'தொட்டால் பூ மலரும்' - விமர்சனம்

ஊரார் பிள்ளையையெல்லாம் ஊட்டி வளர்த்த பி.வாசு தன் பிள்ளைக்கு தானே கலக்கிய பூஸ்ட். ஆரம்பகால கார்த்திக்கை நினைவூட்டும் கேரக்டர். அதை அசால்ட்டாக கையாண்டு கோலிவுட் ரயிலில் முதல் வகுப்பு மரியாதையோடு பயணத்தை துவங்கியிருக்கிறார் புதுமுகம் ஷக்தி.

கல்லூரி காதலில் சவால்கள் சகஜம். பணக்கார காதலியை பதட்டமில்லாமல் லவ் பண்ணும் ஷக்தி, அவளின் பெயரை தெரிந்து கொள்வதிலிருந்து, போன் நம்பரை தெரிந்து கொள்வது வரை சுற்றி சுற்றி வருகிறார். சுவாரஸ்யத்தை தருகிறார்.

காதலுக்கு அப்ளிகேஷன் போடும் ஷக்தியின் யுக்தி இளசுகளுக்கு புது ஃபார்முலா. அடையாறு, டி.நகர் என்று புதிர் போடும் காதலியின் போன் நம்பரை தெரிந்து கொள்வதிலும், காதலியை தியேட்டருக்கு வரச்சொல்ல, பீச்சுக்கு வரச்சொல்ல, ரகசிய பாஷைகளை பயன்படுத்துவதிலும் டாக்டரேட் வாங்குகிற அளவுக்கு தேறியிருக்கிறார்.

அம்மா சுகன்யாவின் அடக்குமுறைக்கெல்லாம் அஞ்சமாட்டார் ஹீரோ என்பது தெரிகிறது. அடுத்தது என்ன என்று நகம் கடிக்கிற நேரத்தில் பொசுக்கென்று உள்ளே வருகிறார் ராஜ்கிரண். மும்பையின் தாதா வரதராஜ வாண்டையாராம். கொடுக்கிற பில்டப்புகள் புலி என்பதாக இருக்கிறது. ஆனால் ஷக்தியின் அப்பாவித் தனத்தை அப்படியே நம்பி வீட்டுக்குள் சேர்க்கிறாராம். (அட போங்க சார்) போங்கு ஆட்டம் என்றாலும் ரசிக்கவே முடிகிறது அதையும்.

அத்தனை பேர் முன்னிலையிலேயும் கட்டிப்பிடிக்கிறேன் என்று சவால்விட்டு கட்டிப்பிடிப்பதும், வெளியே இவரை தேடிக் கொண்டிருக்க காருக்குள் பதட்டமில்லாமல் ஹீரோயினை லவ்வடிப்பதும் சற்று ஆட்டிதான் வைக்கிறது மனசை.

புதுமுகம் கௌரி முன்ஜால், அழகு நிரம்பிய அட்சய பாத்திரம்.

மும்பையின் முரட்டு தாதாவாக ராஜ்கிரண் போடும் சண்டைக்காட்சிகளில் ரத்தம் தெறிக்கிறது. அதற்காக வேலு நாயக்கரின் போலி நாயக்கராக இருப்பதுதான் உறுத்தல். (இன்னமும் நாயகனை யாரும் மறக்கலைங்க)

மும்பை தாதா என்று உதார்விடும் வடிவேலு, அங்கங்கே சிக்கி பஞ்சர் ஆகிற காட்சிகள் வயிற்றை பதம் பார்க்கிறது. இதே ஸ்டைலை பல படங்களில் அவர் பயன்படுத்தினாலும் அலுக்க வேண்டுமே, ம்ஹ¨ம்.

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் "வளையல் கரங்களை" பாடல் வசீகரம்.

பூவாய் மலர்ந்திருக்கிறார் ஷக்தி. போக போகத்தான் புரியும் பூவின் வாசம்.


தரவு- தமிழ்சினிமா

0 comments: