தமிழுக்கே இந்த கதியா..?

உண்ணாவிரதம், தர்ணா, போராட்டம்...
-தனுஷ், யுவன்சங்கர்ராஜா, ராம் ஆவேசம்!


கடந்த இரு தினங்களுக்கு முன்பே தமிழ்.எம்.ஏ. படத்தின் ஆடியோ கேசட்டுகள்,
சி.டி க்கள் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து நமது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். பொறுத்து பொறுத்து பார்த்த தமிழ் எம்.ஏ படத்தின் இயக்குனர் ராம், பிக் மியூசிக் அலுவலகத்தின் முன் தர்ணா செய்தார். இவருக்கு ஆதரவு தெரிவித்து இசைமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, நடிகர் தனுஷ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

கடந்த மாதம் வெளியானது தமிழ் எம்.ஏ படத்தின் ஆடியோ. ஆனால் அதை கடைகளில் விற்பனை செய்யும் உரிமையை பெற்ற பிக் மியூசிக் நிறுவனம் கடந்த ஒரு மாத காலமாகியும் அந்த வேலையை செய்வதில் மெத்தனம் காட்டி வந்தது. இன்னும் கடைகளுக்கு சி.டி வராத நிலையில்தான் மேற்படி போராட்டத்தை அறிவித்தார் இயக்குனர் ராம்.

காலை 9 மணிக்கே தன் உதவி இயக்குனர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார் ராம். சரியாக பத்து மணிக்கு வந்திறங்கினார்கள் யுவன், தனுஷ் இருவரும். இயக்குனரின் எட்டு வருட கனவு இந்த படம். தமிழ் நாட்டில் தமிழ் என்றே பெயர் வைக்கப்பட்ட படத்திற்கு இந்த சோதனையா என்று வெடித்தார் தனுஷ். சுமார் பத்து நிமிடம் மட்டுமே அங்கிருந்தவர் யுவனையும் அழைத்துக் கொண்டு உடனே புறப்பட்டார். படத்தின் நாயகன் ஜீவா, கும்பகோணத்தில் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. அழைப்பே இல்லாமல் கலந்து கொண்டார் மன்சூரலிகான். (தமிழ் ஒன்று சேர்த்தது?)

இதற்கிடையில் உண்ணாவிரதத்தையும், தர்ணாவையும் கைவிட சொல்லி பிக் மியூசிக்கின் சென்னை கிளை மேலாளர் முரளி கேட்டுக் கொண்டார். அவரிடம், கேசட் வெளியிட்டு ஒரு மாதமாகியும் கடைகளில் போடாததற்கு என்ன காரணம்? இந்த ஒரு மாதமாக எங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், இழப்பிற்கும் என்ன ஈடு செய்ய போகிறீர்கள்? இவற்றுக்கெல்லாம் மீடியாவின் முன் பதில் சொல்லுங்கள். உண்ணாவிரதத்தை கைவிட்டு விடுகிறேன் என்று இயக்குனர் ராம் அடம் பிடிக்க, பதட்டம் தொடர்ந்தது. அனுமதியில்லாமல் உண்ணாவிரதம் இருப்பதால் ராம் உள்ளிட்ட தமிழ் எம்.ஏ குழுவை கைது செய்ய தயாராக இருந்தது காவல்துறை.

விஷயத்தை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணனும், செயலாளர் சிவசக்தி பாண்டியனும், பேச்சு வார்த்தை நடத்த இயக்குனர் ராமை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அழைத்தார்கள். அதன்பின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு புறப்பட்டார் ராம். போகும் முன் பத்திரிகையாளர்களிடம், படத்தின் ஆடியோ கேசட் கடைக்கு வரும்வரை என் உண்ணாவிரதம் தொடரும். இங்கிருந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு செல்லும் நான், அங்கும் என் உண்ணாவிரதத்தை தொடர்வேன் என்றார் விடாப்பிடியாக. நண்பகல் ஒன்றரை மணி நிலவரப்படி பேச்சு வார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் வெல்லுமா?

பின்குறிப்பு- தமிழ் எம்.ஏ படத்தின் தலைப்பை 'கற்றது தமிழ்' என்று மாற்றியிருக்கிறார்கள்.


தரவு - தமிழ்சினிமா.காம்

0 comments: