
வேலை நிமித்தமாக தன் புது மனைவியுடன் கேரளாவுக்கு செல்லும் பிருத்விராஜுக்கு ரெயில் சிநேகிதனாக அறிமுகமாகிறார் நிதின் சத்யா. அவன், தன் மனைவியின் முதல் கணவன். குடிபழக்கத்தால் ஆண்மை இழந்தவன், ஒரு வகையான சைக்கோ என்பது அவருக்குத் தெரியாது. ஆனால் தன்னை ஆண்மையற்றவன் என்று அவமானப்படுத்தி விவாகரத்து பெற்ற தன் மனைவியின் கணவன்தான்தான் பிருத்வி என்பதை நிதின் தெரிந்து கொள்கிறார்.
கேரளாவில் கணவனும், மனைவியும் நெருக்கமாக இருக்கும் தருணங்களைப் பார்த்து பார்த்து நிதின் சத்யாவின் தாழ்வு மனப்பான்மை நெருப்பாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் கேஸ் வெடித்து பத்மபிரியா இறந்தது போல செட்டப் செய்துவிட்டு, அவரை கடத்தும் நிதின் பழைய பங்களாவில் அடைத்து வைத்து மன ரீதியான சித்ரவதை செய்கிறார். பிருத்வி பத்மபிரியாவை எப்படி கண்டு பிடிக்கிறார்? நிதின் முடிவு என்ன? என்பதை சொல்கிறது படம். நாயகியின் காதலுக்காக ஏங்கும் கேரக்டரை இந்த படத்திலும் தொடர்கிறார் பிருத்விராஜ், அவரின் அழகான முகமும், மலையாள வாசனை வீசும் தமிழும் ரசிக்க வைக்கிறது.
போனில் கெட்டவனாகவும், நேரில் நல்லவனாகவும் அவர் நடத்தும் காதல் நாடகம் ரவுசு. மனைவி இறக்கும் போதும் அவர் திரும்ப கிடைக்கும் போதும் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்து உருக உருக வசனம் பேசாமல் முக வாட்டத்திலேயே உணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பது பிருத்வி ஸ்பெஷல். கணவன் தாம்பத்தியத்துக்கு தகுதியில்லாதவன் என்பது தெரிந்தும் “எனக்கு அப்படி ஒரு குறையிருந்தா..?’’ என்று அவருடன் வாழத் தயாராவது... நிதினின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவர அதிர்ச்சியாவது... என அசத்துகிறார் பத்மபிரியா.
இருவரையும் தனி ஆளாக ஓவர்டேக் பண்ணுகிறார் நிதின் சத்யா. முகத்தில் பாலையும் நெஞ்சில் நஞ்சையும் வைத்துக் கொண்டு அவர் வரும்போதெல்லாம் சீட்டிலிருந்து எழுந்து போய் நாலு அறை விட வேண்டும்போல இருக்கிறது. பின்னணி இசையில் யுவன் தெரிகிறார். நெருங்கிய நண்பரின் தங்கை திருமணத்துக்கு பிருத்வி போகாதது, ஆண்மை பறிபோகும் அளவிற்கு குடிக்கிற நிதின் அழகாகவும், ஆரோக்யமாகவும் இருப்பது, ஒரே அறைக்குள் மாதக் கணக்கில் அடைபட்டுக்கிடக்கும் பத்மபிரியாவிடம் உடல் ரீதியாக எந்த மாற்றமும் ஏற்படாமல் இருப்பது, தன்னந்தனி ஆளாக சவுண்ட் புரூப் அறை கட்டுவது என்று ஆங்காங்கே லாஜிக் மிஸ்சிங் என்றாலும் ‘சத்தம் போடாதே’ வித்தியாசமான படம்.
2 comments:
ராம் கோபால் வர்மாவின் ரோட் என்ற இந்திப்படம் பார்த்து விட்டீர்களா?
படம் இன்னும் பார்க்கவில்லை. வஸந்தின் திறமை மேல் நம்பிக்கை இருந்தாலும் சமீபத்திய அவரது படங்கள் கொஞ்சம் சுமார் ரகம்தான். உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பார்க்க வேண்டும்.
வவ்வால் - road நல்லதொரு திரைப்படம். அதிலும் அந்த கிளைமேக்ஸில் அந்த்ராமாலி மனோஜ் பாஜ்பாயை கவிழ்க்கும் காட்சி மிக அருமை.
Post a Comment