'ஒரு பொண்ணு ஒரு பையன்' - விமர்சனம்

இளசுகளுக்குள் காதல். யார் முதலில் சொல்வது என்பதில் வீம்பு. இழுக்க இழுக்க எலாஸ்டிக் முறுக்கேறுகிறது. ஒருகட்டத்தில் திரண்டு நிற்கும் மேகங்கள் ஜில்லென்று நீர்தெளிக்க குளிர குளிர க்ளைமாக்ஸ். ஆர்பாட்டமான நட்சத்திரங்கள் இல்லை. அசரவைக்கும் திருப்பங்கள் இல்லை. ஆனாலும், மார்கழி மாதத்து சபாக்கள் மாதிரி மனசை கொள்ளையடித்திருக்கிறார்கள்.
காதல் திருமணம் செய்ததால் வீட்டை முறைத்துக் கொண்ட பானுப்பிரியா-சரத்பாபு தம்பதிகளுக்கு வாலிப வயதில் மகன். பானுப்பிரியாவின் அண்ணன் சரண்ராஜின் மகள் ரூபாவுக்கு தாவணி போடுகிற வயசு. பகையை மறந்து இருபது வருடம் கழித்து சொந்த ஊருக்கு திரும்பும் பானுப்பிரியாவின் மகனுக்கும், சரண்ராஜின் மகளுக்கும் மனசுக்குள் பூ பூக்கிறது. இளசுகளுக்கேயுரிய ஈகோ தலைதூக்க, சேவலும் கோழியுமாக திரிகிறார்கள். ஆனாலும் நாளரு கனவும், பொழுதொரு டூயட்டுமாக கழிகிறது பொழுது. சின்ன பிரிவுக்கு பின் மீண்டும் பார்த்துக் கொள்ளும் இருவரும், அப்போதும் தங்கள் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் முரண்டு பிடிக்க, இடையில் நுழைகிறது இன்னொரு சம்பந்தம். அடித்துப்பிடித்துக் கொண்டு காதலை சொல்ல ஓடினால், போய்யா நீயும் உன் காதலும் என்கிறார் நாயகி. சீட் நுனிக்கு நம்மை இழுத்து வைத்து சுபம் போடுகிறார்கள்.

புதுமுகம் சந்தீப்புக்கு நடிப்பை விட டான்சும், ஃபைட்டும் நன்றாக கைகொடுக்கிறது. ரூபாவை சீண்டுகிற காட்சிகளில் எல்லாம் இளசுகளின் ஏகோபித்த நாயகனாகிவிடுகிறார். காதலியை சைட் அடிக்கிற ரௌடிகளிடமே, போய் ஐ லவ் யூ சொல்லுங்க பிரதர் என்று லைட்டாக எடுத்துக் கொள்ளும் அலட்சியம் பகீர். ரூபாவின் டைரியை வெடுக்கென்று பிடுங்கி படிக்க துடிக்கும் ஆர்வமும், அதை தொடரும் கோப கொந்தளிப்பும் பளிச்சென்ற மத்தாப்பூ தருணங்கள்.

நம்ப வீட்டு மஹாலட்சுமி போலிருக்கிறார் ரூபா. அந்த கண்களும், அதிகம் அலட்டிக்கொள்ளாத உதடுகளும், தனியாக ஸ்கோர் செய்கிற சாம்பியன்கள். முகத்தில் அவ்வப்போது வந்து உட்கார்ந்து கொள்கிற கோபம் கூட அழகின் முத்திரை. இவர் அடக்க ஒடுக்க மஹாலட்சுமி என்றால், அவிழ்த்து போடும் ஜோதிலட்சுமியாக சுபாபுன்ஜா. ஆடை கால், ஆள் முக்காலாக இருக்கிறார். அமெரிக்க ரிட்டன் என்பது கூடுதல் சுதந்திரம்.

சுபாபுன்ஜாவிடம் சந்தீப் நெருக்கம் காட்டும்போதெல்லாம் உள்ளுக்குள் வெடிக்கும் ரூபா, அவர்களை அதிகம் நெருங்க விடாமல் போடும் தந்திரங்கள் சுமார் ரகம்தான்.

அந்த பல் போன பாட்டி பலே கெட்டி. புதுமுகமாம். நம்பதான் முடியவில்லை. சார்லியிடம் என்னை உன் தங்கச்சியா நினைச்சுக்கோ என்று வெடிகுண்டை வீசுகிறாரே, கலீர் சிரிப்பு தியேட்டர் முழுக்க. இவர் திருட்டுத்தனமாக ஸ்வீட்டுகளை விழுங்கிவைக்க, வேறு விஷயத்துக்காக முறையிடும் சார்லியிடம், இரண்டு மாத்திரையை தின்னா சரியா போயிட போவுது என்று சமாளிப்பதெல்லாம் வெடிச்சிரிப்பு.

கார்த்திக்ராஜாவின் இசையில் பின்னணி இசை அற்புதம். சில பாடல்கள் அபாரம். குறிப்பாக, கல்கோனா உதட்டுக்காரி.... நெஞ்சில் வாழ்கிற பாடலே, கொஞ்சம் பாடிட வா இரண்டையும் சொல்லலாம்.

ஆரம்ப ரீல்களிலேயே சென்ட்டிமென்ட்டை திணித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

இந்த ஒரு பொண்ணு, ஒரு பையன், பல பொண்ணுகள், பல பையன்களின் மனசில் என்னென்னவோ பண்ண போவது மட்டும் நிஜம்.


தரவு - தமிழ்சினிமா.காம்

0 comments: