மாணவர்கள் நினைத்தால்...? பின்னால் தொக்கி நிற்கும் கேள்விக்குறிக்காக பதினாலு ரீல்களையும், ரிசர்வ் பேங்க் தாள்களையும் தாராளமாக செலவு செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் திருமலையின் இந்த கனவு பகல் கனவாக இருந்தாலும் பாராட்ட வேண்டிய கனவுதான். வேலை கிடைக்கவில்லை என்பதால் சும்மா இருக்காமல் டீக்கடை வைக்கிறார் கரண். தன்னுடைய மாணவர் பலத்தை திரட்டி நல்ல அரசியலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறார். தீக்காயத்தில் அழகை பறிகொடுத்த காதலியை வெறுக்காமல் கைப்பிடிக்கிறார். (அட.. இங்கேயும் தீயா?) இப்படி மனிதப்புனிதராக விளங்கும் கரணுக்கு ஏற்படுகிற இடைஞ்சல்கள் என்னென்ன? அவற்றிலிருந்து எப்படி அவர் விடுபடுகிறார் என்பதுதான் தீ நகர்.
தமிழ்சினிமாவின் வரையறைக்குள் அடங்கிவிடுகிற முரட்டு போலீஸ் அதிகாரி சண்முகராஜாவுக்கும், கரணுக்கும் நடக்கிற மோதலில் பொறி பறக்கிறது. விடாது கருப்பு மாதிரி விரட்டி விரட்டி தொல்லை தருகிற சண்முகராஜாவை மாணவர்கள் ஒன்று திரண்டு போலீஸ் நிலையத்திற்குள்ளேயே மடக்குவதெல்லாம் வரையறைக்குள் அடங்காத கற்பனை. முன்னாள் சேர்மனுக்காக தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லாம் ஒன்று திரள்வார்கள் என்ற கற்பனையும் அந்த ரகமே.
புதுமுகம் உதயதாராவுக்கு கண்களே கௌரவம். முகம் சொல்லாத பல விஷயங்களை அந்த கண்கள் சொல்லிவிடுகின்றன. பணக்கார பெண்ணான அவருக்கு முகத்தில் தீக்காயம் பட்டவுடன், அவருடைய பெற்றோர்கள் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முயல மாட்டார்களா? சிறைக்குள்ளிருந்து வெளியே வந்து கரண்தான் அந்த வேலையை செய்ய வேண்டுமா? இப்படி கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆனால் எல்லா கேள்விகளையும் மறக்கடித்துவிடுகிறது கதையின் வேகம்.
கல்லூரி மாணவர்களின் மோதல் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது மாணவர் தலைவர் பஷீர்-கரண் மோதல். அடுத்த காட்சியிலேயே எனக்கு உன் மேல் தனிப்பட்ட கோபம் இல்லை என்று பஷீரின் தோள் மேலே கைபோட்டுக் கொள்ளும் கரணின் லாவகம் மாணவர்களுக்கு பாடம்.
படத்தின் தயாரிப்பு செலவுக்கு கேண்டீன் காரர்களும் பணம் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. முதல் பாதி முடிவதற்குள் நான்கு பாடல்கள். நல்லவேளை, ஜாஸிகிப்ட்டின் இசை, கிஃப்டாக இருப்பதால், ஒன்றிரண்டு தலைகள் மட்டுமே பாடல் காட்சிகளில் வெளிநடப்பு செய்கிறார்கள்.
தெர்மாமீட்டர் உடைகிற அளவுக்கு ஆக்ஷன் காட்சிகளின் சூடு.
தீயை பற்ற வைக்க நினைத்துதான் மண்ணெண்ணையை ஊற்றியிருக்கிறார் டைரக்டர். ஆனால் கொளுத்த வேண்டிய தீப்பெட்டி, நமத்து போனதுதான் ஏமாற்றம்.
0 comments:
Post a Comment