தந்தை பெரியார் 129

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 129 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்.
இந்நாளில் உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும், மனிதநேயர்களுக்கும் புரட்சிகரமான பகுத்தறிவு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தந்தை பெரியார் மறைந்து 34 ஆண்டுகள் மறைந்தன என்றாலும், அவர் நினைக்கப்படாத, அவர் சிந்தனைகள் பேசப்படாத, சர்ச்சை செய்யப்படாத நாளோ, நாழிகையோ இல்லை என்றே சொல்லலாம்.

வெகுதூரம் செல்லவேண்டாம். ராமன் பாலம் பிரச்சினை, ராமாயணப் பிரச்சினை என்று இந்தியா முழுமையும் இன்று விமர்சிக்கப்படுகிறதே - இதில் அறிவார்ந்த பக்கம், உண்மையின் பக்கம், ஆய்வின் பக்கம் எழுந்து நிற்கும் அலைகளின் மையப் புள்ளி தந்தை பெரியார் அவர்களே!

ஒரு முக்கால் நூற்றாண்டுகளுக்குமுன் ராமனை, ராமாயணத் தைக் கையில் எடுத்துக்கொண்டு மக்கள் மன்றத்தில் தந்தை பெரியார் சர்ச்சையைக் கிளப்பியபோது, பரவலாக மக்கள் மதித்துக் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மாறாக புதிய வெளிச்சத்தை அவற்றின் மீது பாய்ச்சியபோது, படித்தவர்கள்கூட முற்போக்கு, இடதுசாரி எண்ணம் கொண்டவர்கள்கூட, அதன் வீரியத்தை, விவேகத்தைப் புரிந்துகொண்டார்கள் இல்லை.

இப்பிரச்சினையில் மக்களின் சிந்தனைகளை வளர்த்து, அடுத்தகட்டமாக, மக்களின் வெறுப்பை அவற்றின்மீது காட்டும் வகையில் ராமாயண எரிப்பு, ராமன் பட எரிப்பு என்கிற அளவுக்கு மேலால் வளர்த்துக்கொண்டு சென்றாரே!

இந்த வெறுப்பும், எதிர்ப்பும்தான் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் போதிய சிந்தனை வளத்தையும், மாந்த நேயத்தையும், சகோதரத்துவத்தையும், இணக்கமான சமூகச் சூழலையும் உருவாக்கிற்று என்று உறுதியாகவே கூறலாம்.

இந்தியாவின் பிற பகுதிகளில் அந்த நிலை எட்டப்படாததால், ஆங்கெல்லாம் அவலமும், அமைதியற்ற சூழலும், மதவெறித் தீயின் தீய ஆட்டமும், கோரத் தன்மையாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

தந்தை பெரியார் சிந்தனை வெளிச்சம் எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக மற்ற மற்ற பகுதிகளுக்குப் பரவுகிறதோ, அந்த அளவுக்குத்தான் அப்பகுதிகளும் தமிழ் மண்ணாகி, சமூக நல்லிணக்கம் பட்டொளி வீசி பறந்திடும் என்பது கல்லின்மீது எழுத்தாகும்.
பச்சைத் தமிழர் காமராசர் போன்றவர்களே இந்தக் கருத்தை வேறு சொற்களில் பலமுறை சொன்னதுண்டு. வட மாநிலங் களுக்குப் பெரியார் தேவைப்படுகிறார் என்று சொல்லவில்லையா?
இன்றைக்கு இந்திய அளவில் தேவைப்படும் சமூகநீதி - இட ஒதுக்கீடு, மகளிர் இட ஒதுக்கீடு - மதச்சார்பின்மை என்பனவற்றுக் கும் தந்தை பெரியார் அவர்களின் வலுவான சித்தாந்தங்கள் தேவைப்படுகின்றன.

