தம்பி தமிழ்ச்செல்வா: பாரதிராஜா கண்ணீர்


விடுதலைப்புலியின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு டைரக்டர் பாரதிராஜா கண்ணீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

ஒரு விடிவெள்ளியை கொன்று புலர்ந்த இந்த வெள்ளி விடியாமலே இருந்தி ருக்கலாம்.

ஒரு அட்சய பாத்திரத்தை பிச்சைக்காரர்கள் தின்று தீர்த்த இந்த நாள் விழிக்காமலே இருந்திருக்கலாம்.

மரணத்தை கண்டு அஞ்சியதில்லை தம்பிகள்!

அதுதான் அவர்களுக்கு முகவரி.

வலிகளும் அவர்களுக்கு புதிதல்ல!

அவர்கள் ரணங்கள் சாதாரணம்!!

தழும்புகளை நெஞ்சில் சுமந்த வீர மறவர்கள் அவர்கள்.

என்றாலும் அவர்கள் கண்ணீரில் நனையும் போது இங்கே கரிக்கிறது.

அங்கே அவர்கள் காயப்படும் போது இங்கே குருதி கொதிக்கிறது.

வெடி அல்ல, இடி

வான் வழியே விழுந்தது வெடியல்ல!

எங்கள் நெஞ்சில் விழுந்த இடி!!

தம்பி தமிழ்ச்செல்வா! நீ மாபெரும் இயக்கத்தின் அரசியல் வழிகாட்டி மட்டுமல்ல.

தம்பி பிரபாகரனைக் காண வீரமண்ணிற்கு எமையழைத்துச் சென்று விருந்தோம்பி உபசரித்து மறத் தமிழ் மக்களின் மற்றோர் உலகை எனக்கு காட்டியவனும் நீதான்.

அதனால்தான் அன்றே என் அரசியல் காவியத்திற்கு உன் பெயரிட்டேனோ?

ஈழத்திற்கான அமைதிப் பேச்சு வார்த்தையை, சமாதானப்பாதை நோக்கிய பய ணத்தை உலகெங்கிலுமுள்ள அரசியல் அரங்கங்களில் ஓங்கி ஒலிக்கச் செய்த தம்பியே!

உமது இழப்பு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலக உருண்டையில் மூலை முடுக்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்தமிழர்கள் எல்லோருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் அந்தோ.

தங்கத்தை இழந்தோம் அன்று சிங்கத்தை இழந்தோம்

இன்று தங்கத்தை இழந்து விட்டோம்!!

அஹிம்சை வழியில் அறத்தை கையிலேந்திய திலீபனை கொன்ற கைகள் தான் இன்று உன்னையும் தின்றது.

திலீபன் இறந்தபோது அவன் தாய் கூறினாள்.

"திலீபனை புதைக்க வில்லை. விதைத்திருக்கிறோம்''

தம்பி தமிழ்ச்செல்வா!

"உன்னை எரிக்கவில்லை...

ஏற்றியிருக்கிறோம்''

இவ்வாறு டைரக்டர் பாரதிராஜா கூறியுள்ளார்.

தரவு - தமிழ்சினிமா.காம்

2 comments:

November 4, 2007 at 2:21 AM வாக்காளன் said...

பாரதிராஜா வை எதிர்த்து ஜெ அறிக்கை சீக்கிரம் வரும்

November 4, 2007 at 3:05 AM கொண்டோடி said...

//அஹிம்சை வழியில் அறத்தை கையிலேந்திய திலீபனை கொன்ற கைகள் தான் இன்று உன்னையும் தின்றது.//

தமிழ்ச்செல்வனின் கொலையில் இந்தியாவின் பங்களிப்பு உள்ளதெனக் கண்டுபிடித்துவிட்டாரா பாரதிராஜா?
இந்தியத் தேசியவாதிகள் இன்னும் வாய்மூடி இருப்பதன் மர்மம் விளங்கவில்லை.