மலைக்கோட்டை - விமர்சனம்

சண்டக்கோழியில் ஆரம்பித்த துரத்தல், இன்னும் முடிந்தபாடில்லை. ஒவ்வொரு முறையும் வெளியூருக்கு போகிற விஷாலுக்கு லக்கேஜ் மாதிரி கூடவே ஒட்டிக்கொண்டு வருகிறது பிரச்சனை. இந்த முறை பட்டுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு போகிற விஷாலுக்கு அந்த ஊரில் தேவராஜ் ரூபத்தில் வருகிறது சண்டை. திருச்சியையே ஆட்டி வைக்கிற தேவராஜின் தம்பியை மூக்கு வேறு, காது வேறாக பிய்த்துப்போடுகிறார் விஷால். பழிவாங்க அண்ணன் துடிக்க, முரட்டு புஜத்தை விஷால் உயர்த்த, கிடுகிடுத்து போகிறது திருச்சியும், நாம் படம் பார்த்துக் கொண்டிருக்கிற தியேட்டரும்! தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கெல்லாம் எனிமா கொடுத்து தொடர் வெற்றி அடைந்திருக்கிறார் விஷால்!

கண்டிஷன் பைலில் கையெழுத்து போட திருச்சிக்கு பஸ்ஸில் வரும் விஷால், மொட்டை மாடியில் காக்காய்க்கு சோறு வைக்கும் ப்ரியாமணியை பார்க்கிறார். கா... கா... என்று காகத்தை அழைத்து அவற்றையும் தன் சொந்தங்களில் ஒருவராக பார்க்கும் அவரின் “புளுகிராஸ்” மனசு விஷாலை கவர, காதல்! கூடவே மணிசர்மா ஆர்மோனியத்திற்கும் அரிப்பு வர, சுட சுட இரண்டு டூயட். விரட்டி விரட்டி வரும் விஷாலை தவிர்ப்பதற்காக யாரோ ஒரு ரவுடியை காட்டி அவனை காதலிப்பதாக சொல்கிறார் ப்ரியாமணி. போதாதா? காதல் வழிய வீட்டுக்கே வருகிறான் ரவுடி. முதலில் ஒதுங்கிக் கொள்ளும் விஷால், அதெல்லாம் ச்சும்மா என்று தெரிய வர, கனல் கண்ணனின் கைங்கர்யம் ஆரம்பமாகிறது. இடைவேளைக்கு முன்பு வரும் அந்த சண்டைக்காட்சி இரண்டாம் புருஸ்லீயாக புரமோஷன் கொடுக்கிறது விஷாலுக்கு. சண்டைக்காட்சியில் அவருடைய கடுமையான உழைப்புக்கு முறுக்கேறி நிற்கிற ரசிகர்களே சாட்சி. இன்டர்வெல் பிளாக்கில் டிரான்ஸ்பார்மரை வெடிக்க வைத்து, அதிலிருந்து விழும் ஒயரிலிருந்து பொறி பறக்க சிகரெட் பற்ற வைக்கிறார் விஷால். (உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ?)

முதன்முறையாக காமெடியையும் ஊறுகாயாக தொட்டுக் கொண்டிருக்கிறார் விஷால். ஃபுல் போதையில் கிளிக்கூண்டில் காக்காவை அடைத்துவந்து சித்தப்பா ஆசிஷ்வித்யாத்தியிடம் அசடு வழிவதும், ஊருக்கு போன் பண்ணி தன் நண்பர்கள் எல்லோரிடமும் காக்காவுக்கு சோறு வைங்கடா என்று உத்தரவிடுவதுமாக அமர்க்களம் பண்ணியிருக்கிறார். போதாதற்கு மயில்சாமி கூட்டணி வேறு. ரணகளமாகிறது தியேட்டர்.

இன்னொருபக்கம் ஊர்வசிவித்யார்த்தி பிளாஷ்பேக். அப்படி ஒரு முரட்டு வில்லனை இப்படி சிரிக்க சிரிக்க காட்டுவதற்கே ஒரு தைரியம் வேண்டும். தன் இயல்பான காமெடியை படம் நெடுகிலும் வழிய விட்டிருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன். நாய் சேகரின் முடிவையும், மாட்டு சேகரின் ஆரம்பத்தையும் நினைத்து நினைத்து சிரிக்கலாம்.

ப்ரியாமணிக்கு அவரின் நிஜக்குரலையே பயன்படுத்தியிருக்கலாம். டப்பிங் குரல் டம்மி குரலாகிவிட்டது. மாடர்ன் மணியை விட, தாவணி மணிதான் அழகு. அடுத்த படத்தில் திருத்திக் கொள்வாராக.

கன்னட இறக்குமதி தேவராஜின் வில்லத்தனம் பார்த்து பார்த்து சலித்ததுதான். டாடா சுமோக்களின் உதவியுடன் டயர் தேய பறப்பதும் அதே ரகம்.

மேன் ஆஃப் த மேட்ச் கனல் கண்ணனுக்குதான்.

ஏ..ஆத்தா ஆத்தோரமா வாரியா ரீமிக்ஸ் பாடலும், கந்தா கடம்பா என்ற குத்துப்பாட்டும் கொஞ்ச நாட்களுக்கு டீக்கடைகளின் பூபாளமாக ஒலிக்கும்.

உச்சி நரம்பை பற்றி இழுத்திருக்கிறது மலைக்கோட்டையின் வேகம்.

தரவு - தமிழ்சினிமா.காம்

0 comments: