பத்திரிகை கொடுப்பதுபோல் நடித்து கைவரிசை திருவாரூரில் பதற்றம்; கடைகள் அடைப்பு, திமுக மாவட்ட செயலாளர் குண்டு வீசி படுகொலை!
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வனை இன்று காலை ஒரு கும்பல் குண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. திருமண பத்திரிகை கொடுப்பதுபோல வந்த 4 பேர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராகவும், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராகவும் இருந்தவர் பூண்டி கலைச்செல்வன் (47). இவரது வீடு கொரடாச்சேரியில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு இவரது வீட்டுக்கு 4 பேர் வந்தனர். வீட்டில் இருந்தவர்கள் விசாரித்தபோது, திருமண பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக கூறினர்.
இதனால், அவர்களை கலைச்செல்வனை பார்க்க அனுமதித்தனர். அப்போது அந்த 4 பேரும் திடீரென பையில் வைத்திருந்த வெடிகுண்டை எடுத்து அங்கிருந்தவர்கள் மீது வீசினர். குண்டு சத்தம் கேட்டதும் கலைச்செல்வன் வீட்டிலிருந்து வெளியே வந்தார். அப்போது அந்த கும்பல் தயாராக வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் கலைச்செல்வன் சரிந்து விழுந்ததும் நான்கு பேரும் அங்கிருந்த பைக்கில் ஏறி தப்பிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கலைச்செல்வனை உடனடியாக திருவாரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.
கலைச்செல்வன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் திருவாரூர் மாவட்ட திமுகவினர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர், கொரடாச்சேரி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. கொரடாச்சேரியில் ஒரு பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. பல பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் திருவாரூரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள்தான் கலைச்செல்வனை கொலை செய்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டவர்கள், கடந்த ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மணல்மேடு சங்கர் கோஷ்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
திருச்சி சரக ஐ.ஜி. ராஜா, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆபாஷ்குமார் ஆகியோர் திருவாரூர் விரைந்துள்ளனர்.
தரவு- தமிழ்முரசு
0 comments:
Post a Comment