கழுத்துல டை, கையில பை, வாயில பொய் என்று திரியும் கம்ப்யூட்டர் ஆசாமி விக்ரமாதித்யா சபலிஸ்ட். இதனால் கால் டைவர்ட் ஆகிற மாதிரி வாழ்க்கையில் டைவர்ட் ஆகிறார். ஒரு பெண்ணை ‘அது’க்கென்றே வைத்துக் கொள்கிறார். ஒரு பெண்ணை அப்பாவுக்காக திருமணம் செய்கிறார். ஒரு பெண்ணை காதலிக்கிறார். இத்தனை திகிடுதத்தங்களிலும் மாட்டிக் கொள்ளாமல் அவர் தப்பித்துக் கொள்ள உதவுவது அவரது செல்போன். கடைசியில் உண்மை தெரிய வர, மனைவி விவாகரத்து கேட்கிறார். காதலி குட்பை சொல்கிறார். இன்னொருத்தி வெளிநாட்டுக்குப் பறக்கிறார்.
கடைசியில் மனைவிதான் பெரிதென்று அவரை தேடி ஓடுகிறார். இத்தனைக்கும் காரணமான செல்போனை நெருப்பில் வீசும் அவர், கடைசியில் தான் செய்த தவறுக்கு செல்போனை குற்றம் சொல்லக்கூடாது என்று மீண்டும் செல்போன் வாங்கி அதை முறையாக பயன்படுத்துங்கள் என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறார்.
செகனென்ட் செல் வாங்கி புது கவர் போடுவது மாதிரி வழக்கமான மன்மதலீலை கதையில் செல்போனின் பயன்பாட்டை அதிகமாக காட்டி புதுச்சாயம் பூசியிருக்கிறார்கள். ரகசிய சிநேகிதி அனுப்பும் எஸ்.எம்.எஸ் போன்று செல்போனின் தவறான செயல்பாட்டை சிரிப்பாகவும், சீரியசாகவும் காட்டியிருப்பது சுவாரஸ்யம்.
ராங்கால் பண்ணிவிட்டு தலையில் அடித்துக் கொள்வது போல் விக்ரமாதித்யா தப்பு செய்து விட்டு அசடு வழிகிறார். மெகா சைஸ் கலர் போன் ரேன்ஞ்சுக்கு பிரியங்கா கண்களை உருட்டியே மிரட்டுகிறார். கருணாஸ் காமெடி படத்துக்கு புல் சார்ஜ் பேட்டரி. இரவு நேர ப்ரீகால் மாதிரி காட்சிகள் நீண்டு கொண்டே போவது சிக்னல் வீக்.
பாடல்களும், பின்னணி இசையும் ரிஜக்டான ரிங்டோன்கள், டி.சங்கரின் ஒளிப்பதிவு பளிச். செல்போன் பேசி டிரைவிங் செய்தவர் விபத்துகுள்ளான மாதிரி செல்போனை வைத்து புதுமையாக எதையோ சொல்ல வந்து காதல், கள்ள காதல், திருந்தல் என்ற அதே தமிழ் சினிமா பள்ளத்தாக்கில் விழுந்திருக்கிறார் இயக்குனர் கே.பன்னீர் செல்வம்.
தரவு - தமிழ்முரசு
1 comments:
நல்ல விமர்சனம்! நன்றி! இது விமர்சனம் இல்ல...எச்சரிக்கை! எங்கள காப்பாற்றியதற்கு நன்றி!
Post a Comment