ஈழப்பிரச்சனை: இந்திராகாந்திக்கு புரிந்தது...இப்போது உள்ளவர்களுக்கு புரியவில்லை!
மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்த மாநகராட்சி பள்ளி மாணவன் மாதிரி, எளிமையும் பெருமையாக நிற்கிறது அந்த வீடு! கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறோம்... குரல்வளைக்கு குறிவைக்கும் டாபர்மேன்கள் இல்லை. யாரது? போன்ற தோரணையான கேள்விகள் இல்லை. 'உள்ளே வாங்க' என்று அழைத்தது பழ.நெடுமாறனின் குரலேதான். அறையெங்கும் கலைந்து கிடக்கும் புத்தகங்களுக்கு நடுவில் பேட்டி துவங்குகிறது.
மதுரையில் இந்திராகாந்தி மீது தி.மு.க வினர் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவரை காப்பாற்றியது நீங்கள்தான். அந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி வைத்துக் கொண்டன. 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று கலைஞர் அழைத்தார். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
இந்திராகாந்தி தாக்கப்பட்ட நிகழ்ச்சி 1978-ல் நடந்தது. இந்த சம்பவம் நடந்து ஓராண்டு முடிவதற்குள்ளாகவே தி.மு.க வுடன் உறவு வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தேன். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் நானும், ஆர்.வி.சாமிநாதனும் டெல்லி சென்று இந்திராகாந்தியை சந்தித்து அரசியல் நிலைமைகள் குறித்து பேசினோம். என்னுடைய நிலைப்பாடு என்பது, தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதான் முடிவு செய்ய வேண்டும். டெல்லியில் முடிவு செய்து எங்கள் மீது அந்த முடிவை திணிக்க முடியாது. அதனால் கட்சி பலவீனப்படும். எங்கள் முடிவு தவறாக இருந்தால் கட்சி மேலிடம் தலையிட்டு அதற்கான காரணங்களை கேட்டு மாற்றும்படி சொல்லலாம். முடிவையே டெல்லி எடுக்குமானால் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்படுவதில் அர்த்தம் இருக்க முடியாது. இதற்கு இந்திராகாந்தி ஒப்புக் கொண்டார். கூட்டணி பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோடு கலந்து பேசிதான் முடிவெடுப்போம் என்றார். நாங்களும் மகிழ்ச்சியோடு திரும்பினோம்.
வந்து சில மாதங்களுக்குள்ளாகவே டெல்லியிலிருந்து செய்தி வருகிறது. கலைஞர் கருணாநிதியும், முரசொலி மாறனும், இந்திராகாந்தியை சந்தித்து பேசி கூட்டணி பற்றி முடிவு செய்துவிட்டார்கள் என்று. அதற்கு பிறகு நாங்கள் திரும்பவும் டெல்லி சென்று இந்திராவை சந்தித்தோம். எங்களிடம் ஒன்று சொல்லிவிட்டு அதற்கு மாறாக செய்துவிட்டீர்களே, இதனால் கட்சி பலவீனப்படுமே? நாம் தனியாக நின்றிருந்தாலே குறைந்த பட்சம் 15 இடங்களை கைப்பற்றி இருக்கலாமே? கூட்டணி சேர்ந்து அதே 15 தொகுதியை வாங்கி என்ன பயன்? இப்படி எவ்வளவோ வாதாடி பார்த்தும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. முடிவு செய்தால், செய்ததுதான். அதை மாற்றிக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு நான் என்னுடைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை அன்றைய தினமே ராஜினாமா செய்தேன். இதுதான் நடந்தது. எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அன்று என்னுடைய முடிவை எதிர்த்து என்னுடைய நண்பர் மூப்பனாரும், ப.சிதம்பரமும் எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுக்கிற முடிவுகளை எதிர்ப்பவர்கள் உண்மை காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியாது என்று சொன்னார்கள்.
ஆனால் அதே மூப்பனார் 16 வருடம் கழித்து நான் என்ன காரணத்தை சொல்லிவிட்டு காங்கிரசிலிருந்து வெளியேறினேனோ அதே காரணத்தை சொல்லிவிட்டு காங்கிரசிலிருந்து வெளியேறினார். நரசிம்மராவ் எங்களை கேட்காமல் அ.தி.மு.க வுடன் உறவு வைத்துக் கொண்டதாக காரணம் சொன்னார். அவர் இந்த சிந்தனைக்கு வருவதற்கு 16 வருடங்கள் ஆனது.
இந்திராகாந்தியை காப்பாற்றியவர் என்ற முறையிலும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற முறையிலும் சோனியாவை சந்தித்து இலங்கை பிரச்சனை குறித்து நீங்கள் பேசியிருக்கலாமே?
அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கருதுகிறேன். உண்மையில் ஈழப் பிரச்சனையில் இந்திராகாந்தி என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தார். அதற்கு நேர்மாறாக இப்போது என்னென்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் காரர்களே புரிந்து கொண்டார்களா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. 1977-ல் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக அமிர்தலிங்கம் இருந்தார். அவரும் அவருடைய துணைவியாரும் சென்னைக்கு வந்தார்கள். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர். இங்கு எல்லா தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டார். அப்போது அவரை நானே நேரில் சென்று சந்தித்து, 'நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தமிழர்கள் என்ற முறையில் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு' என்று தெரிவித்தேன். 'நீங்கள் டெல்லியிலே சென்று இதற்கான லாபியை நடத்துங்கள். அப்போதுதான் இந்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என்றேன். அவர், 'டெல்லியில் யாரையும் தெரியாது' என்று சொன்னதற்கு, 'நானே டெல்லியில் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன்' என்றேன். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டபின் டெல்லி சென்றோம்.
அப்போது மொரார்ஜிதேசாய் பிரதமராக இருந்தார். நான், ஜனார்த்தனம், அமிர்தலிங்கம், அவரது துணைவியார் நான்கு பேரும் இந்திராவை சந்தித்தோம். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டவர் அமிதலிங்கத்திடம், 'முதலில் இந்த பிரச்சனையை நீங்கள் சர்வதேச அளவில் விளக்க வேண்டும்' என்றார். 'வெளிநாடுகளில் யாரையும் தெரியாதே' என்று கூறிய அமிர்தலிங்கத்துக்கு ஒரு பள்ளி ஆசிரியை போல பாடம் எடுத்த இந்திராகாந்தி, வெளிநாடுகளில் யார், யாரை சந்திக்க வேண்டும், எதைப்பற்றி எப்படியெல்லாம் பேச வேண்டும், என்பதையெல்லாம் சுமார் ஒரு மணிநேரம் விளக்கமாக எடுத்துக் கூறினார். பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ஏ.ஆர்.அந்துலேவை அழைத்து பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட செய்து அதில் அமிர்தலிங்கத்தை பேச வைத்தார். சுமார் ஒரு மணிநேரம் ஈழப்பிரச்சனை குறித்து ஆங்கிலத்தில் அருமையாக விளக்கினார் அமிர்தலிங்கம். முடிந்ததும் கட்சி தலைவர்கள் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் என்று கூறப்பட்டது. அப்போது, காங்கிரசின் எதிர்கட்சி தலைவராக இருந்தவர் எஸ்.பி.சவான். அவர் ஒரு கேள்வி கேட்டார். 'நீங்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து அங்கு போனவர்கள்தானே? அங்கு போய் தனிநாடு கேட்டால் என்ன நியாயம்?' என்று அவர் கேட்டபோது, நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் அவர் மூன்றாண்டு காலம் வெளிநாட்டு அமைச்சராக இருந்தவர். இலங்கை பக்கத்து நாடு. அங்கு ஈழத்தமிழர்கள் பூர்விக குடிகள் என்பது கூட அவருக்கு தெரியவில்லை.
அமிர்தலிங்கம் சவானின் கேள்விக்கு விளக்கமாக பதில் சொன்னார். இந்த கூட்டத்தை பற்றி நான் இந்திராகாந்தியிடம் விளக்கமாக சொன்னேன். யார் யார் என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பது பற்றி சொல்லிவிட்டு சவான் கேட்ட கேள்வியையும் சொன்னேன். 'மூன்றாண்டு காலம் வெளிநாட்டு அமைச்சராக இருந்தவர் இந்த உண்மையை கூட தெரிந்து வைத்திருக்கவில்லையே, மிகவும் வருத்தமாக இருக்கிறது' என்று நான் சொன்னபோது இந்திராகாந்தி விழுந்து விழுந்து சிரித்தார். 'என்ன செய்வது? இப்படிப்பட்ட ஆட்களை வைத்துக் கொண்டுதான் நாமும் அரசியல் பண்ண வேண்டியிருக்கிறது' என்று சொன்னார். அன்று தொடங்கி நான் பார்க்கிறேன். இந்திராகாந்தி இந்த பிரச்சனையில் தெளிவாக இருந்தார்.
1983-ம் ஆண்டு ஜுலை மாதம் கொழும்பிலே கலவரம் ஏற்பட்டு அங்கு மூவாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அன்று வெளிநாட்டு அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்மராவையும், ராஜாங்க அமைச்சர் ஜி.பார்த்தசாரதியையும் அனுப்பி வைத்தார். இலங்கை ஒரு சின்ன நாடு. அங்கு நடந்த பிரச்சனைக்கு அவர் அனுப்பி வைத்த இருவரும் அன்றைக்கு இந்தியாவின் மிக முக்கியமான அமைச்சர்கள். இதன்மூலம் அவர் ஜெயவர்த்தனாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கு உணர்த்திய விஷயம் என்னவென்றால், ஈழத்தமிழர் பிரச்சனையை இந்தியா முக்கியமான பிரச்சனையாக கருதுகிறது என்பதுதான்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துவிட்டு பிரதமர் இந்திராகாந்தி ஆற்றிய உரையில், 'இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கிறது' என்றார். அதன்பின் இந்திராகாந்தியின் ஆலோசைனை பேரில், பார்த்தசாரதி பல முறை இலங்கை அரசோடு பேசினார். இலங்கை தமிழர்களுக்கும் அரசுக்கும் இடையில் வட்டமேஜை மாநாடு நடந்தது. அனெக்ஸ் சி என்ற ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஜெயவர்த்தனா அதை ஒப்புக் கொள்ள தயங்கினார். பிறகு இந்திராகாந்தியின் நிர்பந்தத்தின் பேரில் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்தார். ஆனால் அதை அவர் நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை.
உடனே இந்திராகாந்தி, அனைத்து தமிழ் போராளி குழுக்களையும் அழைத்து அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்க செய்தார். இந்திய ராணுவம்தான் அந்த பயிற்சியை அளித்தது. அதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை வருதற்குள்ளாகவே இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு பிறகு ராஜீவ்காந்தி பிரதமராக வந்தார். அவருக்கு இந்த பிரச்சனை பற்றி மட்டும் அல்ல, அரசியலை பற்றியும் எதுவும் தெரியாது. இந்த பிரச்சனை பற்றி எல்லாம் தெரிந்த பார்த்தசாரதி ராஜினாமா செய்துவிட்டு போகும்படி செய்யப்பட்டார். வெளியுறவு அதிகாரியாக இருந்த ஏ.பி வெங்கடேஸ்வரன் பற்றி வெளிப்படையாக செய்தியாளர்கள் கூட்டத்தில் ராஜீவ்காந்தி விமர்சனம் செய்ய, அவரும் பதவி விலகி போய்விட்டார். ஆக இந்த பிரச்சனையை தெளிவாக புரிந்து வைத்திருந்த ஆலோசகர்கள் அவருக்கு அருகில் இல்லை.
அதற்கு பிறகு வெளியுறவு செயலாளர் பதவியேற்ற பண்டாரி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பேச்சு வார்த்தைக்கு. இந்த வேறுபாட்டை நீங்கள் நன்கு அறிய வேண்டும். இந்திராகாந்தி காலத்தில் இரண்டு சீனியர் டிப்ளோமேட் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ராஜீவ் காலத்தில் ஒரு அதிகாரி அனுப்பி வைக்கப்பட்டார். இப்படி செய்ததன் மூலம் இந்த பிரச்சனைக்கு உள்ள முக்கியத்துவத்தை தெரிந்தோ தெரியாமலோ குறைத்துவிட்டார். அன்றிலிருந்து இன்று வரை அதிகாரிகளை வைத்துதான் பேசுகிறார்கள். இன்னமும் சிவசங்கரமேனமும், எம்.கே.நாராயணனும்தான் அனுப்பப்படுகிறார்கள். இந்திய அரசில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் யாரும் அங்கு அனுப்பப்படவில்லை. ஆக, இந்தியா இந்த பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாக கருதவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இப்போது ஏற்பட்டுள்ள அவ்வளவு குழப்பங்களுக்கும் இதுவும் ஒரு காரணம்.
ஈழத்தமிழர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலமாக மருந்து பொருட்கள் அனுப்புவது குறித்து உண்ணாவிரதம் இருந்தீர்கள். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கலைஞர் கேட்டுக் கொண்டும் அதற்கு ஒப்புக்கொள்ளாத நீங்கள், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டதும் ஒப்புக் கொண்டது ஏன்?
இந்த பிரச்சனை சென்ற ஆண்டு ஜனவரியில் இருந்து நடந்து வருகிறது. ஏழு மாத காலமாக நாங்கள் சேகரித்த உணவுப் பொருட்களையும், மருந்து பொருட்களையும் ஈழத்தமிழர்களுக்கு அனுப்ப அனுமதி கேட்டு வருகிறோம். அதற்கு எந்த வித அனுமதியும் அளிக்கப்படவில்லை. நாங்கள் அரும்பாடு பட்டு சேகரித்த பொருட்களை வைக்க கூட இடமில்லாமல் பாதுகாக்க வேண்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் அவற்றை நாங்களே எடுத்துச் செல்வது என்று முடிவு செய்தோம். நாங்கள் அங்கு சென்றபோது எங்களுக்கு படகுகள் கொடுக்கக்கூடாது என்று மீனவர்கள் தடுக்கப்பட்டார்கள். யாரும் எங்களுக்கு படகு கொடுக்க முன்வராத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை கைது செய்யவும் உத்தரவிடாமல், எங்களை அவமானப்படுத்தியது இந்த அரசு. நான் உடனே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டேன். அதற்கும் அனுமதிக்கப்படாத நிலையில் சென்னை கோயம்பேட்டில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டேன். அப்போது உண்ணாவிரதத்தை தடுக்க முயன்ற காவல்துறை என்னை கைது செய்ய முயன்றது. 'இது எங்களுக்கு சொந்தமான இடம். பொது இடத்தில் உண்ணாவிரதம் இருந்தால்தான் என்னை கைது செய்ய முடியும்' என்று நான் வாதிட்டேன். அதற்குள் விஷயத்தை கேள்விப்பட்ட பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, வைகோ, திருமாவளவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் என்னை கைது செய்யாமல் திரும்பி போனது காவல்துறை. இல்லையென்றால் அந்த உண்ணாவிரதம் தடுக்கப்பட்டிருக்கும். அதன்பின் எனக்கு கடிதம் அனுப்பிய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, உண்ணாவிரதத்தை கைவிடும்படியும், நேரில் இதுகுறித்து பேசலாம் என்றும் கூறியிருந்தார். அதன்பின் ராமதாஸ், வைகோ போன்றவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க உண்ணாவிரதத்தை கைவிட்டேன். ஆனால், இன்றுவரை என்னை அழைத்து பேசுவதாக வாக்குறுதியளித்த தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் இன்னும் அழைக்கவில்லை. நானும் அவரை சந்திக்க முறைப்படி நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதோடு இந்த பிரச்சனையை நாங்கள் விடப்போவதில்லை. எப்படியும் நாங்கள் சேகரித்த பொருட்களை ஈழத்தமிழர்களுக்கு அனுப்பியே தீருவோம்.
அனுமதியில்லாமல் இந்த பொருட்களை எடுத்துக் கொண்டு உங்களால் இலங்கைக்கு சென்றிருக்க முடியும். அந்த துணிச்சல் உங்களிடம் இருக்கும்போது அரசிடம் அனுமதி கேட்காமலே அவற்றை இலங்கைக்கு கொண்டு சென்றிருக்கலாமே?
நிச்சயமாக முடிந்திருக்கும். இதற்கு முன்பு பலமுறை இலங்கைக்கு அனுமதியில்லாமல் சென்றிருக்கிறேன். நான் வந்தபிறகு பத்திரிகைகளுக்கு அளிக்கிற பேட்டிகளை வைத்துதான் நான் இலங்கை சென்ற தகவலே போலீசுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இது எனக்கு பெரிய விஷயமல்ல. ஆனால், ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களும், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் கிடைக்காமல் அவர்கள் படுகிற வேதனைகளையும் மக்களுக்கு புரியவைக்கவும், ஈழப்பிரச்சனை குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும்தான் இந்த போராட்டம்.
கலைஞர் தலைமையிலான தி.மு.க, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.முக இரண்டுமே ஈழத்தமிழர்கள் விஷயத்தில் ஆதரவாக இல்லை என்று சொல்கிறீர்கள். தி.மு.க-அ.தி.மு.க வை விட்டால் வேறு கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாத சூழ்நிலையில், ஈழப்பிரச்சனையில் எதிர்காலத்தில் தமிழக அரசின் ஆதரவை எப்படி பெறுவீர்கள்?
