அம்முவாகிய நான்..........

கதாசிரியார்களின் கதையே பெரும் கதையாக இருக்கும் பல இடங்களில். அதே கதைதான் இங்கும். இரண்டு முறை விருதுகளை நழுவவிட்ட எழுத்தாளர் பார்த்திபன், இந்த முறையாவது அந்த விருதை பெற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்கிறார். முந்தானை நழுவுகிற இடத்திலிருந்து ஒரு கதையை தேர்ந்தெடுத்தால் என்ன என்கிறது மூளை. அதற்காக அவர் போகிற இடம் சிவப்பு விளக்கு பகுதி. அங்கே அம்முவை பார்த்து காதலாகி கசிந்துருக, அம்முவுக்கோ இவர் கஸ்டமரில் ஒருவர்.

டவலை கட்டிக் கொண்டு வரும் அம்முவிடம், போய் டிரஸ் பண்ணிட்டு வா என்கிற பார்த்திபனை வேடிக்கையாக பார்க்கிறார் அம்மு. உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லும் அவரை இன்னும் வேடிக்கையாக பார்க்கிறார். அம்மு மட்டுமா? படம் பார்க்கிற நாமும்தான். தன் வீட்டு பத்திரத்தையே கொடுத்து பத்திரமாக கூட்டி வருகிறார் அம்முவை. வீட்டுக்கு வருகிற அம்மு, கணவர்... குடும்பம் என்கிற உறவுகளின் அற்புதத்தை உணர்கிறார்.

இதற்குள் அம்முவாகிய நான் என்ற கதையும் வளர்கிறது. தேர்வுக்கமிட்டியில் கையெழுத்து போட்டு அங்கீகாரம் கொடுக்க வேண்டிய அந்தஸ்தில் இருக்கிற மகாதேவன், விருதுக்கு விலையாக அம்முவையே கேட்கிறார், அதுவும் பார்த்திபனுக்கு தெரியாமல் அம்முவிடமே.

தனக்கு வேறொரு உலகத்தை காட்டிய கணவரின் கனவை நிறைவேற்ற வேண்டிய அம்மு என்ன செய்தாள்? க்ளைமாக்ஸ்...

அம்முவாக நடித்திருக்கிறார் புதுமுகம் பாரதி. டைட்டிலுக்கு வேண்டுமானால் புதுமுகமாக இருக்கலாம். நடிப்பில் டிக்ஷனரியே போடுவார் போல... இன்னொரு தகுதி, இழைத்து வைத்த தேக்குமரம் போல் உடற்கட்டு. அதை வஞ்சகமில்லாமல் பந்தி வைக்கிறார் மெனக்கட்டு. எழுத்தாளனின் மனைவி என்றதும், போலீஸ் அதிகாரியே வணக்கம் வைப்பதை பார்த்து கலங்கும்போதும், உன்னை விட்டா நான் வேறெங்கே போவேன் என்ற பார்த்திபனை கட்டிக் கொண்டு குமுறும்போதும், முதல் படத்தோடு வீட்டுக்கு போகிற நடிகை இவர் இல்லை என்ற நம்பிக்கை வருகிறது.

புதுமைப்பித்தன் என்பதை மற்றொரு முறையும் நிரூபித்திருக்கிறார் பார்த்திபன். இமேஜ் பார்க்கிற ஹீரோக்கள் மத்தியில் விபச்சார விடுதியில் மனைவி தேடும் மகாபுருஷனாக நடிக்க தைரியம் வேண்டும்.

படத்தின் சில காட்சிகள் அள்ளி தெளித்த அழகான பனித்துளிகள். புதுக்கல்யாணம் செய்து கொண்ட தம்பதிகள் பார்த்திபனும், பாரதியும் அவர்களுக்கு அவர்களே மாற்றி மாற்றி ஆரத்தி எடுத்துக் கொள்வது அழகிலும் அழகு. சின்னஞ்சிறுமி என்ன நடக்கிறது என்பதே அறியாமல் என்னை ஏம்மா யாருமே ஆட்டத்தில் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க என்று ஆதங்கப்படுவது பரிதாபம்.

tharavu - tamilcinema.com

0 comments: