தீபாவளி திரைப்படங்களின் விமர்சனங்கள்...சுடச்சுட உங்களின் பார்வைக்கு
'பொளேர்' என்று கன்னத்தில் அறைகிற வசனங்கள், அங்கங்கே எட்டிப்பார்க்கும் 'பார்த்திப' கிறுக்குகள், காதலர்கள் இருவர் ஒதுங்குகிற நேரம் க்ளோஸ்-ஷாட்டில் 'ஆட்கள் வேலை செய்கிறார்கள்' என்ற போர்டு! இப்படி முதல் பாதி ஆக்ரா, முழுக்க முழுக்க வயாக்ரா! இரண்டாம் பாதி நிஜமாலுமே ஆக்ராவுக்கு பயணமாகி காதலில் கரைகிறது. தண்ணீருக்காக பல மைல் தூரம் பானை சுமக்கிற ஹீரோயினுக்கு, தண்ணீருக்கு நடுவிலேயே வீடு கட்டி வாழ வேண்டும் என்ற ஆசை! இதுபோல் படம் முழுக்க மனசை கொள்ளையடிப்பதற்கென்றே நிறைய விஷயங்கள்.
காதலை பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுதுவதற்காக அமெரிக்காவிலிருந்து ஆலப்புழாவுக்கு வருகிறார் எமிமோகன். அங்கே அப்பாவின் நண்பர் நாசர், நாற்பது வருடங்களாக ஒரு கடிதத்திற்காக காத்திருக்கிறார். அது...? பிளாஷ்பேக் விரிகிறது. வயலின் கலைஞரான கண்ணன் ஆக்ராவில் சந்திக்கிறார் பொம்மை விற்கும் அஞ்சலியை! பார்த்தவுடனே பற்றிக் கொள்கிறது காதல். காதலுக்கு எதிரியான அந்த பூமி, அக்கினியாய் மாறி ஆக்ஷன் எடுப்பதற்கு முன்பே கண்ணனை தமிழ்நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறாள் அஞ்சலி. வருகிறபோது தன் முகவரியிட்ட கடிதம் ஒன்றை கொடுக்கிறான் கண்ணன். எப்போது நான் வந்து அழைக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்போது இதை அனுப்பு. வருகிறேன். இதுதான் கடிதத்திற்கான பின்னணி. நாற்பது வருடங்கள் கழித்து கடிதம் வர, மகிழ்ச்சியோடு ஆக்ரா செல்லும் காதலனுக்கு அங்கு கிடைத்தது என்ன? க்ளைமாக்ஸ்!
நாசரின் பார்வையில் பார்க்கிற எல்லாமே பிளாக் அண் ஒயிட்டாக தெரிவதையும், அதை வசனங்களால் கூட குறிப்பிடாமல், கடைசியில் விளக்குவதும் இயக்குனரின் சாமர்த்தியம். ஆபரேஷனுக்கு பிறகு கண்களை அவிழ்த்து, இமைகளை படபடத்து நீட்டி முழக்காமல், நாசரின் கண்ணுக்கு தபால்காரரையே கலர்புல்லாக காட்டி காட்சியை சுருக்கியிருக்கிறார் எடிட்டர். பலே! புதுமுகம் அஞ்சலியும், விகாஷ§ம் ஒன்றி நடித்திருக்கிறார்கள். ஆங்கில படமே தோற்றுப்போகிற அளவுக்கு லிப் டு லிப் காட்சிகளை அள்ளி வழங்கியிருக்கிறார்கள்.
பீச்சில் சுண்டல் விற்கிற பையன், 'பேசாம சுண்டல் விக்கறதுக்கு பதிலா நிரோத் வித்திருக்கலாம் சார்' என்று போகிற போக்கில் காதல் பற்றி, கமெண்ட் அடிக்கிற போது பகீர் என்கிறது. அடிக்கடி காதல் பற்றி விவாதித்துக் கொண்டேயிருக்கிறார்கள். இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால், காதல்ங்கிறது... என்று ஆரம்பித்து குட்டியாக லெக்சர் கொடுப்பதுதான் போர்ர்ர்ர்! போதும் போதாதற்கு காயத்ரி என்ற பெண்ணை உருட்டி விளையாடியிருக்கிறார்கள். 'பிட்' படமோ என்ற அச்சமே வந்துவிடுகிறது.
டி.ராஜேந்தர் போல் உருவத்தோற்றமுள்ள அந்த புதுமுகம் கவனத்தை ஈர்க்கிறார்.
ஆக்ராவின் அழகையும், அவலத்தையும் ஒரேநேரத்தில் உள்வாங்கியிருக்கிறது பி.செல்வகுமாரின் கேமிரா. மதுரா, சிரபுஞ்சி, ஆலப்புழா என்று பசுமையை பந்தி வைத்திருக்கிற கேமிராமேனுக்கு முதல் சபாஷ்! நான் மட்டும் சளைத்தவனா என்கிறார் புதுமுக இசையமைப்பாளர் சி.எஸ்.பாலு. பின்னணி இசை மனசை அள்ளிக் கொண்டு போகிறது.
விருந்தா? விஷமா? சின்ன குழப்பத்தோடுதான் வெளியேற வேண்டியிருக்கிறது!
-ஆர்.எஸ்.அந்தணன்
தரவு - தமிழ்சினிமா.காம்
0 comments:
Post a Comment