கலைஞரா புண்படுத்துகிறார்?

தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் இந்து மக்களின் மனதைப் புண்படுத்துகிறார், ராமனை இழிவாகப் பேசுகிறார் என்பது போன்ற ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.

செல்வி உமாபாரதி தலைமை வகிக்கும் பாரதீய ஜனசக்தி என்ற அமைப்பின் தமிழகத் தலைவராக இருக்கக்கூடிய ஒருவர் (யாரோ, ராம. தங்கராசாம்) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கையே தொடுத்துள்ளார்.

"முதல்வர் கருணாநிதி ராமர் பற்றி தவறாக விமர்சித்துப் பேசி வருகிறார் - அவரது பேச்சு பெரும்பாலான இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. அவரது பேச்சு சமுதாய அமைதியைக் கெடுப்பதாக உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 504, 505 ஆகிய பிரிவுகளின்கீழ் அவரைத் தண்டிக்கவேண்டும். முதல்வர் பதவியிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்று வழக்குக்கான மனுவில் கூறப்பட்டுள்ளது (`தினமணி, 19.9.2007).

வீதிமன்றங்களில் பேசப்பட்ட ராமன், ராமாயணம் என்பனவற்றின் யோக்கியதைகள் இனி நீதிமன்றங்களிலும் பதிவு செய்யப்படக் கூடிய வாய்ப்பு என்றே இதனைக் கருதலாம்.
ராமன் பிறப்பு, தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் என்கிற சமாச்சாரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அந்த ராமாயணம் திராவிடர்களை இழிவுபடுத்துகிறதே - குரங்குகள் என்று சொல்லுகிறதே - ராட்சதர்கள் என்று கேவலப்படுத்துகிறதே, பவுத்தர்களைத் திருடர்கள் - நாட்டை விட்டுத் துரத்தவேண்டும் என்று சொல்லுகிறதே - சூத்திரன் தவம் செய்தால் அவன் கழுத்தை வெட்டு என்று போதிக் கிறதே - வருணாசிரமத்தைக் கெட்டிப்படுத்துகிறதே, பெண்ணை அவமானப்படுத்துகிறதே - இதற்கெல்லாம் என்ன பதில்?

அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அவமானப் படுத்தலாம் - இழிவு செய்யலாம் - மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று அவர்கள் போற்றும் ராமன் சூத்திரன் என்பதற்காக சம்புகனை வெட்டிக் கொல்லலாம் - அவற்றைப்பற்றியெல்லாம் பேசக்கூடாதா? அடிபட்டவன் வலிக்கிறதே என்று கூடக் கூறக்கூடாதா?

ராமன் செய்கை குற்றமானது - தவறான நடவடிக்கை - மோசமான போதனை என்று பாதிக்கப்பட்ட நாங்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடாதா?

"நீதி தேவன் மயக்கம் என்னும் நாடகத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் "யார் இரக்கமற்றவர்கள்? என்று அடுக்கடுக்காக அம்பறாத் தூணியிலிருந்து புறப்படும் கணைகள்போல அலை அலையாக வினாக்கள் எழுப்பினாரே - இதுவரை எந்தக் கொம்பர்கள் பதில் அளித்தனர்?
தந்தை பெரியார் செய்ததைவிட - அதனைத் தாண்டி ராமாயண ஆராய்ச்சி செய்தவர்கள் உண்டா?
"இராமாயணப் பாத்திரங்கள் என்ற தந்தை பெரியார் அவர்களின் நூல் இதுவரை எத்தனை எத்தனைப் பதிப்புகள் வெளிவந்துள்ளன - எத்தனை இலட்சம் நூல்களும் மக்கள் மன்றத்தைச் சென்றடைந்தன?

ஆங்கிலத்திலும் (Ramayana A true treading) இந்தி யிலும் (சச்சி இராமாயணா) வெளிவந்துள்ளதே - ஒரே ஒரு வரி இதுவரை மறுக்கப்பட்டதுண்டா?

தந்தை பெரியார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (1974 டிசம்பர் 25) அன்னை மணியம்மையார் அவர்கள் "இராவண லீலா நடத்தி ராமன், சீதை, லட்சுமணன் வகை யறாக்களைக் கொளுத்தினார்களே - அந்த வழக்கில்கூட திராவிடர் கழகம் வெற்றி பெற்றதே - நினைவிருக்கிறதா?

மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு இப்போது உயர் நீதிமன்றத்திற்கு வருகிறது - வரவேற்கிறோம். ராமனை, ராமாயண வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றுவோம்!
ராமாயணத்தைப்பற்றி மீண்டும் புது வீச்சோடு மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய கிடைத்தற்கரிய வாய்ப்பாக இதனைக் கருதுவோம்!

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!

விடுதலை தலையங்கம்

1 comments:

September 20, 2007 at 10:38 AM Thamizhan said...

முக்கிய விடுதலைப் பதிவுகளைப் போடும் தங்கட்கு மிக்க நன்றி.

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப் பிள்ளை என்ற தமிழ்த்துறைத் தலைவர் பேரறிஞருக்கும்,அன்று இளைஞராக இருந்த சி.என்.அண்ணாதுரைக்கும் பேச்சுப் போட்டி நடந்தது.பெரிய ஆன்மிகவாதிதான் நடுவராக இருந்தார்.

அடுக்கடுக்கான வாதங்களை வைத்து ராமாயணம் எரிக்கப் பட வேண்டும் என்று பேசி வெற்றி பெற்ற அண்ணா பின்னாட்களில் அறிஞர் அண்ணா ஆனார்.(அறிஞர் பட்டம் கல்கி அவர்களால் ).இது "தீ பரவ்ட்டும்" என்ற நூலாக வெளியிடப் பட்டு பெரும் வரவேற்பவைப் பெற்ற நூலாகும்.

தற்போது கலைஞர் அவர்கள் பெரிய ராமவேடதாரி அத்வானி அவர்களைப் பேச அறைகூவல் விடுத்துள்ளார்.அவரோ வேறு எந்தக் கொம்பனோ வந்து பார்க்கட்டுமே.

உச்ச நீதி மன்றம்,உயர் நீதி மன்றம் என்று அனைத்து மன்றங்களிலும் வரட்டும்.அப்போதுதான் மக்களுக்குப் புரியும்.