சர்வதேச நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் திடீர் கைது!

சோட்டா ஷகீல், டைகர் மேமனும் சிக்கினர் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தது அம்பலம்



மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகளை பாகிஸ்தான் உளவுத்துறை திடீரென கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய சதிகாரனாக கருதப்படும் தாவூத் இப்ராகிம், அவனது வலது கையாக விளங்கும் சோட்டா ஷகீல் மற்றும் மும்பை குண்டுவெடிப்பு சதியில் மூளையாக செயல்பட்ட டைகர் மேமன் ஆகியோர், கடந்த 14 ஆண்டுகளாக பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தனர். அவர்களை ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு கோரிக்கை வைக்கும் போதெல்லாம், தங்கள் நாட்டில் இல்லையென பாகிஸ்தான் அடித்து கூறிவந்தது.

பாகிஸ்தானிலிருந்து துபாய், குவைத் போன்ற அரபு நாடுகளுக்கு தாவூத் பயணம் செய்யும்போது இன்டர்போல் உதவியுடன் கைது செய்யும் முயற்சியும் இதுவரை பலன் அளிக்கவில்லை.
இதற்கிடையில் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தாவூத்துக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. ஆப்கானிஸ்தானில் விளையும் ஹெராயின் போதைப்பொருளை மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தாவூத் சப்ளை செய்து வருவதாக குற்றம்சாட்டி அவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கையை கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா வைத்தது. அப்போதும் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்ற வழக்கமான பல்லவியையே பாகிஸ்தான் பாடியது.

இந்நிலையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த தாவூத் மற்றும் அவனது கூட்டாளிகளை பாகிஸ்தான் உளவுத்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அரசு இது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இது நாள் வரை தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என கூறிவந்த பாகிஸ்தான் அரசு, தற்போது அவனை கைது செய்து விட்டோம் என பகிரங்கமாக ஒரு போதும் அறிவிக்காது. ஆனால் தாவூத் கைது செய்யப்பட்டிருப்பது உண்மைதான் மும்பை நிழல் உலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருந்தபடியே மும்பை நிழல் உலகத்துடன் தொடர்பு வைத்திருந்தார். மும்பையில் குறிப்பிட்ட சில நபர்களுக்கு அவனுடைய ரகசிய நம்பரை கொடுத்திருந்தார். கடந்த 3 நாட்களாக அந்த குறிப்பிட்ட எண்ணுடன் தொடர்பு கொண்டால் தாவூத்துக்கு பதிலாக வேறு சிலர் போனை எடுப்பதாகவும், போனில் பேசுபவர் பெயரை கேட்பதாகவும் மும்பை நிழல் உலக வட்டாரங்கள் தெரிவித்தன. இது போல் இதற்கு முன்னர் நடந்ததில்லை, இதனால் தாவூத் கைது செய்யப்பட்டிருக்கலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பாகிஸ்தானில் முஷரப் அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. தாவூத் இப்ராகீம் மூலம் புதிய சிக்கல் வருவதற்குள் அவனையும், அவனது கூட்டாளிகளையும் பாகிஸ்தான் உளவுத்துறையினர் தீர்த்துக் கட்டி விட்டு அவனது சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை' என்றார்.

தரவு - தமிழ்முரசு

0 comments: