து வைத்திருந்தால், நாட்டில் ஒழுக்கம் வளருமா என்கிற கேள்விக்கு என்ன பதில்?

(4) கோயிலுக்குச் செல்லும் பக்தர்களிடத்தில் தட்சணை வாங்குவதும், தரிசனம் காண்பதற்குப் பல வகையான கட்டணங் களை வைத்திருப்பதும் (சுயவந) அதிகக் கட்டணம் கொடுத்தால் சீக்கிரத்தில் கடவுள் சிலையைத் தரிசிக்கலாம் என்கிற ஏற்பாடு மூலம் - கோயில் என்பது ஒரு வியாபார நிறுவனம் என்று ஆகிறதா இல்லையா?

(5) திருநீறு பூசினால் எல்லா பாவங்களும் போகும் என்பதும், செத்துப் போன பிணத்துக்குத் திருநீறு பூசினால்கூட அவனுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதும், `கல்கி சொல்லும் பகுத்தறிவு வட்டத்துக்குள் வருகிறதா?

(6) லிங்கம், நாமம் போன்றவற்றிற்குக் கூறப்படும். விளக்கங் களும், தத்துவங்களும் ஆபாசமாக உள்ளனவே - (நாமத்தின் இரு கோடுகளும் விஷ்ணுவின் தொடை என்பதும், நடுவில் இருக்கும் சிகப்புக் கோடு என்பது விஷ்ணுவின் `குறி என்று கூறப்படுகிறதே!). இதனை அருவருப்பாக `கல்கி கூட்டம் கருத வில்லையா? நெற்றியில் படம் வரைந்துதான் மதத்தையும், பக்தியையும் பறைசாற்ற வேண்டுமா?

(7) பக்தி என்பது இப்போது பேஷனாகப் போய்விட்டது. வர்த்தக மனப்பான்மையாகிவிட்டது என்று சங்கராச்சாரியார் 1976 மே மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த அகில இந்திய இந்து மாநாட்டில் பேசியதற்கு என்ன பதில்?

`என் அனுபவத்தில் சொல்லுகிறேன், பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று திருமுக கிருபானந்த வாரியாரே `ஆனந்தவிகடன் பேட்டியில் (22.12.1991) கூறினாரே - இதற்கு மேலும் யார் வக்காலத்துப் போட்டுப் பேசவேண்டும்?

(8) கோயில்களில் என்னென்ன அசிங்கங்கள் நடக்கின்றன - அர்ச்சகர்களின் களியாட்டங்கள் எத்தகையவை என்பதை யெல்லாம் சர்.சி. ராமசாமி அய்யரின் கமிஷன் அறிக்கையே வெள்ளையாக, பச்சையாக எடுத்துக் கூறியதே - குஜராத் மாநிலம் சுவாமி நாராயண் கோயில் அர்ச்சகர்கள், கோயிலையே அந்தப் புரமாக்கி நடத்திய லீலைகள் வண்டி வண்டியாக ஊடகங்களில் உலா வந்ததே - இதற்கெல்லாம் என்னதான் பொருளாம்?

(9) இன்றைய விண்வெளி யுகத்தில் எல்லாம் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது என்று மங்களம் பாடுகிறதே கல்கி.

உண்மை நிலை என்ன? அமெரிக்காவின் நேச்சர் என்ற விஞ்ஞான இதழின் கணிப்பு என்ன?

1914 ஆம் ஆண்டில் கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள் 72 சதவிகிதம். 1999 இல் 90 சதவிகிதம் என்று கூறியிருக்கிறதே `கல்கி கூற்றில் ஏதாவது உண்மை இருக்கிறதா?

மனித சமூகத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களுக்குப் பகுத்தறிவைப்பற்றி கவலையிருக்கிறது - மூட நம்பிக்கை ஒழிக்கப்படவேண்டும் என்ற அக்கறையிருக்கிறது.
மூட நம்பிக்கை வளர்ந்தால்தான், பக்தி கொழித்தால்தான் தங்களின் உயர்ஜாதி ஆதிக்கம் நிலைக்கும் என்ற எண்ணத்தில் உள்ள `கல்கிகளுக்கோ, பகுத்தறிவுவாதம் குறுகிய கண்ணோட்டமாகப்படுகிறது.

எந்தவிதத்திலும் கலைஞரைக் குறைகூற வேண்டும் என்பதில் அக்கறையாக உள்ளவர்கள் என்னதான் எழுதமாட்டார்கள்.

மூடத்தனம் விரிந்ததாம் - பகுத்தறிவுவாதம் குறுகியதாம் - இதுதான் `கல்கி கூறவிரும்புவது - புரிந்துகொள்ளுங்கள்!

தரவு - விடுதலை

4 comments:

August 22, 2007 at 3:16 PM Thamizhan said...

கலைஞர் பெரியாரின் பகுத்தறிவில் வளர்ந்தவர்.அவரது தொண்டர்களே நெற்றிக்குறி.கோவில்,சாமியார்கள் என்று அலைவது அவ்ருக்கு வருத்தத்தைத் தருவது எரிச்சலாகத்தானே இருக்கும்.

எவ்வளவோ பொறுமையாக இருந்தவர் இப்போது கல்கி,தினமல்ர் கும்பல் மத வெறி பிடித்துப் பரப்புவதும்,மற்றும் பகுத்தறிவையே இழிவாகப் பேசுவதும் ,தமிழுக்கு எதிராக தூண்டுவதும் அவரைப் பொறுத்தது போதும் பொங்கியெழு என்றாக்கி விட்டது.

August 23, 2007 at 9:05 AM சாலிசம்பர் said...

நாமம் விளக்கமும்,90 சதவீத விஞ்ஞானிகள் கடவுள் மறுப்பாளர்கள் என்ற உண்மையும் பயனுள்ள செய்திகள்.பதிவுக்கு நன்றி.

August 23, 2007 at 2:43 PM ? said...

எல்லாம் சரிதான்... ஊராரைப் பற்றி கவலைப்படுவது இருக்கட்டும். தினசரி அவர் பார்க்கிற அவரது மனைவி மன்னிக்கவும்...மனைவியர் குங்குமம் வைப்பது எப்படி கலைஞர் கண்ணுக்கு தெரியவில்லை. உபதேசம் ஊருக்குதானா??

ஏனென்றால் பெரியார் நாட்டிற்கு சொன்னதோடு தம் துணைவியாரையும் பொட்டுவைக்க விட்டதில்லை.