நாளைய பொழுதும் உன்னோடு் - விமர்சனம்


பால்ய காலத்து நட்பு, பருவ வயதில் காதலாகிறது. வழக்கம்போல் பெற்றோர்களின் எதிர்ப்பு. வலுக்கட்டாயமாக பிரிக்கப்படும் ஜோடிகள் மீண்டும் சந்திக்கும்போது என்னாகிறது? ஹைக்கூவின் கடைசி வரி மாதிரி அழுத்தமான க்ளைமாக்ஸ்!

சிறுவயது சந்தோஷங்களை மார்கழி மாதத்து கோலம் மாதிரி குளிர குளிர வரைந்திருக்கிறார் புதுமுக இயக்குனர் மூர்த்தி கண்ணன். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போதுதான் வழக்கமான சினிமா வந்து ஒட்டிக் கொள்கிறது.

கோட்டை பிள்ளைமார் குடும்பத்து பெண்ணை காதலிக்கும் சேட்டை பிள்ளையாக பிருத்வி. நங்கை...நங்கை.. என்று அவர் பிதற்றி திரிவது அழகு என்றால், தைரியமாக கார்த்திகாவின் வீட்டுக்கே போய் நெல் கொட்டி வைக்கும் பத்தாயத்தில் இறங்கி காதல் மொழி பேசுவது குறும்பு. கார்த்திகாவை பிரிந்தபின் சாப்பிட கூட மனமில்லாமல் கையை அறுத்துக் கொண்டு சுய வேதனை செய்து கொள்ளும் நேரங்களில் பரிதாபப்பட வைக்கிறார். கிராமத்து இளைஞர்களுக்கேயுரிய துடுக்கும் இயல்பாகவே வருகிறது அவருக்கு.

பயமோ, பதட்டமோ இல்லாமல் ப்ருத்வியை வீட்டுக்கே அழைத்து கருவாட்டு விருந்து வைக்கும் கார்த்திகா, அநேக காட்சிகளில் தன் அழகான சிரிப்பை பந்தி வைக்கிறார். இறுதி ரீல்களில் கார்த்திகாவின் சிரிப்பு காணாமல் போய்விட, அவரின் நிலைமை பகீர்! நள்ளிரவில் ப்ருத்வியின் வீட்டுக்கே போய் கதவில் தொங்கும் பூட்டை பார்த்துவிட்டு கதறி அழும் அவர், எனக்கு அவன் வேணும்மா என்று கதறி அழுவது பரிதாபம்.

நாமெல்லாம் கோட்டை பிள்ளைமார் பரம்பரை என்று கர்ஜித்தபடி கிராமத்து நீலாம்பரியாக வரும் கௌரி, பேச்சில்தான் சூறாவளி. முகம் என்னவோ, தென்றல்! ஒட்டவேயில்லை அந்த ஆக்ரோஷம்! எவ்வளவு நேரம்தான் கிராமத்தையே காட்டுவது? சென்னைக்கு பஸ் ஏறுகிறது திரைக்கதை. இங்கே டிஸ்கோதேவில் ஒரு ஆட்டம். ஸ்லீவ்லெஸ் பனியன்களுக்கு க்ளோஸ்-அப் என்று விநியோகஸ்தர்களின் பசிக்கும் ஸ்னாக்ஸ் கொடுக்கிறார் இயக்குனர்.

ரோஹிணி என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஊறுகாய் அளவுக்கு கவர்ச்சியும் காட்டுகிறார்.

மொத்த கதையையும் தன் வாயால் சொல்கிறார் வேலுபிரபாகரன். மிகப்பெரிய எழுத்தாளரான அவர் யார் என்பதை இறுதிகாட்சியில் சொல்லும் போதுதான் சபாஷ் என்று சத்தம் போட்டு பாராட்ட வைக்கிறார் இயக்குனர். அந்த நொடியில் சின்ன சிலிர்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. வி.ஏ.ஓ லிவிங்ஸ்டன், பத்திரிகை ஆசிரியர் வேணுஅரவிந்த், நகைச்சுவை கறிவேப்பிலை கோவை குணா என்று சின்ன சின்ன நடிகர்கள் கூட ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை பல காட்சிகளில் மௌனம் காத்து, மேலும் கனமாக்குகிறது! 'பேச பேராச...' என்ற பாடலில் பவதாரிணியின் குரல் மந்திரம் போல் கட்டி வைக்கிறது மனசை!


சற்றே வேகத்தை கூட்டியிருந்தால் நாளைய பொழுதிலும் பேசப்பட்டிருக்கும் படமாகியிருக்கும்!

-ஆர்.எஸ்.அந்தணன்



தரவு - தமிழ்சினிமா.காம்

0 comments: