சாய்பாபாவை சந்திக்க ஸ்டாலின் ஆந்திரா பயணம்

சென்னை கூவம் ஆற்றை சுத்தப்படுத்துதல், ஆற்றின் இரு புறமும் கான்கிரீட் சுற்றுச் சுவர் அமைக்கும் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர்கள் துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோர் இன்று ஆந்திரா செல்கின்றனர்.

முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா மற்றும் 84-வது பிறந்த நாள் விழாவையட்டி திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பாக பணியாற்றிய கழக முன்னோடிகள் 1612 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா, மதுரவாயல் அடுத்த வானகரத்தில் இன்று நடந்தது. இதில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய தி.மு.க முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 25 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது. 26-வது மாவட்டமாக திருவள்ளூருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொண்டர்களின் உழைப்பால்தான் தலைவர் கருணாநிதி 1957ல் குளித்தலையில் தொடங்கி இன்று சேப்பாக்கம் வரை தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்திய அரசியலில் தோல்வியை சந்திக்காத ஒரே தலைவர் கருணாநிதி தான்.

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பொதுப்பணித்துறை அமைச்சரும் நானும் முதல்வர் உத்தரவின் பேரில் ஆந்திர மாநிலம் சென்று புட்டபர்த்தி சாய்பாபாவை சந்திக்க உள்ளோம். சென்னை மாநகருக்கு கிருஷ்ணா நதி நீர் வழங்க அனைத்து முயற்சிகளையும், சாய்பாபா செய்து கொடுத்ததற்கு நன்றி சொல்ல செல்கிறோம். மேலும் சென்னை கூவம் ஆற்றை சுத்தப்படுத்தவும், ஆற்றின் இருபுறமும் கான்கிரீட் சுற்றுச் சுவர் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கித் தருகிறேன் என்று சாய்பாபா கூறியிருந்தார். அது குறித்து விவாதிப்பதற்காகவும் ஆந்திரா செல்கிறோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

விழாவில், திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளர் இ.ஏ.பி. சிவாஜி தலைமை தாங்கினார். அமைச்சர் கே.பி.பி.சாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செ.குப்புசாமி, ஆர்.கிருஷ்ணசாமி, வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பா. ரங்கநாதன், ஒன்றியச் செயலாளர் ஆலப்பாக்கம் சண்முகம், கும்மிடிபூண்டி கி.வேலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: