'பசுபதி' - திரை விமர்சனம்

ராசக்காபாளையத்திலிருந்து சென்னைக்கு வரும் ஒரு பாசக்காரனின் கதை. வருகிற இடத்தில் காதல், கண்றாவி என்று கதையை சொதப்பாமல் வேறு திசையில் பயணப்பட்டிருக்கும் இயக்குனருக்கு முதல் சபாஷ். இரண்டாவது சபாஷ், விவேக்கிற்கு! நீண்ட இடைவேளைக்கு பிறகு விவேக்கின் ராஜ்ஜியம். வெட்டுபட்ட அரிவாளில் இருந்து வழியும் ரத்தத்தை, ஒரு சொட்டு எடுத்து உதட்டில் வைத்து 'பி பாஸிட்டிவ்' என்று ரிசல்ட் சொல்கிற அளவுக்கு அனுபவமுள்ள(!) ஹெட் கான்ஸ்டபிள்.

வந்த இடத்தில் பெட்டியை பறிகொடுத்துவிட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடையும் பசுபதியான ரஞ்சித்தும், விவேக்கும் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் டியூட்டி போலீசுக்குக்கூட வலி எடுக்கும் வயிற்று பிரதேசத்தில்.

அப்பாயின்மென்ட் இல்லாத போலீஸ்காரராக அங்கேயே தங்கிவிடும் ரஞ்சித்தின் வீரம், விவேக்கிற்கு புரமோஷன் வாங்கிக் கொடுக்கிறது. 'அண்ணே, அண்ணே' என்று விவேக்கின் மீது அன்பை பொழியும ரஞ்சித் அம்மா செல்லம் என்பதும், அம்மாதான் ரஞ்சித்துக்கு உயிர் என்பதும் இடையிடையே சொல்லப்படுகிறது. நினைத்தமாதிரியே பின்பாதியில் அம்மாவுக்கு இதயநோய். அறுவை சிகிச்சைக்கு ஐந்து லட்சம் தேவை. என்ன செய்வார் ரஞ்சித்? நன்றாக போய் கொண்டிருந்த திரைக்கதை மழைக்கால தார் சாலை மாதிரி ஆகிறது. ஆயுதக்கடத்தல்... போலீஸ் லாக்கப் என்று தடுமாறி முடிவை நெருங்கும்போது ரஞ்சித் அமரர் ஆகிறார். அம்மாவை பிழைக்க வைத்து பிள்ளை உயிரை கொடுக்கும் இந்த க்ளைமாக்ஸ், சென்டிமென்ட் பாரம் தாங்காமல் நொண்டியடிப்பது தவிர்க்க முடியாததாகிறது.

அடிக்கடி விவேக்கை வைத்து ரஞ்சித்தின் பாரத்தை கிண்டலடிக்கிறார்கள். ஆனால், பாரத்தை தாண்டிய 'அபார' நடிப்பு ரஞ்சித்திடம். முதியோர் இல்லத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களை பார்த்து அழுது தவிப்பதை சொல்லலாம். தன் முன்பாகவே விவேக்கை தள்ளிவிடும் வில்லனை போட்டுத்தாக்குவது ஹீரோயிசத்தை தாண்டிய ஈர்ப்பு. ஆபரேஷன் ஃபெயிலியர் ஆகி வெளியே கொண்டுவரப்படும் அம்மாவின் முகத்தை பார்க்க சகிக்காமல், அம்மாவுக்கு என்னாச்சு? என்று கூடியிருக்கும் அத்தனை பேரிடமும் கேட்டு தேம்புவதிலும் ரஞ்சித்தின் நடிப்பில் முழுமை. எல்லாம் ஓ.கே. என்ன கொடுமை சார் இது? எல்லாவற்றையும் மீறி நிற்கிறதே, வில்லனுக்காகவே பிறப்பெடுத்த அந்த முகம்!

முதல் முறையாக சிரிக்க வைத்திருக்கிறார் தியாகு. பருப்பு வியாபாரி என்று நம்பி ரஞ்சித்துக்கு வாடகைக்கு வீடு கொடுத்த அப்பாவி. டேய்.. பருப்பு. தப்பிச்சு போகாதடா. என் தோலை உரிச்சிடுவாங்க என்று அழுது புலம்புவதும், தெரியும்னு சொன்னாலும் அடிக்கிறாங்க, தெரியாதுன்னு சொன்னாலும் அடிக்கிறாங்க என்று அரற்றுவதும் வெடிச்சிரிப்பு.

ராசாக்காபாளையத்திலிருந்து கிளம்பி வரும் கஞ்சா கருப்புவும் தன் பங்குக்கு பட்டையை கிளப்புகிறார். வசதியாக இவருக்கும் ரீல்களை பகிர்ந்தளித்து சில நிமிடங்கள் ஒதுங்கிக் கொள்கிறார் விவேக்! கதாநாயகி வேண்டும் என்பதற்காகவே சிந்துதுலானி. அதிகம் வேலையில்லை. அந்த அம்மா நிஜமாகவே அம்மாவின் பாசத்தை ஊட்டியிருக்கிறார்.

ஆனால், ஜெயிலில் இருக்கும் ஒரு குற்றவாளியின் அம்மாவுக்காக நாடே கவலைப்படுகிற அளவுக்கு பில்டப் கொடுத்திருப்பதும், இதய நோயாளியான அவரை தெரசா ரேஞ்சுக்கு உயர்த்தியிருப்பதும்தான் நெருடல்.

எப்படியிருந்தாலும், கண்ணை மினுக்கும் நட்சத்திரங்களை நம்பாமல்... தாயே தெய்வம் என்ற உயர்ந்த தத்துவத்தை தைரியமாக (இந்த காலத்தில்) சொன்னதற்காக இயக்குனருக்கு ஒரு விசேஷ 'முகவரி' தரலாம்.....

செல்வபாரதி மே/பா நல்ல படங்கள்!

தரவு - தமிழ்சினிமா.காம்

0 comments: