கரூர் கட்டளையில் இருந்து குண்டாறு வரை ரூ.1,000 கோடியில் முதல் கட்டப் பணி
வறட்சி பாதித்த மாவட்டங்களை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய அளவில் நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது பற்றி ஆய்வு செய்ய கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக தென்னிந்தியாவில் ஓடும் நதிகளையாவது இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யோசனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாநிலத்தில் ஓடும் நதிகளை இணைத்து வறட்சி பாதித்த பகுதிகளை மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்படும் பகுதிகளிலிருந்து உபரி தண்ணீரை, வறட்சி பாதித்த பகுதிகளுக்கு திருப்பிவிடுவது குறித்து மாநில பொதுப்பணித் துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
முதல் கட்டமாக காவிரியையும் வைகையையும் இணைப்பது பற்றி ஆய்வு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
காவிரி படுகை பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவ தோடு, வறட்சி பகுதிகளான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமனாதபுரம், விருதுநகர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கவும் முடியும் என்கின்றனர் பொதுப்பணித் துறை பொறியாளர்கள்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கட்டளையில் காவிரி ஆற்றின் குறுக்கே மதகு அணை கட்டப்பட்டுள்ளது. இதை வெள்ள நீரை தேக்கி வைக்கும் அணையாகவும், தண்ணீர் மேலாண்மையை சிறப்பாக நிர்வகிக்கும் இடமாகவும் மாற்றப்படும்.
பின்னர், அங்கிருந்து குண்டாறு வரை வாய்க்கால் வெட்டப்படும். இந்த வாய்க்கால், அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, வைகை, ஆகிய ஆறுகளையும் இணைக்கும். இந்த கால்வாயின் மொத்தம் நீளம் 255 கி.மீ.
கடந்த 1975ம் ஆண்டு முதல் மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது பற்றிய கணக்கெடுத்தில் மேட்டூர் அணைக்கு 15 ஆண்டுகளில் 5 முதல் 81 நாட்கள் கூடுதல் தண்ணீர் வந்துள்ளது. மேலும் காவரி பாசன பகுதிகளில் அதிகளவில் மழை பெய்யும் போதும், கட்டளையில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, கால்வாய்க்கு திருப்பி விடப்படும்.
காவிரி வெள்ள நீரை மட்டுமின்றி, அரியாறு, கோரையாறு ஆகியவற்றில் மழை காலங்களில் ஓடும் வெள்ள நீரையும் இந்த கால்வாய் மூலம் திருப்பிவிடப்படும்.
இந்த இணைப்பு மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் நல்ல பலனையடையும்.
இந்த திட்டத்துக்கு மொத்தம் 3 ஆயிரத்து 684 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதனால் 2 ஆயிரத்து 228 ஹெக்டேர் பட்டா நிலமாகவும், ஆயிரத்து 416 ஹெக்டேர் புறம்போக்கு நிலமாகவும் மீதி வனத் துறைக்கு சொந்தமான நிலமாகவும் உள்ளது.
இதற்கான ஆய்வு பணி இரண்டு கட்டமாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தடுப்பு அணை மற்றும் கால்வாய் கட்டுவது சம்பந்தமான பணிகள், மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு செய்யப்படும்.
இப்போது நடந்து வரும் இந்தப் பணி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடியும், அடுத்த கட்ட பணியில், வாய்க்காலை நீட்டிப்பது பற்றி ஆய்வு செய்யப்படும்.
முதல் கட்ட பணிக்கே ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இந்த தகவல்கள் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 comments:
Post a Comment