இந்தப் பிரச்சினைகளால் சமூகம் அமைதியற்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அரசியல் மட்டத்திலும் குழப்பங்களும், கண்மூடித்தனமான சச்சரவுகளும் தலைதூக்கி நிற்கின்றன. மதவெறிக் கூட்டம் மாச்சரியங்களை ஏற்படுத்தி வருகின்றன.

அரசியல் தலைவர்களுக்கும் சரி, ஆட்சியாளர்களுக்கும் சரி, ஏன் உயர் அதிகாரம் படைத்த நீதிபதிகளுக்கும் சரி தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வெளிச்சம் மட்டுமே சரியான பாதையைக் காட்ட முடியும். அவர்கள் அத்தனைப் பேரும் பெரியாரியத்தை அறிந்திட முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், கல்விக் கூடங்கள், அலுவலக வளாகங்கள்; மக்கள் கூடும் பொது இடங்கள் அத்தனையிலும் தந்தை பெரியார் அவர்களின் பிரம்மாண்டமான சிலைகள் நிறுவப்படவேண்டும். மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார் அவர்களைப்பற்றி புரட்சிக்கவிஞர் பாடினாரே - அந்தக் கருத்தை உருவகப்படுத்தும் வகையில் அந்தச் சிலைகள் அமையவேண்டும். அதைப் பார்த்த அளவிலே அய்யாவின் சித்தாந்தங்கள் பீறிடுகின்ற வகையில் அவை வடிவமைக்கப்பட வேண்டும்.

தொடக்கப்பள்ளி முதல் முதுநிலை ஆய்வுப் பட்டப் படிப்புவுரை தந்தை பெரியாரியல் கட்டாயப் பாடமாக ஆக்கப்படவேண்டும்.

ஏன் எனில், அவர் மட்டுமேதான் வேறு எந்தப் பற்றுக்கும், ஆசாபாசத்திற்கும் பலியாகாமல் மனிதப் பற்றை மட்டுமே முன் னிறுத்தி, தாராள சிந்தனைக்குத் தன்னை முற்றிலுமாக ஒப் படைத்து, உயர் எண்ணங்கள் மலரும் சோலையாக மணம் வீசினார்.

அது அறியாமை நோய் தீர்க்கம் மாமருந்து; சமத்துவச் சீர் தூக்கும் துலாக்கோல், தன்னம்பிக்கைக்கு ஆக்கம் சேர்க்கும் ஆணி வேர்!

அதனைச் சிக்கெனச் சமூகம் பிடித்துக் கொண்டு உய்யுமாக!

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!

3 comments:

September 19, 2007 at 8:32 AM வே.மதிமாறன் said...

இனியவர்கு,

இது என்னுடைய வலைபதிவு முகவரி.
www.mathimaran.wordpress.com
சமயம் கிடைக்கும்போது பார்த்து கருத்து சொல்லவும்.
அன்புடன்
வே. மதிமாறன்.

September 19, 2007 at 12:13 PM ஜமாலன் said...

தந்தை பெரியரின் பணிகளை அருமையாக தொகுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

வலைப்பதிவும் அழுகுடன் மிளிர்கிறது.

September 19, 2007 at 12:56 PM Thamizhan said...

பெரியாரைப் பார்ப்பன எதிரியாகவும்,கடவுள் எதிர்ப்பாளராகவும் மட்டுமே காட்டி அவர் ஒரு தலை சிறந்த மனித நேயப் பண்பாளர் என்பதை மறைத்து வந்தனர்.
ஏசு,புத்தர் இவர்களெல்லாம் இறந்து பல ஆண்டுகள் கழித்தே அவர்கள் அறியப் பட்டனர்.
ஆனால் பெரியார் இருக்கும் போதே அவரது கொள்கைகள் பயனளிக்க ஆரம்பித்து விட்டன்.வெகு விரைவில் அவரது மனித நேயம் பரவி வருகிறது.
தங்கள் பங்கிற்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
periyar.org.in தளம் நன்றாக அமைந்துள்ளது.நூல்கள்,இணைய ஒலி நன்றாக வெளி வந்துள்ளது.