வங்கி கடன் பாக்கி வசூல் செய்ய குண்டர்களுக்கு தடை! ரிசர்வ் வங்கி அடுக்கடுக்கான உத்தரவு
வங்கிகள் கடன் பாக்கி வசூல் செய்ய குண்டர்களை அனுப்பும் நடைமுறைக்கு ரிசர்வ் வங்கி முடிவு கட்டியுள்ளது.
இது தொடர்பாக அடுக்கடுக்கான பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதை பின்பற்றாவிடில் சம்பந்தப்பட்ட வங்கியின் செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் செயல்பாடு அதிகரித்துள்ளது. தனி நபர் கடன், வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்ட பல வகை கடன்கள் அளிக்கப்படுகின்றன. கிரெடிட் கார்டுகள் பயன்பாடும் அதிகரித்துள்ளது. கிரெடிட் கார்டுகள் மூலம் பொருட்களை வாங்கி, பின்னர் அத்தொகையை வங்கிகளுக்கு செலுத்தும் நடைமுறையும் செயல்பாட்டில் உள்ளது. கடன் மற்றும் கிரெடிட் கார்டுகளை பெறும் நடைமுறைகளும் எளிதாகப்பட்டுள்ளன. இதன் காரணமாக வங்கிகளில் கடன் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், கடன் தொகையை திரும்பி செலுத்துவதில் சிக்கல் எழும் போது பிரச்னை அதிகரிக்கிறது.பெரிய அளவிலான தனியார் வங்கிகள் கடன் வசூல் செய்வதில் புதுவிதமான நடைமுறையை அவர்கள் பின்பற்றுகின்றனர். `ரெக்கவரி ஏஜென்ட்' என்ற பெயரில் குண்டர்களை பணியமர்த்தி கடன் தொகையை வசூல் செய்கின்றனர். இந்த கடன் வசூல் ஏஜென்ட்கள் வங்கி வாடிக்கையாளர்களிடம் முரட்டுதனமாக நடந்து கொள்கின்றனர். தினமும் பல முறை போனில் அடாவடியாக பேசுவது, ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினரை மிரட்டுவது போன்ற செயல்கள் நடக்கின்றன. இதனால் கடன் பெற்ற சிலர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை என்ற முடிவுக்கு சென்று விடுகின்றனர். இது போன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வங்கிகள் கடன் வசூலுக்கு குண்டர்களை பயன்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் சென்றதோடு, இப்பிரச்னை குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தாக்கலானது. அதிரடி குண்டர்கள் மூலம் வசூலிப்பதை சுப்ரீம் கோர்ட் கடுமையாக தன் தீர்ப்பில் சாடியுள்ளது. அந்த அடிப்படையில் ரிசர்வ் வங்கி தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளது. கடன் தொகையை வசூலிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுகுறிப்புகள் என்ற பெயரில் அடுத்தடுத்து பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகள் வருமாறு:
வங்கிகளால் நியமிக்கப்படும் கடன் வசூல் ஏஜென்ட்கள், வாடிக்கையாளர்களை வார்த்தைகள் அல்லது செயல் மூலம் மிரட்டுவதோ, கொடுமைப்படுத்துவதோ கூடாது.
ஏஜென்ட்கள் வசூல் தொகையை நிர்ணயித்தும், அவர்களுக்கு வாய்மொழி உத்தரவு மூலம் கெடுபிடித்திட்டங்களை அமல்படுத்த வங்கிகள் அனுமதிக்கின்றன. இதன் காரணமாக, ஏஜென்ட்கள் மிரட்டல் முறையிலும், கேள்விக்குள்ளாகும் நடைமுறைகளையும் பின்பற்றுகின்றனர். இந்த நடைமுறையை இனி பின்பற்றகூடாது.
கடன் தொகையை வாடிக்கையாளர் திருப்பி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டால், கடன் வசூல் ஏஜென்ட்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்ற தகவலையும், அந்த ஏஜென்ட்கள் குறித்த முழு விவரங்களையும் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கடன் வழங்கும் போது தெரிவிக்கப்பட்ட போன் எண்களில் இருந்து தான் வாடிக்கையாளர்களுடன் ஏஜென்ட்கள் பேச வேண்டும். இரவு நேரங்களில் மிரட்டல் கூடாது. மற்ற எண்கள் மூலம் மிரட்டும் முறை கூடாது. அப்படிப் பணியாற்றும் ஏஜன்டுகளுக்கு 100 மணிநேர முறையான பயிற்சி தேவை.
கடன் தரும் போது நிலுவை வந்தால் ஈடான சொத்து பறிமுதல் செய்யப்படும் என்ற ஷரத்து தெளிவாக குறிப்பிட வேண்டும். கடனை திருப்பி செலுத்தாத வாடிக்கையாளரிடம் அதுகுறித்து முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதே போல, ஏலம் விடும் போது முன்னறிவுப்புத் தகவலும் தேவை.
ரூ. 10 லட்சத்துக்கு குறைவான கடன் தொகை செலுத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டால், `லோக் அதாலத்'தை அணுகி, கடன் தொகையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பல உத்தரவுகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளை மீறும் வங்கிகளை குறுகிய காலத்துக்கு தடை செய்யவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன் பிறகு வங்கி சம்பந்தப்பட்ட நடைமுறையில் மாற்றம் இல்லை என்றால் தடை காலம் நீடிக்கவும் முடிவு செய்துள்ளது.
தரவு - தினமலர்