இன்றைய இந்தியாவின் பொது வாழ்வில், மதநம்பிக்கை மற்றும் வரலாறு ஆகிய இரண்டுக்கும் இடையேயான போராட்டம் மறுபடியும் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிலிருந்து மற் றொன்று முற்றிலும் முரண்பட்டது என்பதையும், அவை இணைந்து செயல்பட முடியாதவை என்பதையும் புரிந்து கொண்டால், இவற்றிற்கிடையே போராட்டம் என்று எதுவும் இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் மாறுபட்டவை இவை. அவற்றின் அனுமானங்கள், ஆய்வு நடை முறைகள், முடிவுகள் வேறுபட்டவை. அவற்றில் ஒற்றுமையைக் காண முயற்சிப்பதற்கு பதிலாக, அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு, அவற்றைத் தனித்தனியே பிரித்துக் காண்பதே சிறந்தது.
வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை இன்றைய சிறீலங்கா அல்ல
ஒருவரைப்பற்றியோ, ஓர் இடம் அல்லது ஒரு நிகழ்வைப் பற்றியோ வரலாற்றாசிரியர்கள் கூறும்போது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சான்றுகள், ஆதாரங்கள் அவர்களுக்குத் தேவை. அவை பற்றிய காலம், மற்றும் இடம் ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த சான்றுகள், ஆதாரங்கள் அந்த நிகழ்வை மெய்ப்பிக்க வேண்டும். வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு முக்கிய இடங்கள் அயோத்தியாவும், இலங்கையும் ஆகும். ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை எங்கே இருந்தது என்பதை பற்றி வரலாற்று ஆசிரியர்கள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, இதில் குறிப்பிடப் படும் இலங்கை எங்கே இருந்தது என்பது பற்றி கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்திய வரலாற்றாசிரியர்களிடையே முரண்பட்ட கருத்து நிலவி வருகிறது; உறுதியாக அதைப் பற்றி அடையாளம் காண முடியாமலேயே இருந்து வருகிறது. விந்திய மலைப் பகுதியில் அமர்கண்டக் அல்லது சோட்டா நாக்பூர் அருகே அது இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள்; மஹாநதி டெல்டா பகுதியில் இருந்தது என்று மற்ற சிலர் கூறுகின்றனர். ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையை இன்றைய சிறீலங்காவுடன் அடையாளம் காண்பது என்பது சிக்கல் நிறைந்ததாக உள்ளது. மவுரிய சாம்ராஜ்யம் மற்றும் அதற்குப் பிந்தைய காலத்தில், இந்திய, கிரேக்க, லத்தீன் மொழிகளில் குறிப்பிடப் பட்டுள்ளதை வைத்துப் பார்த்தால் தற்போதைய சிறீலங்காவின் அப்போதைய பெயர் தாம்ரபரணி. ( கிரேக்க மொழியில் தாப்ரோபேன் என்ற குறிப்பு உள்ளது).
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தனது சாம்ராஜ்ய எல்லையில் அசோக மன்னர் பொறித்துள்ள சாசனம் ஒன்றில் தாமிர பரணி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் பெரும்பாலும் சிறீலங்காவுக்கு சிங்களா அல்லது சிங்கள-த்வீபா என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வந்தது. (சிலாம் அல்லது சீலதீப் என்பது இதன் கிரேக்கக் குறிப்பு). இலங்கை என்ற பெயர் கிறிஸ்து பிறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பின் வழங்கத் தொடங்கிய பெயர் என்றே தோன்றுகிறது.
வரலாற்றாசிரியருக்கு இது திகைப்பை ஏற்படுத்துவதாக உள்ளதாகும்.
இன்றைய சிறீலங்காவைத்தான் வால்மீகி குறிப்பிட்டதாகக் கொண்டோமானால், தாம்ரபரணி அல்லது சிங்களா என்ற பெயரையே அவர் பயன் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் இலங்கை என்ற பெயரையே பயன்படுத்தியுள்ளார். ஆனால் அக் காலத்தில் இன்றைய சிறீலங்காவுக்கு இலங்கை என்ற பெயர் இருந்திருக்க வில்லை. அப்படியெனின், வால்மீகி குறிப் பிடும் இலங்கை வேறு எங்கேயோ இருந்திருக்க வேண்டும். ராமர் சேது இருந்த இடம் எது என்பது மறுபரிசீலனை செய்யப் படவேண்டிய ஒன்றாகும். இந்த ராமர் சேது மத்திய இந்தியாவில் உள்ள ஒரு சிறு நீர்நிலையில் இருந்திருக்க வேண்டும் என்றும், அது பாக் ஜலசந்தியில் இருந்திருக்க முடியாது என்றும் வரலாற்றாசிரியர்கள் வாதிடுகின்றனர். மேலும் சேது பற்றி வால்மீகிக்குப் பின் எழுதப்பட்ட அனைத்து ராமாயண நூல்களிலும் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கை இன்றைய சிறீலங்காவாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறுவார்களேயானால், இந்தத் தீவு இலங்கை என்று அழைக்கப்படத் தொடங்கிய காலத்திற்குப் பின் வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். இத்தகைய உறுதியற்ற செய்திகள் ஒருபுறம் இருக்க, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் கடலில் நீண்ட தூரத்திற்கு ஒரு பாலம் எவ்வாறு கட்டப்பட்டிருக்க முடியும் என்ற தொழில்நுட்ப சாத்தி யக் கூறு பற்றிய கேள்வியும் எழுகிறது.
ராமர்சேது இயல்பான புவியியல் தோற்றமாக இருந்தாலும் சரி, மனிதரால் உருவாக்கப்படாததாக இருந்தாலும் சரி, அது புராதனச் சின்னம் என்று கூறப்படுகிறது. இந்தக் கருத்து ஒன்றே புராதனச் சின்னமாக ஆக்கிடுமா? தற்போது உண்மையில் இல்லாத, மனிதரால் கட்டப் படாத ஒரு பாலத்தைத் தேடுவது என்பது, ஒரு மாயத் தோற்றத்தின் கற்பனைத் தாவலைத் தடுப்பதுடன், மக்களின் மரபு வழி நம்பிக்கை தர இயன்ற ஆர்வத்தையும் போக்கிவிடுகிறது. பாக். ஜலசந்தியில் இயற்கையாக கடலுக்கு அடியில் தோன்றியுள்ள இந்த மணல் மேடுகளைப் புராதனச் சின்னமாக ஏற்றுக் கொண்டு அப் பகுதியைப் பாதுகாப்பது இன்னும் பொருத்தமாகவும் இருக்கக்கூடும்.
நிலத் தின் மீது காணப்படும் இயற்கை அமைப்புகளைப் போன்றே இத்தகைய கடல் பூங்காக்களும் நமது எதிர்காலச் சுற்றுச் சூழலுக்கு முக்கியமானவை என்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை.நூற்றுக்கணக்கான ராமாயணக் கதைகளில் ராமன் என்ற மய்யக் கருத்து ஒன்றே போதுமான வரலாற்றுச் சான்றாகவோ, ஆதாரமாகவோ ஆக முடியாது. இவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கதைகளைச் சொல்லிக் கொண்டு இருப்பதால், அவற்றில் ஒரே ஒரு கதைதான் உண்மையானது என்று நம்புபவர்களுக்கு அது பல பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். கடந்த கால வரலாறு என்ன கூறுகிறது அல்லது இக் கருத்து வேறுபாடுகள் எதைக் குறிக்கின்றன என்பது பற்றி வரலாற்று ரீதியாகவும், ஒப்பீட்டு ஆய்வு ரீதியாகவும் இந்த முரண்பட்ட ஒவ்வொரு கதையை யும் மதிப்பிடுவதில் உள்ள ஆர்வத்தை இந்த பல்வேறுபட்ட கதைகள் அதிகரிக்கச் செய்கின்றன.
வால்மீகி ராமாயணத்திற்கு மிக நெருங்கிய காலத்தில் உருவான இரண்டு வேறு ராமாயணக் கதைகள் என்று புத்த மற்றும் சமணக் கதைகளைக் கூறலாம். தசரத ஜாதகா என்ற புத்தமதக் கதை வால்மீகி ராமாயணத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். அதன்படி வாரணாசி மன்னரின் மகனான ராமன் இமய மலைக்கு நாடு கடத்தப்படுகிறான்; இதில் ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றது பற்றி எதுவும் இல்லை.
பல்வேறு சமணக் கதைகளில் காலத்தில் முற்பட்டதான விமலசூரி என்பவர் எழுதிய பத்மசரிதம் என்ற நூல் அதற்கு முந்தைய அனைத்துக் கதைகளுக்கும் மாறுபட்டதாக அமைந்துள்ளது; உண் மையில் நடந்தது என்ன என்பது பற்றி மக்களுக்குத் தெரிவிக்கவே இக் கதை எழுதப்பட்டதாக அதில் கூறப்பட்டுள் ளது. வால்மீகியின் கதையில் இருந்து இது பெருமளவில் வேறுபட்டதாக உள்ளது. ராவணன் ஒரு கொடிய அரக்கனல்ல; அவன் ராமனை எதிர்த்த ஒரு நாயகனே ஆவான். பாரம்பரியமான சமண வடிவமைப்பில் இக்கதையை இந்நூல் அளிக்கிறது.
வால்மீகி ராமாயணத்தை மட்டுமே நம்பும் ஒருவர் இதைப் போன்ற மற்ற ராமகதைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளவற்றிற்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம் அல்லது மறுக்கலாம். வரலாற்றாசிரிய ருக்கு ஆர்வம் அளிப்பது பல்வேறுபட்ட வடிவங்களில் அளிக்கப்பட்டுள்ள ராம கதை அல்ல; ஆனால் இக்கதைகளில் ஏன் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதே அவருக்கு ஆர்வமளிப்பதாகும்.
புத்தர், ஏசு, நபிகள் போன்றவருக்கு உள்ள வரலாற்று ஆதாரங்கள் ராமனுக்கு உண்டா?
மதநம்பிக்கை முறைகளை (மதங்களை)த் தோற்றுவித்த புத்தர், ஏசு கிறிஸ்து, முகமது நபி போன்ற நாமறிந்த வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றில் இத்தகைய முரண்பாடுகள் இல்லை. அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒரே மாதிரியான கதையைத்தான் தெரிவிக்கின்றன. அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய அதிகாரப் பூர்வமான விளக்கத்தை ஏற்றுக் கொள்ள இது உதவுகிறது. அவர்கள் உயிர் வாழ்ந்தது பற்றி மற்ற ஆதாரங்களிலும் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன; அவை அவர்களின் வாழ்க்கையைப் பற்றி மட்டும் தெரிவிக்காமல், அவர்கள் கொண்டிருந்த பல்வேறு தொடர்புகளைப் பற்றியும் தெரிவிக்கின்றன. எடுத்துக் காட்டாக, புத்தரின் வரலாற்றில், அவர் இறந்த ஒரு சில நூற்றாண்டுகள் கழிந்த பின், புத்தர் பிறந்த லும்பினிக்குச் சென்ற அசோக மன்னர் அங்கு புத்தரின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பினார் என்ற உண்மை அவர் நாட்டிய ஸ்தூபியிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.
இப்போது எழுந்துள்ள விவாதம், உண்மை ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற உணர்வில் தோன்றியிருப்பின், நிச்சயமாக வரலாற்றாசிரியர்களும் அதில் பங்கேற்றுக் கொண்டிருப்பர். மனிதரின் செயல்பாடுகள் ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை என்பதால், வரலாற்று ரீதியான விமர்சனத்துக்கு உட் பட்டவையே அவை. ஆனால், மதநம்பிக்கையின் பெயரால் மக்களின் ஆதரவு திரட்டுபவர்கள் மற்றும் இவ்வாறு ஆதரவு திரட்டுவதை எதிர்ப்பவர்கள் மேற்கொண்ட அரசியல் உத்திக்கான செய்தியாகவே ராமர் சேது ஆகிவிட்டது என்பது நன்றாகவே தெரிகிறது.
தொல் பொருள் ஆய்வு மற்றும் வரலாறு ஆகிய வற்றின் கண்ணோட்டத்தில், ராமரின் வரலாற்றை மெய்ப்பிப்பதற்கான உறுதியான சான்று, ஆதாரம் இது வரை இல்லை என்று இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கூறியது சரியானதுதான். இந்த அறிக்கையை நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெற்றதும் ஓர் அரசியல் செயலே. வரலாற்றைப் பொறுத்தவரை மெய்ப்பிக்கப்பட்ட ஆதாரம், சான்று மிகவும் முக்கியமானது; ஆனால் வெறும் மதநம்பிக்கைக்கு இவை தேவையில்லை. வரலாற்று அடிப்படையில் மதநம்பிக்கையின் உண்மைத் தன்மையில் சந்தேகம் கொள்வது தெய்வ நிந்தனையாகாது.
மதநம்பிக்கையை எதிர்ப்பவராலும் நமது புராதனப் பண்பாடு வளம் பெற்றுள்ளது
வரலாற்றாசிரியர் மதநம்பிக்கையின் உண்மைத் தன்மையைப் பற்றி அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சூழலில், ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கை எவ்வாறு ஆதரவு பெறுகிறது என்பதை வரலாற்றுப் பின்ன ணியில் விளக்கிக் கூற வரலாற்றாசிரியரால் இயலும். இந்த மதநம்பிக்கையால் மட்டுமே நமது புராதனப் பண்பாடு வளம் பெற்றுவந்துவிடவில்லை என்பதையும், அதை எதிர்ப்பவர்களாலும் வளம் பெற்றுள்ளது என்பதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் பலமான மத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால், பெரும் கூட்டமாகக் கூடிப் போரா டியோ அல்லது ஏதுமறியா அப்பாவிகளைக் கொன்றோ, அரசியல் செல்வாக்கு தேடியோ அந்த நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பது தேவையே இல்லாதது.
அந்த மதநம்பிக்கையைப் பாதுகாக்க தொல் பொருள் ஆய்வோ, வரலாறோ பயன்படுத்தப்படத் தேவையுமில்லை. மதநம்பிக்கை தனக்கே உரித்தான இடத்தையும், செயல்பாட்டையும் கொண்டதாகும்; அதே போன்று தொல் பொருள் ஆய்வும், வரலாறும் அவற்றிற்கு உரிய இடத்தையும் செயல்பாட்டையும் கொண்டவை. இவைகளின் இடங்களும், செயல்பாடுகளும் வெவ்வேறானவை.
மணல்மேடுகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் அளவுக்கு இந்து மதம் பலமற்றதா?
கடலுக்கு அடியில் உள்ள மணல்மேட்டில் ஒரு பகுதியை நீக்குவது லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும் என்று கூறுவது, அந்த மத நம்பிக்கைக்கு உரிய மரியாதை அளிப்பதாக ஆகாது. ஒரு கடவுள் அவதாரம் கட்டியதாக நம்பப்படும், கடலுக்கு அடியில் காணப்படும் ஒரு புவியியல் அமைப்பின் (மணல்மேடு) உதவி தேவைப் படும் அளவுக்கு இவர்களின் மத நம்பிக்கை பலமற்று இருக்கிறதா? தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மத நம்பிக் கையை ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்குவது என்பதே அந்த மத நம்பிக்கைக்கு இழிவு சேர்ப்பதாகாதா?
இப்போது உள்ள பிரச்சினை என்னவென்றால் ராமன் இருந்தானா, இல்லையா என்பதோ, அல்லது கடலுக்கு அடியில் உள்ள மணல்மேடு ராமனின் முயற்சியால் கட்டப் பட்ட பாலத்தின் ஒரு பகுதியா என்பதோ அல்ல. ஆனால் இப்போது நம் முன் உள்ள முக்கியமான வேறு கேள்விகள் , மதநம்பிக்கை பற்றியவையோ, அல்லது தொல் பொருள் ஆய்வு பற்றியவையோ அல்ல; நுண்ணிய அறிவுபூர்வமாக அறிந்து கொள்ள வேண்டி யவை பற்றிய கேள்விகள்தாம். மத நம்பிக்கையை வேண்டு மென்றே கொண்டு வந்து புகுத்தி பிரச்சினையில் மக் களின் கவனத்தை திசை திருப் பியது பற்றிய கேள்விகள். இயற்கையாக உருவான இந்த மணல்மேடுகளின் ஒரு பகுதியை அகற்றுவது, சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கிழைத்து, தென்னிந்திய மற்றும் இலங்கைக் கடற்கரைப் பகுதிகளை எதிர்காலத்தில் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்கு உள்ளாக்கக் கூடுமா? இத்தகைய பேரழிவுகளைத் தவிர்க்கும் வண்ணம் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா?
இத்திட்டத்தினால் தகவல் தொடர்பு, அன்னியச் செலாவணி அதிகரிப்பது போன்ற பயன்கள் என்னென்ன கிடைக்கும்? இப்பயன்கள் உள்ளூர் பாமர மக்களைச் சென்றடையுமா? ஆம் எனில், எவ்வாறு? அனைத்திலும் முக்கியமானது, பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் உள்ள அவற்றின் கூட்டாளிகளும் இத்திட்டத்தில் என்ன பங்கு பெற உள்ளனர்? இது போன்றதொரு பெரிய திட்டத்திற்கு யார் நிதி அளிக்கப்போகிறார்கள்? திட்டத்தின் செயல்பாடுகளை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள்? இத்தகைய விவரங்கள் வெளிப் படையாகத் தெரிய வரும் போதுதான் ஏற்கெனவே நடந்து வரும் அகழ்வுப் பணி கள் பற்றிய சில உண்மைகளை நம்மால் அறிய இயலும். இத் திட்டத்தைப் பற்றி கேட்கப் படவேண்டிய, மக்களின் கவ னத்தை இந்த நேரத்தில் ஈர்க்க வேண்டிய கேள்விகள் இவை தான்.
(நன்றி: `தி இந்து, 28.9.2007; தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)
Wednesday, October 3, 2007
Subscribe to:
Post Comments
1 comments:
கட்டுரை மிகவும் மதிப்பிற்குரிய
ராமிளா தப்பார் அவர்களுடையது.
Post a Comment