# 5 நட்சத்திர ஓட்டல் கிடையாது
# செல்போனில் பேசக்கூடாது
# கேரவன் இல்லை
# இரண்டு கட்டமாக சம்பளம்
# பி.ஆர்.ஓ., மேனேஜர்களுக்கு தடை
# செல்போனில் பேசக்கூடாது
# கேரவன் இல்லை
# இரண்டு கட்டமாக சம்பளம்
# பி.ஆர்.ஓ., மேனேஜர்களுக்கு தடை
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் இணைந்து, தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்காக கடந்த மாதம் 26ம் தேதி ஒரு கூட்டத்தை நடத்தின. அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்த ஒப்பனை, சிகையலங்கார, உடையலங்கார கலைஞர்கள் தவிர தனியாக யாரையும் நடிகர்களோ நடிகைகளோ அமர்த்திக் கொண்டால், அவர்களுக்கான சம்பளம், பேட்டா ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளே தர வேண்டும். வெளியூர் படப்பிடிப்பின்போது, நடிகர், நடிகைகளுடன் வரும் பணியாளருக்கு உணவு, இருப்பிடம், போக்குவரத்து வசதி ஆகியவற்றை மட்டும் தயாரிப்பு நிறுவனம் வழங்கும்.
2.நடிகர், நடிகையர் தாங்கள் ஒப்புக்கொள்ளும் வரிசையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும். ஒப்பந்த வரிசையில் முதலில் உள்ள தயாரிப்பாளர் எந்தக் காரணத்தினாலாவது படப்பிடிப்பு நடத்த முடியாவிட்டால் அடுத்து உள்ள தயாரிப்பாளருக்கு நடிகர், நடிகைகள் முன்னுரிமை தர வேண்டும். இதில் பிரச்னை ஏற்பட்டால், உயர்மட்ட குழு பேசி தீர்க்கும்.
3.நடிகர், நடிகைகள் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் படப்பிடிப்பு நீடிக்குமானால், அது பற்றி ஒரு நாளைக்கு முன்னதாக கலைஞர்களுக்கு தயாரிப்பாளர்கள் தகவல் தர வேண்டும். இரவு 2 மணிக்கு மேல் படப்பிடிப்பு நீடித்தால், மறுநாள் காலையிலேயே மீண்டும் படப்பிடிப்புக்கு வரும்படி நடிகர், நடிகைகளைத் தயாரிப்பாளர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது.
4.படப்பிடிப்பில் செல்போன் பயன்படுத்துவதால் பணி பாதிக்கப்படுகிறது. எனவே, படத் தயாரிப்பின்போது நடிகர், நடிகைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் செல்போனைப் பயன்படுத்தக் கூடாது.
5.வெளியூர் படப்பிடிப்பின்போது, நடிகர், நடிகைகள் தங்குவதற்கு மூன்று நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓட்டலில் மட்டுமே தங்கும் வசதி செய்யப்படும்.
6.உள்ளூர் படப்பிடிப்புக்கு சொந்த காரில் வரும் நடிகர், நடிகைகள், பெட்ரோல், டிரைவர் பேட்டா போன்றவற்றைக் கேட்கக் கூடாது. சொந்த வாகனத்தில் வராதவர்களுக்கு தயாரிப்பாளரே போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.
7.வெளிப்புற படப்பிடிப்புக்கு விமானத்தில் சென்றால் நாயகன், நாயகிக்கு மட்டுமே முதல் வகுப்பில் (பிசினஸ் கிளாஸ்) பயணம் ஏற்பாடு செய்யப்படும். தேவைப்படுமானால், நடிகைகளுக்கு மட்டும் அவரோடு வரும் ஒரு நபருக்கு முதல் வகுப்பு தரப்படும். மற்றவர்களுக்கு பொது வகுப்பு (எகானமி கிளாஸ்) மட்டும் தரப்படும்.
8.எந்த தொழில்நுட்பக் கலைஞரை பணியில் அமர்த்துவது என்பதை நாயகன், நாயகி முடிவு செய்யக்கூடாது. இயக்குனர், தயாரிப்பாளர்கள் மட்டுமே அதை முடிவு செய்வார்கள்.
9.வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ஒப்பனை, உடையலங்காரம், சிகை அலங்கார கலைஞர்கள் தவிர, கதாநாயகியுடன் மட்டும் ஒருவர் துணைக்கு வருவார். இது சக நடிகைகளுக்கும் பொருந்தும்.
10.நடிகர், நடிகைகளை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யும்போது, இருவரும் கண்டிப்பாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதில் கால்ஷீட் விவரம், ஊதியம், வழங்கப்படும் முறை போன்ற விவரங்கள் இடம்பெற வேண்டும். ஊதியத்தில் 70 சதவீதத்தை டப்பிங்குக்கு முன்னதாகவும் மீதி 30 சதவீதத்தை பட வெளியீட்டுக்கு முன்பாக அல்லது நடிகர், நடிகை தங்கள் பணி அனைத்தையும் முடித்து கொடுத்த 90 நாட்களுக்குள் முழுவதுமாக கொடுக்க வேண்டும். ரூ.5 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுபவருக்கு மட்டுமே இது பொருந்தும். மேலும், ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்தில் முன்பணம் வழங்கும்போது, ஊதியத்தில் 5 சதவீதத்தைப் பிடித்தம் செய்து, நடிகர் சங்கத்துக்கு தயாரிப்பாளர்கள் வழங்க வேண்டும்.
