புலிகளின் செயற்கைகோள் மையம் தகர்ப்பு: 3 பேர் பலி

இலங்கையில் புலிகளின் ரகசிய இடத்தில் அமைக்கப்பட்டிருந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையத்தை இலங்கை போர் விமானங்கள் இன்று காலை குண்டுவீசி தகர்த்தன. இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாய மடைந்தனர்.

விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் புலிகள் தரப்புக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்படுகிறது. சில வாரங்களுக்கு முன் இலங்கை ராணுவம் நடத்திய விமான தாக்குதலில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட முக்கிய தலைவர்கள் பலர் பலியாயினர். இச்சம்பவம் புலிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. அதன்பின் இலங்கை ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. "புலிகளின் ரகசிய இடங்கள் எல்லாம் குண்டுபிடிக்கப்பட்டு விட்டது. முக்கியத் தலைவர்களை ஒவ்வொருவராக கொல்வோம்" என இலங்கை விமானப்படை தளபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில், "கிளிநொச்சி பகுதியில் உள்ள தர்மாபுரம் கிராமத்தில் ஒரு ரகசிய இடத்தில் அமைந்துள்ள புலிகளின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையத்தை இலங்கை போர் விமானங்கள் இன்று காலை குண்டு வீசி தகர்த்தன. இதனால் புலிகள் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது" என இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் பற்றி புலிகள் தரப்பில், "இலங்கை விமானப்படை 8 குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

0 comments: