கடன் வசூலிக்க குண்டர்களை அனுப்பிய ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.55 லட்சம் அபராதம்

கடன் தவணையை வசூலிக்க குண்டர்களை அனுப்பிய ஐசிஐசிஐ வங்கிக்கு டெல்லி மாநில நுகர்வோர் நீதிமன்றம் ரூ.55 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனியார் வங்கிகளில் இந்தியாவின் 2-வது மிகப் பெரிய வங்கியாக திகழும் ஐசிஐசிஐக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது வங்கிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தபான் போஸ் என்பவர் ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று கார் வாங்கினார். தவணையை அவர் சரியாக கட்டவில்லை என வங்கி தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் போஸின் நண்பர் மகன் வினோத் போஸின் காரை ஓட்டிச் சென்ற போது ஐசிஐசிஐ வங்கியிலிருந்து வருவதாக கூறிய அடியாட்கள் சிலர் காரை வழிமறித்து வினோத்தை அடித்து உதைத்து காரை பிடுங்கிச் சென்றனர்.

இதை எதிர்த்து டெல்லி மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் போஸ் வழக்கு தொடர்ந்தார். டெல்லி நுகர்வோர் மன்றத்தின் தலைவரும் நீதிபதியுமான ஜேடி.கபூர் விசாரித்து, கடன் வசூலிக்க குண்டர்களை அனுப்பிய ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.55 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பது:

கடனை வசூலிக்க குண்டர்களை அனுப்பி வைக்கும் வங்கிகள் செயலை சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் எந்த ஒரு நாகரிக சமுதாயமும் ஏற்றுக் கொள்ளாது. இது மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயல். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வங்கிகள் மீது புகார்கள் வந்தால் அவற்றின் மீது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய காவல்நிலைய பொறுப்பாளர்களுக்கு டெல்லி மாநில போலீஸ் கமிஷனர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தரவு - தமிழ்முரசு

0 comments: