Saturday, August 18, 2007
ஈழத்து 'ஆனிவேர்' இந்தியா வருமா?
எத்தனையோ படங்கள்.... எத்தனையோ நடிகர்கள்... தமிழ்சினிமாவின் ஆணிவேருக்கு அடர்த்தி அதிகம்தான். ஆனால் கடந்த வாரம் நம்மை உலுக்கிய ஆணிவேர், இதயத்தை துளைத்து குருதியில் குளித்ததை என்னவென்று சொல்வது?
ஈழமண்ணில் எடுக்கப்பட்ட படம் இது. நாமறிந்த முகங்கள் அதிகம் இல்லை. நந்தா, மதுமிதா, நீலீமா இவர்கள்தான். மற்றவர்கள் எல்லாம் ஈழ மண்ணில் நடக்கும் கோரத்தாண்டவத்தில் எதையெல்லாமோ இழந்தவர்கள். "தமிழனா பொறந்ததுதான் நாங்க செய்த பாவமா?" என்று கடவுளை கேட்கிறான் இளைஞன். கன்னத்தில் அறைந்துவிட்டு போவது மாதிரி இருக்கிறது. கடவுளின் கன்னம் வலிக்கும் நாளிலாவது விடிவு கிடைக்கிறதா பார்ப்போம்.
நிஜமா? படமா? என்ற திக்பிரமையை ஏற்படுத்தியிருக்கிறார் படத்தின் இயக்குனர் ஜான். போர்க்களத்தில் பூ பூக்கும் என்பதையும் சொல்லி, காதலை இழையோட விட்டிருக்கிறார் ஆங்காங்கே! கவர் ஸ்டோரிக்காக இலங்கையின் யுத்த பகுதிக்கு வந்திறங்கும் நிருபர் மதுமிதா, கவர் ஸ்டோரிக்கு ஏற்றமாதிரி புகைப்படங்கள் கேட்க, "எங்களின் வேதனை உங்களுக்கு கவர் ஸ்டோரியா மட்டும்தான் தெரியுது இல்ல...? வா, இதை வந்து எடுத்துக்கோ" என்று டாக்டர் நந்தா காட்டும் கொடூரங்கள் ஒவ்வொன்றும் நரகத்தின் நகல்கள். "கேவலம் 2500 ரூபாய் பணத்துக்காக எங்களை போட்டோ எடுக்க வந்திட்டே" என்று வெடிக்கும்போது, இதையும் வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் சிலரை எண்ணி வேதனைதான் மிஞ்சுகிறது. தன் மக்களுக்காக, போர்களத்தில் டாக்டராக சேவையாற்றி வரும் நந்தா கடைசி காட்சி வரைக்கும், நடிகனாக வெளிப்படாமல் ஈழ பிரஜையாகவே மாறியிருப்பது வேதனைக்கிடையில் கிடைக்கும் மகிழ்ச்சி.
ஒவ்வொரு காட்சிகள் விரிவதற்கு முன்பும், இது இங்கே நடந்த சம்பவம் என்று எழுத்துக்கள் பதிவு செய்யப்பட, அதை தொடர்ந்து வரும் சம்பவங்கள், வெறும் சம்பவங்கள் அல்ல.... பயங்கரங்கள்! அதிலும், சிங்கள ராணுவ டாங்கிகள் உயிரோடு நசுக்கிய தமிழர்களின் உடல்களை காட்டும் போது, கண்களில் ரத்தமே வந்துவிடுகிறது. ஐந்து லட்சம் பேர் ஈழத்தை விட்டு வெளியேறும் அந்த காட்சியும் பதைபதைக்க வைக்கிறது. நீலிமா கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதும், நிருபர் என்றும் பார்க்காமல் மதுமிதா மேல் கொலை வெறி தாக்குதல் நடத்துவதும் சிங்கள ராணுவத்தின் முன்பு மனிதாபிமானத்தின் மரியாதை என்ன என்பதையே காட்டுகிறது.
இவை எல்லாவற்றையும் எப்படி படமாக்கினார்கள் என்பதே பெரும் வியப்பாக இருக்கிறது. ஏனென்றால் யுத்த பூமியில் ஆர்ப்பாட்டமாக உபகரணங்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலையே நிலவுமல்லவா? ஒளிப்பதிவாளர் சஞ்சய் மிக,மிக பாராட்டுக்குரியவர். பாராட்டுகளை அள்ளிச் செல்லும் மற்றொருவர் கலை இயக்குனர்.
படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன், தமிழின் அற்புதமான இயக்குனர்களில் முன்னோடியான மகேந்திரனின் புதல்வர். இந்தியாவில் எப்படியாவது இந்த படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்று நம்புகிறார். "வன்னி பகுதியில் படம் எடுக்கப்பட்டிருந்தாலும், சில இடங்களை தவிர பிற இடங்களில் புலி என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை. அது போல யாரையும் ஆதரித்து இந்த படத்தில் கருத்துகள் கூறப்படவில்லை. என்ன நடந்தது என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறோம். படத்தை இந்தியாவில் திரையிட அனுமதி கிடைக்கும்Õ" என்று நம்புவதாக கூறுகிறார்.
அந்நிய தேசங்களில் சில நாடுகள் தவிர பெரும்பாலான நாடுகளில் படத்தை திரையிட்டிருக்கிறார்கள். சுமார் 30 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது ஆணிவேர்.
வெறும் சுண்ணாம்பு கட்டிகளையே வைரங்களாக காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிற தமிழ்சினிமாவில், இதுபோன்ற படங்கள் என்னவாக வைக்கப்படும் என்பதெல்லாம் பிறகு இருக்கட்டும்... முதலில் காட்சிப்படுத்தும் பாக்கியமாவது வாய்க்குமா?
தரவு - தமிழ்சினிமா.காம்
Labels:
திரையுலகம்
Subscribe to:
Post Comments
0 comments:
Post a Comment