பொல்லாதவன் - விமர்சனம்


தினமும் ஐந்து லட்சம் பேருக்கு மேல் சென்னைக்கு வந்திறங்குகிறார்களாம். இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ, குலை நடுங்கவைக்கும் கொலைகார சென்னையை காட்டியிருக்கிறார்கள். 'மளுக் மளுக்'கென்று வெண்டைக்காயை முறிப்பதுபோல் முறித்துப் போடுகிறார்கள் மனிதர்களை. இந்த இரத்த பிசையலுக்கு நடுவில், காதல் என்ற நிலாச்சோறும் இருக்கிறது. நிம்மதி!

ஒரு பைக்கிற்கு ஆசைப்பட்ட தனுஷின் வாழ்க்கை, தாறுமாறாக ஓடி கடைசியில் முட்டு சந்தில் நிற்பதுதான் கதை. வாரத்திற்கு ஒருமுறை ஷோரூமிற்கு வந்து 'பல்சர்' விலையை கேட்டுவிட்டு போகும் தனுஷ், கடைசியில் அதை வாங்கியே விடுகிறார். ஒரு காதலியை போல நேசிக்கும் அவர், ஒரு சந்தர்பத்தில் அதை தொலைத்துவிட்டு நிற்க, திருடிய கோஷ்டி அதில் பிரவுன் சுகர் கடத்துகிறது. எப்படியாவது பைக்கை அடைந்துவிட தவிக்கும் தனுஷ், அந்த போராட்டத்தில் செய்யும் கொலைகள்தான் முடிவு.

தறுதலை பிள்ளைகளின் ஜெராக்ஸ் ஆகவே மாறியிருக்கிறார் தனுஷ். நண்பர்களுடன் குடித்துவிட்டு, நள்ளிரவில் வீடு திரும்பி, அப்பா கொடுக்கிற அறையையும் வாங்கிக் கொண்டு, சிரிப்பு சிரிப்பா வருதுப்பா என்கிறாரே... அது தந்தைகுலங்களுக்கு கொடுக்கிற எனிமா. தூறல் புயலானது மாதிரி, மெல்ல துவங்குகிற சண்டை, நான் திருப்பி அடிச்சா நல்லாயிருக்காது என்று முடிவது பயங்கரம். குடும்ப சென்டிமென்ட்டை விடுங்கள். அந்த காதல் எபிசோட் பிரமாதம். தயங்கி தயங்கி காதலை சொல்லப் போகும்போதெல்லாம் தனுஷ§க்கு நெகட்டிவ் சிக்னல் காட்டும் திவ்யா, திடீரென்று ஒருநாள் என்னை காலேஜில் விட்டுடறியா? என்று பைக்கில் ஏறிக் கொள்வது 'நல்ல பொண்ணுங்கடா' என்று வாய்விட்டு முணுமுணுக்க வைக்கிறது.

தனுஷின் அப்பாவாக மலையாள முரளி. தேறவே மாட்டான் என்று நினைக்கிற பிள்ளை, வேலைக்கு போக ஆரம்பித்ததும் ரகசியமாக சந்தோஷப்படுகிறாரே அங்கேயும், மருத்துவமனையில் அரிவாள் தூக்கப்போகும் தனுஷை, அருகே அழைத்து தனக்கு பிறகு குடும்பத்தை சுமக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறாரே அங்கேயும், தானொரு அவார்டு வின்னர் என்பதை நினைவுபடுத்துகிறார்.

கலகலப்புக்கு கருணாசும், சந்தானமும். முதன்முதலாக பைக் வாங்கிய நண்பன் ஆசையோடு அழைப்பதாக நினைத்துக் கொண்டு போகிற சந்தானம், அழைக்கப்பட்டது எதற்காக என்பது தெரிந்ததும் வெகுண்டு எழுவது வெடிச்சிரிப்பு. டெலிபோன் டைரக்டரியை, ஏதோ ஆங்கில நாவல் மாதிரி விரித்து வைத்துக் கொண்டு ஃபிகர் தேற்றும் கருணாசும் நகைக்க வைக்கிறார்.

டேனியல் பாலாஜி, பவன், கிஷோர்குமார் என்று பதைபதைக்க வைக்கிறார்கள் வில்லன்கள். அதிலும் சொந்த அண்ணனையே போட்டுத்தள்ளும் பாலாஜியின் முகுத்தில் குரூரம் கொப்பளிக்கிறது.

ஜி.வி.பிரகாஷின் இசையில் ரீமிக்ஸ் பாடலான 'எங்கேயும் எப்போதும்' எவர்கிரீன். மற்றவை பிரகாஷின் இமேஜை பல படிகள் கீழே தள்ளும். குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் சந்து பொந்துகளிலும், கொலை நடக்கும் அரையிருட்டுகளிலும் ஒளிப்பதிவாளரின் திறமை வெளிச்சம் போட்டிருக்கிறது.

அருவாள காட்டி ரவுடிகளை விரட்டலாம். ரசிகர்களை விரட்டலாமா?

-ஆர்.எஸ்.அந்தணன்



தரவு - தமிழ்மணம்.காம்

1 comments:

November 23, 2007 at 4:20 PM Unknown said...

Nice Review! I am stil thinking about watching the movie. Other reviews for the movie can be found here: Polladhavan Tamil Movie Review. The movie has a rating of 6.7/10 at the moment.