'மருதமலை' - விமர்சனம்


தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்ட நாச்சியார்புரத்தில் 16 ஆண்டாக தேர்தல் நடத்தவிடாமல் தடுக்கிறார் ரவுடி லால். மீறி யாராவது மனு தாக்கல் செய்தால் அவர்களைக் கொல்கிறார். அந்த ஊர் போலீஸ் நிலையத்துக்கு கான்ஸ்டபிளாக வருகிறார் அர்ஜுன்.

இதற்கிடையில் தேர்தலை நடத்தியே தீருவேன் என்று உயர் அதிகாரி ரகுவரன் கூறுகிறார். திட்டமிட்டபடி தேர்தல் நடக்கிறது. அங்கு வரும் வாக்காளர்களை அடித்து நொறுக்குகிறார் லால். அதை அர்ஜுன் தந்தை நாசர் தட்டிக் கேட்கிறார். கோபம் அடைந்த லால், அவரையும் தாக்க, பொங்கி எழும் அர்ஜுன், லாலை நொறுக்கி சிறையில் தள்ளுகிறார்.

தன்னை அவமானப்படுத்தி சிறையில் தள்ளிய, அர்ஜுனை பழிவாங்க லால் போடும் திட்டம் என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.

வெறுமனே பழிவாங்கும் கதை என்ற அரைச்ச மாவை அரைக்காமல், தேர்தலையும் மையப்படுத்தி இருப்பது வலுவாக இருக்கிறது. ராணுவ அதிகாரி, போலீஸ் கமிஷனர் என உயர் அதிகாரி பொறுப்பிலேயே வந்த அர்ஜுன், முதன்முறையாக போலீஸ் கான்ஸ்டபிளாக! வடிவேலுடன் சேர்ந்து காமெடியிலும், லாலை எதிர்த்து ஆக்ஷனிலும் வெளுத்திருக்கிறார்.

பார்த்திபன்-வடிவேலுவின் வெற்றி ஜோடிபோல் அர்ஜுன்-வடிவேலு ஜோடியும் காமெடியில் பின்னி எடுக்கிறது. "உங்கள பாத்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு" என்று வடிவேலுவை அர்ஜுன் வார, "என்னது சிரிப்பு போலீசா? நான் என்கவுண்ட்டர் ஏகாம்பரம்" என்று நெஞ்சை நிமிர்த்தும் வடிவேலு விலா நோக வைக்கிறார்.

தன்னை அடித்து ரவுடிகள் பிரபலம் ஆனதை பெருமை பொங்க கூறும் வடிவேலு, "மகாநதி" சங்கரையும் பிரபல ரவுடியாக்குவதற்காக தன்னை மூக்கின் மீது தாக்க அனுமதிப்பதும், அங்கு வரும் அர்ஜுன் பேச்சுவாக்கில் வடிவேலுவின் மூக்கை உடைப்பதும் வெடித்து கிளப்புகிறது சிரிப்பை. மார்க்கெட்டில் வசூல் வேட்டைக்கு போகும் வடிவேலு பிச்சைக்காரனுடன் போட்டிபோடுவது, கைதியின் அம்மா சென்டிமென்ட்டை நம்பி அவரை கோட்டைவிட்டு அர்ஜுனிடம் வாங்கிக்கட்டிக்கொள்வது, ரெயில் தண்டவாளம் அருகே பிணத்தை காவல் காக்கும்போது வரும் பேயை கண்டு பீதியில் நடுங்குவது என காமெடி ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்.

முதல்பாதியில் வடிவேலுவுடன் விளையாட்டு பிள்ளையாக ஜோடி போடும் அர்ஜுன், தந்தை நாசரை லால் கொலை செய்தபிறகு அடிபட்ட வேங்கையாகி அழிப்பது வேகம்.

கறார் தேர்தல் அதிகாரி ரகுவரன் உறைக்கு ஏற்ற வாள். லாலின் மிரட்டலுக்கு பணியாமல் சவால்விட்டு தேர்தலை நடத்தும்போது பிரகாசிக்கிறார்.

மூன்று முறை அர்ஜுன் மீது விழுந்து கிஸ் கொடுப்பது, 2 முறை பாட்டுக்கு ஆட்டம்போடுவது தவிர நிலாவுக்கு அதிக வேலை இல்லை. ஒரு பாட்டுக்கு டப்பாங்குத்து குத்துகிறார் முமைத்கான்.

போஸ் வெங்கட், காதல் தண்டபாணி, சண்முகராஜன் உறுமல் வில்லன்கள். திடீரென்று வரும் அர்ஜுன் முறைப்பொண்ணு கிளைக் கதை தேவையற்ற ஆறாவது விரல். சண்டை காட்சிகளில் புதுவேகம் காட்டி இருக்கிறார் அர்ஜுன். டி.இமான் இசை இதம். ஆக்ஷனுக்கும், காமெடிக்கும் பாதி பாதி முக்கியத்துவம் தந்து ரசிகர்களை உட்கார வைக்கிறார் இயக்குனர் சுராஜ்.

தரவு - தினகரன்

0 comments: