நடிகர் கமலிடம் விசாரணை! உதவி இயக்குனருக்கு கொலை மிரட்டல்

சினிமா உதவி இயக்குனரின் வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த வழக்கு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், அவரது மேனேஜர்கள், சினிமா பி.ஆர்.ஓ. உள்ளிட்டவர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தனுஷ்", "அப்படியா" ஆகிய படங்களின் உதவி இயக்குனர் செந்தில்குமார் (32). சென்னை மேற்கு தாம்பரம் பூர்ண திலகம் குறுக்குத் தெருவில் வசிக்கிறார். தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி இவர் ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

"அர்த்தநாரி என்ற குளோனிங்" என்ற பெயரில் ஒரு கதை தயார் செய்து நடிகர் கமல்ஹாசனிடம் கூறினேன். கதை வித்தியாசமாக இருப்பதாக கூறி கமல்ஹாசனும் அவரது மேனேஜர் முரளியும் என்னை வரச்சொன்னார்கள். நண்பர் பாலாவுடன் சென்றேன். கமல்ஹாசன், மேனேஜர்கள் முரளி, கார்த்திக், பி.ஆர்.ஓ. நிகில்முருகன் ஆகியோரிடம் கதையை கூறினேன்.

சூப்பராக இருப்பதாக கூறி ரூ.501 அட்வான்ஸ் கொடுத்தனர். ரூ.25 லட்சம் தந்து, படத்தில் இணை இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு தருவதாக கூறினர். அதற்குப் பிறகு, அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. சில நாட்களுக்கு பிறகு, ஒரு படத்தில் 10 வேடங்களில் கமல் நடிக்கப்போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் வந்தது. நான் சொன்ன கதைதான் அது. மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களிடம் கேட்டதற்கு, தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பிவிட்டனர்.

இதையடுத்து, தசாவதாரம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பிறகு, தடை நீக்கப்பட்டது. ஐகோர்ட்டில் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. படத்துக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் மனு செய்தேன்.

இது கமல்ஹாசனுக்கு தெரியவந்ததும், அவரது மேனேஜர்கள் முரளி, கார்த்திக், பி.ஆர்.ஓ. நிகில்முருகன் மற்றும் 10 பேர் என் வீட்டுக்கு வந்தார்கள். "சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் வாங்கு. இல்லாவிட்டால் உன்னை கொலை செய்து விடுவோம். உன் குடும்பத்தினரை ஒழித்துக்கட்டி விடுவோம்" என்று மிரட்டினர். இதுகுறித்து மாநகர காவல் துறையிடம் புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

என் கதையை வாங்கி ஏமாற்றியதுடன், எனக்கும் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் செந்தில்குமார் கூறியிருந்தார்.

அவரது சார்பில் மனுவை வக்கீல் சாமி வெங்கடேசன் தாக்கல் செய்திருந்தார். வழக்கு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு வக்கீல் ஆறுமுகம் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் போலீசார் ஆலோசனை செய்தனர். இதையடுத்து கமல்ஹாசன், மேனேஜர்கள் முரளி, கார்த்திக், பி.ஆர்.ஓ. நிகில்முருகன் மற்றும் 7 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 451 (அத்துமீறி வீட்டில் நுழைதல்), 506/2 (கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்தார்.

கமல்ஹாசன் உள்பட அனைவர் மீதும் விரைவில் விசாரணை நடத்தப்படும். விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட உள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு கமல்ஹாசன் உள்பட அனைவருக்கும் விரைவில் உத்தரவிடப்பட உள்ளது என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோடம்பாக்க வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: