மாடல் அழகியைத் துரத்தும் வி.ஐ.பி.யின் மகன்!
சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களின் "கனவுலகக் கன்னி'யாக உலாவருகிறாள் ஒரு மாடலிங் பெண். இளம் வயது; பார்ப்போரை அசத்தும் அழகை தன் உடம்பில் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கும் அப்பெண், சட்டப்படிப்பு வேறு படித்திருக்கிறாள்.
கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் கருப்பு கோட் போட்டு வாதாட விரும்பியவர், திடீரென்று தன் ரூட்டை மாற்றினார். மாடலிங் தொழில், அந்தப் பெண்ணை மயக்கி இழுத்தது. அதனால் அத்தொழிலைத் தேர்வு செய்து, சினிமா வட்டாரத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறாள்.
இந்த கவர்ச்சிப் புயல், ஹோட்டல்களுக்கு வரும் இளைஞர்களின் துருவ நட்சத்திரமாகக் காட்சி தருகிறாள். ஆகவே இந்தப் பெண்ணைக் குறி வைத்து ஒவ்வொரு ஸ்டார் ஹோட்டலுக்கும் இளைஞர்கள் படையெடுக்கிறார்கள். அதிகாரிகளின் பிள்ளைகள், அதிரடி அரசியல் வி.ஐ.பி.களின் அன்புப் பிள்ளைகள் எல்லாம் அதில் அடக்கம்.
இந்தப் பெண்ணின் கண் நம் மீது படாதா என்ற போட்டியில் ஸ்டார் ஹோட்டல்களில் பெரும் அடிதடியே அடிக்கடி நடக்கிறது. படித்த இளைஞர்களில் இருந்து, பணக்கார இளைஞர்கள் வரை ரூபாய் நோட்டுகளை வீசியெறியத் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால் அந்தப் பெண்ணோ தனக்கு என்று உள்ள இளைஞர் பட்டாளத்துடன் ஜாலியாக இருக்கிறாளே தவிர, மற்ற பிரமுகர்கள் வீட்டுப் பிள்ளைகளை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை.
இது அதிகாரம் உள்ள இளைஞர்களை அப்ùஸட் பண்ணியுள்ளது. ஸ்டார் ஹோட்டல் "டான்ஸ் பார்களில்' இந்தப் பெண்ணுக்காக குதிரை ரேஸில் நடக்கும் போட்டி போல் நடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னை, அண்ணாசாலை அருகில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு தன் "பாய் ஃப்ரெண்ட்ஸுடன்' டான்ஸ் பாருக்குச் செல்கிறாள் அந்த மாடலிங் கேர்ள். குடியும், குஷியுமாக மிதக்கும் இந்தப் பெண்ணை இன்னொரு மூலையில் நடனமாடிக் கொண்டிருந்த அரசியல் வி.ஐ.பி.யின் மகன் பார்த்துவிடுகிறார்.
அவர் இந்த இளம் பெண்ணை நெருங்க, அவளுடன் நின்ற "ஆண்கள் படை' அந்த இளைஞனைப் பார்த்து முறைக்கிறது. இதில் திடீரென இரு தரப்புக்கும் மோதல் வர, அரசியல் வி.ஐ.பி.யின் மகனுடன் வந்த படை பெண்ணை நோக்கியும், அவளுடன் வந்தவர்கள் நோக்கியும் வெறித்தனமாகப் பாய்ந்துள்ளது.
அதனால் ஸ்டார் ஹோட்டல் பார் பகுதியே கலக பூமியானது. இதில் அந்தப் பெண்ணின் பாய் ஃபிரண்ட் ஒருவனுக்குப் படுகாயம். ஆனால் நடந்தது என்ன? அந்த ஹோட்டல் இருக்கும் ஏரியாவுக்கு சம்பந்தம் இல்லாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் போடுகிறார் வி.ஐ.பி. மகன். அடுத்த சில நிமிடங்களில் "ஆறுமுகக் கடவுள்' போல் ஓடி வந்த அந்த இன்ஸ்பெக்டர், படுகாயமுற்ற இளைஞனை தரதரவென இழுத்துச் சென்று, ஹோட்டல் எல்லை போலீஸ் ஸ்டேஷனில் விட்டார்.
"இவன் மீது கேஸ் போட்டு உள்ளே தள்ளுங்கள்'' என்று ஸ்டிரிக்டாக உத்திரவு போட்டார் அந்த இன்ஸ்பெக்டர். அப்போது நள்ளிரவு மணி 1.30 இருக்குமாம். அடுத்த சில நிமிடங்களில் அடிபட்ட பையனுக்கு வக்காலத்து வாங்கி, வட சென்னையில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி ஃபோன் போட்டுள்ளார்.