11.தங்களது படப் பணிகள் முழுவதும் முடிந்ததும் அதுபற்றி நடிகர் சங்கத்துக்கு நடிகர், நடிகைகள் எழுத்து மூலம் தகவல் தர வேண்டும். அதுபோல் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தயாரிப்பாளர்கள் தகவல் தர வேண்டும்.
12.நடிகர், நடிகைகளுடன் தயாரிப்புக்கு முன்பாக தயாரிப்பாளர் கட்டாயமாக ஒப்பந்தம் போட வேண்டும். அதன் பிறகே நடிகர், நடிகைகள் நடிக்க வேண்டும். ஒப்பந்தம் போடாதவர்கள் பற்றிய புகாரை இரு சங்கங்களும் ஏற்காது. மேலும், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள ஊதியத்துக்கு மட்டுமே பிரச்னை தீர்க்கப்படும்.
13.எந்தக் காரணம் கொண்டும், தயாரிப்பாளர் செலவில் கேரவன் வண்டி வைக்கக் கூடாது. அப்படி வைக்க விரும்பினால், அந்தந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் சொந்த செலவில் வைத்துக்கொள்ளலாம். வெளிப்புறப் படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர் செலவில் கேரவன் வண்டி வைக்க வேண்டும்.
14.நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் எடுக்கக் கூடாது. தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தயாரிப்பாளர் தயாரிக்கும் தமிழ் படங்களில் மட்டுமே நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒத்துழைப்பு தராத தயாரிப்பாளர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் இரு சங்கங்களும் ஒத்துழைப்பு தராது.
15.சம்பள பிரச்னை, கால்ஷீட் பிரச்னைகளை முறைப்படுத்த, தலா 9 உறுப்பினர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிவே இறுதியானது.
16.முன்பணம் கொடுத்தபின், சம்பந்தப்பட்ட கலைஞர்களை வைத்து தயாரிப்பாளர் படம் தயாரிக்காத நிலை ஏற்பட்டால், படப்பிடிப்பு ரத்து குறித்து ஒரு மாதத்துக்கு முன்னதாக நடிகர், நடிகைகளுக்குத் தெரிவித்து, பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
17.ஒருநாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டால்கூட, நடிகர், நடிகைகள் முன்பணத்தைத் திருப்பித் தர வேண்டியதில்லை. பாதியில் நின்று, நீண்ட நாட்களுக்கு பின்னர் தொடரப்படும் படத்துக்கு புதிய சம்பளம் பேசி, ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
18.நடிகர் சங்க துணை நடிகர்களை 50 சதவீதம் பயன்படுத்து வேண்டும்; அதற்கான ஏ.ஆர்.ஓ. நியமனம் படம் ஆரம்பிக்கும்போதே நடிகர் சங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு ஷெட்டியூல் படப்பிடிப்பு முடிந்தவுடன், அவர்கள் சம்பளத்தின் முழுத் தொகை நடிகர் சங்கத்துக்கு மொத்தமாகவோ, காசோலையாகவோ வழங்க வேண்டும். தமிழக எல்லைக்குள் நடக்கும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எந்த மொழி படப்பிடிப்பிலும் நடிகர் சங்கத்தின் மூலமாக துணை நடிகர்கள் 50 சதவீதம் பயன்படுத்த வேண்டும்.
19.படம் முடிந்து, முதல் பிரதி எடுக்கப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகும் படம் வெளியாகவில்லை என்றால், அப்படம் வெளிவரத் தடையாக உள்ள பிரச்னை, அதன் தன்மையை கூட்டுக்குழு ஆராயும். நியாயமான பிரச்னையாக இருந்தால், படம் வெளியாக உயர்மட்டக் குழு முழு ஒத்துழைப்பு தரும்.
20.நடிகர், நடிகைகள் கதை மற்றும் ஊதியம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தயாரிப்பாளர்களு டன் கலந்து பேசிக்கொள்ள வேண்டும். மேனேஜர்கள் மற்றும் பி.ஆர்.ஓ.க்கள் போன்றவர்களை அறவே தவிர்க்க வேண்டும்.
21.இருதரப்பிலும் ஏதேனும் பிரச்னை இருந்தால், அதை படம் வெளியாகும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பே இரு சங்கத்திலும் தெரிவிக்க வேண்டும். அந்தப் புகாரை மட்டுமே இருசங்கமும் விசாரணைக்கு ஏற்கும். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை உயர்மட்டக் குழு கூடிப் பேச வேண்டும்.
இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த தீர்மானங்கள் அனைத்தும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.
இவ்வாறு ராம.நாராயணன் கூறினார்.
இதற்கான ஒப்பந்தத்தில், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ளனர். பேட்டியின்போது துணை தலைவர்கள் அன்பாலயா பிரபாகரன், காஜாமைதீன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.எஸ்.சீனிவாசன், பொருளாளர் அழகன் தமிழ்மணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எடிட்டர் மோகன், கோவைதம்பி, சங்கிலிமுருகன், ஹேம்நாக் பாபு, மோகன்நடராஜன், பி.எல்.தேனப்பன், அமுதாதுரைராஜ், கே.பாலு, விஜயமுரளி, சேகர் மற்றும் எம்.பாஸ்கர், சவுந்தர் உடனிருந்தனர்.
tharavu - Dinakaran