தீபாவளி படங்களின் விமர்சனம் சுடச்சுட...உங்களின் பார்வைக்கு
மலேசியாவில் துவங்கி, சென்னைக்கு நகர்ந்து, பிறகு அங்கிருந்து ஊட்டிக்கு நகர்ந்து, அதே வேகத்தில் மறுபடியும் சென்னைக்கு நகரும் படம்! (கதை நகரவே மாட்டேங்குது என்று யாரும் குறை சொல்ல முடியாதல்லவா?)
மலேசியாவில் சந்தியாவை பார்க்கும் ப்ருத்திவிராஜ், கண்டவுடன் காதல் கொள்கிறார். தன் குண்டு மூக்கின் மேல் கோபத்தை வரவழைத்துக் கொள்ளும் சந்தியாவும், முதலில் முரண்டு பிடித்து, பிறகு பிருத்திவிராஜ் மேல் காதல் கொள்ள, இந்தியாவுக்கு வருகிறார்கள் இருவரும். சென்னையில் போலீஸ் கமிஷனராக இருக்கும் சத்யராஜ், தன் மகள் சந்தியாவின் காதலனை சந்தேகத்தோடு பார்க்க, அம்மா ராதிகாவுக்கு வருங்கால மருமகன் மேல் நம்பிக்கை! விசில் வரும் நேரத்தில் குக்கர் வெடித்த கதையாக சத்யராஜும், ராதிகாவுமே பிரிய நேர்கிறது. வீட்டை விட்டு வெளியேறிய ராதிகாவை மறுபடியும் சத்யராஜுடன் இணைத்து வைக்க போராடுகிறார் பிருத்திவிராஜ். இதற்கிடையில் மாப்பிள்ளை நல்லவர்தான் என்று மாமனாரும் உணர, இறுதியில், சின்ன சூயிங்க இழுவலோடு சுபம்!
சைக்காலஜி படிப்பதற்காக மலேசியா வந்த சந்தியாவின் நடிப்பு தூள்! சைக்காலஜி பாடத்தை ரோட்டிலேயே மனப்பாடம் செய்து கொண்டே நடக்கிற அழகும், ஏய்...ஏய் என்று கண்களும், உதடுகளும், அவருக்கே ஸ்பெஷலான அந்த மூக்கும் துடிக்க, கோபப்படுவதும் அழகோ அழகு.
சென்னைக்கு வரும் பிருத்திவிராஜை போலீஸ் கமிஷனர் சத்யராஜ் வரவேற்பது அமர்க்களம்! வயர்லெசில் கைதியின் விசாரணை லைவ்வாக வந்து கொண்டேயிருக்க, அதையும் காதில் வாங்கிக் கொண்டே பிருத்திவி பதில் சொல்லி சமாளிக்கிறாரே...சூப்பர். பிருத்திவி அறையிலேயே சத்யராஜ் தங்கி அவரை அவஸ்தைப்படுத்துவது இன்னொரு பகீர் சிரிப்பு. அவரது ஓயாத குறட்டையையும், கட்டில் ஆக்ரமிப்பையும் சின்ன புன்னகையோடு சகித்துக் கொள்ளும் பிருத்திவிராஜின் பொறுமை அலாதி நகைச்சுவை. மெல்ல, மெல்ல, சத்யராஜ் பாணியிலேயே போய் அவரை கலவரப்படுத்துவதும் சுவாரஸ்யம்.
பல படங்களுக்கு பிறகு தனக்கேயுரிய ஸ்பெஷல் ஐட்டங்களுடன் ரகளை கட்டியிருக்கிறார் சத்யராஜ். மனைவி ராதிகாவிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க தயங்கி, பின்பு உடைந்து நொறுங்குகிறபோது சென்ட்டிமென்ட் சிகரமாகிறார். 'நீ இல்லாம என்னால சாகக்கூட தெரியாது' என்று அவர் கதறுகிற போது, சிவக்குமாரின் வசனங்களுக்கும் கிரீடம் முளைக்கிறது.
ஓடிப்போன அக்கா(வா?)வாக ஸ்ரீபிரியா. வனத்துறை அதிகாரியாம். அறிமுகமே அசத்தல். இந்த பொறியிடம் சத்யராஜ் என்ற சிங்கமே மாட்டிக் கொண்டு அல்லல் பட்டிருக்கிறது. பல வருடங்கள் கழித்து சந்தித்துக் கொள்கிற இந்த இரட்டையர்கள், அந்த நெகிழ்வான நிகழ்ச்சியையும் காமெடியாக்கிவிடுவதுதான் உறுத்தல்!
மலேசியா, ஊட்டி என்று அகோரப் பசியோடு மேய்ந்திருக்கிறது ப்ரிதாவின் கேமிரா! யுவன்சங்கர்ராஜா இசையில் பாடல்கள் பரவசம். குறிப்பாக மேகம் மேகம்... பாடல்! அன்று வந்ததும் அதே நிலா ரீமிக்சில் யுவனின் இசையும், சத்யராஜ்-ராதிகா ஜோடியும் ஆட்டமும் போட்டி போட்டிருக்கிறது.
கலகலப்பான கண்ணாமூச்சி ஆட்டம்தான்!
-ஆர்.எஸ்.அந்தணன்
தரவு - தமிழ்மணம்.காம்
0 comments:
Post a Comment