"அதெல்லாம் அவனை அரெஸ்ட் பண்ணக்கூடாது. அவனை அடித்தும் விட்டு, ஏன் கேஸ் போடுகிறீர்கள்?'' என்று காட்டமாகப் பேசுகிறார். இந்தத் தகவல் அரசியல் வி.ஐ.பி.யின் மகனுக்குப் போகிறது. அதே நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனின் ஃபோனில் வந்த அந்த வி.ஐ.பி.யின் வாரிசு, "அந்தப் போலீஸ் அதிகாரி ஏன் மாடலிங் கேர்ளின் பாய் ஃப்ரெண்டுக்கு வக்காலத்து வாங்குகிறார்?
அதெல்லாம் அவனை விடக்கூடாது'' என்று கறாராகப் பேசுகிறார். ஸ்டேஷனில் இருந்தவர்களுக்கோ நள்ளிரவு முழுவதும் ஒரே டென்ஷன். இந்நிலையில் ஒரு வழியாகச் சமாதானம் செய்து, அடிபட்ட இளைஞனிடம் "நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன். இனி அரசியல் வி.ஐ.பி.யின் மகனுடன் எந்த ஹோட்டலிலும் மோதமாட்டேன்'' என்று மன்னிப்புக் கடிதம் வாங்க, விடியற்காலை 4 மணிக்கு வீட்டுக்கு அனுப்பப்பட்டான் அந்த இளைஞன்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சம்பவம் நடந்த ஹோட்டலுக்கு வருவதையே தவிர்த்துவிட்டாள் அந்த மாடலிங் கேர்ள்.ஆனாலும் இந்த வி.ஐ.பி. வாரிசின் "ஒற்றர் படை', அந்தப் பெண் எந்த ஹோட்டலுக்குப் போகிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள தேடிக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் சென்னை, ராமாபுரத்தில் உள்ள ஒரு பிரபல கிளப்பிற்கு தன் நண்பர்கள் 25 பேருடன் டின்னருக்குப் போகிறாள்.
இதற்காக 12 வெளிநாட்டு மது வகை பாட்டில்களை நந்தனத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றிலிருந்து வாங்கி எடுத்துச் செல்கிறாள். அனைவரும் போதையில் மிதக்கிறார்கள். தன்னுடன் வந்த 25 இளைஞர்களுடன் "கொண்டாட்டம்' நடத்திக் கொண்டிருந்த மாடலிங் கேர்ளை, அங்கேயே ஓரத்தில் இருந்து நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார் அரசியல் வி.ஐ.பி.யின் அந்தப் பிள்ளை.
"தண்ணி அடித்துக் கொண்டிருக்கும் இந்தப் பெண் எப்போது கூட்டத்தின் பிடியிலிருந்து ஒதுங்குவாள்; தூக்கிக் கொண்டு சென்றுவிடுவோம்' என்பதுதான் ப்ளான். ஆனால் க்ளைமாக்ஸ் எதிர்மறையாகிப் போனது.
"டின்னருக்கு கொண்டு வரப்பட்ட 12 வெளிநாட்டுப் பாட்டில்களில் ஆறு பாட்டிலைக் காணோம்' என்று திடீரென்று சத்தம் போட்டாள் அந்த மாடலிங் பெண். உடனே கிளப்பில் இருக்கும் பார் மானேஜர் ஓடி வந்து, ""இங்கு கொண்டு வந்த பாட்டில்களை உங்களுடன் வந்தவர்கள் குடித்துத் தீர்த்துவிட்டார்கள்.
எங்கள் ஊழியர்கள் யாரும் எடுக்கவில்லை'' என்று சொல்ல மேலும் எரிச்சலான அந்த மாடலிங் கேர்ள், ""எத்தனை "பெக்' எங்கள் பார்ட்டியில் வந்தவர்கள் குடித்தார்கள் என்று கணக்கு வைத்திருக்கிறேன். போதையில் இருக்கிறேன் என்று ஏமாற்றுகிறீர்களா? உங்கள் ஆட்கள்தான் ஆறு பாட்டில்களை எடுத்துவிட்டார்கள்.
திருப்பித் தரவில்லை என்றால் போலீஸுக்குப் போவேன்'' என ரவுஸ் பண்ணுகிறாள். ஓரமாகக் காத்திருந்த அரசியல் வி.ஐ.பி.யின் மகன் உதவிக்கு வந்தாராம். ""அந்தப் பெண் கேட்கிறது நியாயம்தாம்பா. ஆறு பாட்டிலைக் கொடுத்திடுங்க. இல்லைன்னா நானே போலீûஸ வரவழைத்து உங்களை எல்லாம் உள்ளே தள்ளிடுவேன்'' என்று எச்சரித்தாராம்.
ஆனால் அந்த பெண்ணோ, உதவுவது போல் நமக்குக் குறி வைக்கிறான் இந்தப் பையன் என்பதைப் புரிந்து கொண்டாள். நேராக பார் மானேஜரிடம் போனாள். ""இதோ பாருங்க மிஸ்டர். உங்களுக்கு இஷ்டம்னா பாட்டிலைக் கொடுங்க. யாரும் சிபாரிசு செய்யுறாங்கன்னு கொடுக்கத் தேவையில்லை'' என்று "நோஸ் கட்' கொடுத்துவிட்டு, அந்த இடத்தில் இருந்து தன் டின்னர் பார்ட்டிகளுடன் எஸ்கேப் ஆனாள்.
வைத்த குறி தப்பிவிட்டதே என்ற வேகம் அந்த அரசியல் வி.ஐ.பி.யின் மகனுக்கு ஆத்திரமாக மாறியது. எஸ்கேப் ஆகிப் போனவளை விரட்ட, அவளுடன் வந்தவர்கள் வி.ஐ.பி. மகனை முறைக்க, அதற்குள் அவசரப் போலீஸ் ஸ்பாட்டிற்கு வந்து இருதரப்பையும் சமாதானம் செய்து விலக்கிவிட்டதாம். அன்றிலிருந்து ஸ்டார் ஹோட்டல் பார்களுக்குப் போவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டாள் அந்த இளம் மங்கை!
நாட்கள் உருண்டோடின. நட்பு வட்டாரத்தின் தொல்லை அதிகமாகிக் கொண்டே போனது. வேறு வழியின்றி சென்ற செவ்வாய்க் கிழமை நந்தனம் ஏரியாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றாள் மாடலிங்! பாதுகாப்பாக இந்த முறை சில "பாக்ஸர்களை'யும் அழைத்து வந்திருந்தாளாம். தங்கள் ஒற்றர் படை மூலம் நோட்டம் விட்ட அரசியல் வி.ஐ.பி.யின் வாரிசு, நட்சத்திர ஹோட்டலுக்கு "மாடலிங் கேர்ள்' சென்றதை உறுதி செய்து கொண்டது.
சில நிமிடங்களில் வாரிசு தலைமையிலான படை பாரில் ஆஜரானது. கொஞ்ச நேரம் அமைதி காத்த அந்த டீம், பிறகு நேராகவே களமிறங்கியதாம். மாடலிங் கேர்ள் அருகில் சென்ற அந்த அரசியல் வி.ஐ.பி.யின் மகன், ""என் அந்தஸ்து உனக்குத் தெரியும். உன் நண்பர்கள் யாரும் என் போல் கிடையாது. ஆசைப்பட்டுதானே கேட்கிறேன். என்னோடு ஒரு நாள் உட்கார்ந்து தண்ணி அடிப்பதில் உனக்கு என்ன சங்கடம்?'' என்று பாச வலை விரித்தாராம். ஆனால் அவளோ, ""யாருடன் தண்ணி அடிப்பது என்பது என் சொந்த விஷயம்.
அதில் உன் அட்வைஸ் தேவையில்லை. நீ பெரிய இடத்துப் பிள்ளைன்னா நான் உன் மடியில் வந்து விழனுமா? அதுக்கு வேற ஆளப் பாரு'' என்று எகத்தாளமாக கடுப்படிக்க, கொதித்தார் அந்த வி.ஐ.பி.யின் பிள்ளை.
""ஏய்....'' என்று மாடலிங் பெண்ணின் கையைப் பிடித்து, கண்ட இடத்தில் முத்தம் கொடுக்க முயற்சிக்க, இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. உடனே அந்தப் பெண்ணுடன் வந்த "பாக்ஸர்களுடன்' பாரில் உள்ள "பவுன்சர்' ஒருவரும் சேர்ந்து கொண்டாராம். (பவுன்சர் என்றால் பாரில் குடித்துவிட்டு ரகளை செய்வோரை பாய்ந்து பிடித்து வெளியேற்றுபவர்).
இதை சற்றும் எதிர்பாராத அரசியல் விஐ.பி.யின் மகன், தென் சென்னையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளில் ஒருவருக்கு ஸ்டார் ஹோட்டலில் இருந்தவாறே நள்ளிரவில் ஃபோன் போட்டாராம். அவ்வளவுதான்! அடுத்த சில நிமிடங்களில் பெரும் போலீஸ் படையே அங்கு வந்திருக்கிறது
ஆனால் அதற்குள் அந்த மாடலிங் பெண்ணும், அவளுடன் வந்த நண்பர்களும் கிரேட் எஸ்கேப்! ஹோட்டலில் வேலை பார்த்த பவுன்சர் மட்டும் மாட்டிக் கொண்டார். இதற்கிடையில் "இந்த ஹோட்டலில் எந்தப் பாரும், டான்ஸýம் இனி நடக்கக்கூடாது' என்று அங்கிருந்தவாறே 144 தடையுத்திரவு போட்டாராம் வி.ஐ.பி. மகன்.
ஆடிப்போன ஹோட்டல் நிர்வாகம், சமரசத்திற்கு ரெடியானது. போலீஸ் பிடியில் சிக்கிய பவுன்சரையும், ஹோட்டல் மானேஜரையும் அரசியல் வி.ஐ.பி. மகனிடம் சமரசம் செய்து வைக்க அழைத்துச் சென்றது. விடிய விடியப் பேச்சுவார்த்தை நடத்தி, விடிவதற்கு முன்பு ஒரு சமரசத்திற்கு வந்தது இரு தரப்பும். அந்த இரு முனை சமரசத் திட்டம் இதுதான்:
முதல் நிபந்தனை, அந்த பவுன்சர் ஸ்டார் ஹோட்டல் டான்ஸ் பார் பக்கம் இனி மேல் டூட்டிக்கு வரக்கூடாது என்பது. தான் மோகத்தில் மூழ்கி நிற்கும் மாடலிங் கேர்ளுக்கு அந்த பவுன்சர் தார்மீக அடிப்படையில் ஹோட்டலில் சப்போர்ட் செய்கிறார் என்பதால்தான் அரசியல் வி.ஐ.பி.யின் வாரிசு அப்படியொரு கட்டளை பிறப்பித்தாராம்! இரண்டாவது நிபந்தனை என்ன தெரியுமா?
""என்னைத் தூக்கியெறிந்து பேசிவிட்டாள் அந்த மாடலிங் கேர்ள். அவள் என்னிடம் சமாதானமாகும் வரை, அவளை இந்த ஹோட்டல் டான்ஸ் பாரில் அனு மதிக்கக்கூடாது'' என்பதுதான் இரண்டாவது நிபந்தனை. ஸ்டார் ஹோட்டல் தாங்கள் டான்ஸ் பார் நடத்த வேண்டுமே என்ற கோணத்தில் அரசியல் வி.ஐ.பி.யின் பிள்ளை வைத்த அத்தனைக் கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொடுத்துவிட்டது
இப்படி இந்த ஹோட்டலுக்கு கண்டிஷன் போட்டாலும், குறிப்பிட்ட அந்த "ஷா'வான மாடலிங் கேர்ளை குறி வைத்து வேறு ஸ்டார் ஹோட்டல்களிலும் தேடிக் கொண்டிருக்கிறது அரசியல் வி.ஐ.பி. பிள்ளையின் படை.
"எங்கு அந்த மாடலிங் கேர்ள் சிக்கப் போகிறாளோ? எந்த ஸ்டார் ஹோட்டல் பாரில் ரகளை நடக்கப்போகிறதோ?' என்ற பதற்றத்தில் போலீஸ் மட்டுமல்ல, ஸ்டார் ஹோட்டல் அதிபர்களும் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
நம்மிடம் இது பற்றி கருத்துச் சொன்ன போலீஸ் அதிகாரி ஒருவர், ""அரசியல் வி.ஐ.பி.கள் சிலர், தங்களின் பிள்ளைகள் செய்யும் "ஸ்டார் ஹோட்டல்' கலாட்டாக்களுக்கு தடா போட வேண்டும்.
இல்லை என்றால் மற்ற மாநகரங்களில் நடந்ததுபோல் சென்னை மாநகர ஸ்டார் ஹோட்டல்கள் எதிலாவது "பெண் கற்பழித்துக் கொலை' என்ற செய்தி வரத்தான் போகிறது.
அதில் ஏதாவது ஓர் அரசியல்வாதியின் பிள்ளை மாட்டிக் கொள்ளத்தான் போகிறார்'' என்று கவலை தெரிவித்தார்.
-வர்மா
தரவு - தமிழன் எக்ஸ்ப்ரஸ்
0 comments:
Post a Comment