அதற்கு ஒரு மாற்று வேண்டும் என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம். தொடர்ந்து பேசி வருகிறோம்.
உங்கள் இயக்கமும் தேர்தலில் நின்று அதிகாரத்தை கைப்பற்றினால் இன்னும் அழுத்தமாக உரிமைக்குரல் எழுப்பலாமே?
தமிழர் தேசிய இயக்கம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், தி.மு.க, அ.தி.மு.க வுடன் சேர்ந்து நிற்க விரும்பவில்லை. நாங்கள் வலிமையடையும் வரை பொறுமையாக இருப்போம். அல்லது மூன்றாவது அணியை உருவாக்குவது பற்றி யோசிப்போம். தமிழர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் இந்த இரண்டு இயக்கங்களும்தான். சட்டமன்றத்தில் மக்கள் பிரந்ச்சனையை பற்றியா இவர்கள் பேசுகிறார்கள். இந்த அம்மா வீட்டில் யாரோ நுழைந்து விட்டானாம். அதை பற்றி பேசி இருவரும் அடித்துக் கொள்ளத்தான் நேரம் ஒதுக்குகிறார்கள். நாங்கள் மக்கள் பிரச்சனைகளை மையமாக வைத்து போராடிக் கொண்டிருக்கிறோம். எல்லா கட்சிகளையும் எங்களுடன் இணைத்துக் கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் சட்டமன்றத்துக்கு போனால் கூட எங்கள் கருத்துக்களை முன் எடுத்து செல்ல அந்த மன்றத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவோமே தவிர, பதவி சுகத்துக்காக அங்கே செல்ல வேண்டும் என்று நினைக்க மாட்டோம்.
வைகோ, ராமதாஸ், திருமாவளவன், இவர்களை தொடர்ந்து தற்போது புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறாரே?
நல்லதுதானே? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அதை வரவேற்போம்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த வன்னி அரசு என்பவர் மீது விடுதலைபுலிகளுக்கு ஆயுதங்கள் கடத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டாரே?
மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. பால்ரஸ் கடத்தினார்கள், 500 சி.சி என்ஜினை கடத்தினார்கள் என்று சிலர் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். இன்றைக்கு கவனித்தீர்களா? அநுராதபுரத்தில் இலங்கை விமான படையினர் மீது வான் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் புலிகள். அவர்களா 500 சிசி என்ஜினையும், பால்ரஸ் குண்டுகளையும் கடத்திவர சொல்லியிருப்பார்கள்? உண்மையில் நடப்பது வேறு. புலிகளுக்கு எதிரான தடை சட்டம் விரைவில் காலாவதியாக இருக்கிறது. அந்த நேரத்தில் இதுபோன்ற சில பொய் வழக்குகளை போட்டு, அந்த சட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வைப்பதற்காக புனையப்படுகிற சம்பவங்கள்தான் இவைகள்.
சிங்களப்படம் எடுப்பேன் என்று நடிகை ராதிகா சொல்லியிருக்கிறாரே?
சினிமாக்காரர்களை பற்றி நான் என்ன கருத்து சொல்வது? வேண்டாம், விடுங்கள்...
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு பாதுகாப்பு இருக்காது என்று அந்நாட்டு அரசு கருதுகிறது. தற்போது எழுப்பப்படும் பிரச்சனைகளில் இலங்கை அரசின் மறைமுக பங்கு இருக்கும் என்று கருதுகிறீர்களா?
ஆங்கிலேயர்கள் காலத்திலேயே பேசப்பட்ட திட்டம் இது. பின்பு நேரு தலைமையில் மந்திரி சபை கூடி ஒப்புக் கொண்ட முடிவு இது. அப்போது சிறிமாவோ பண்டாரநாயகா அங்கே பிரதமராக இருந்தார்கள். அவர்கள் உடனே நேருவுக்கு கடிதம் எழுதினார்கள். 'இந்த கால்வாய் திட்டம் வந்தால் கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவமே போய்விடும். எங்கள் பொருளாதாரமே அழிந்து போய்விடும். ஒரு சின்ன நாட்டினுடைய பொருளாதாரத்தை நீங்கள் அழிக்கலாமா?' என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அந்த திட்டத்தை தொடராமலே விட்டுவிட்டார் நேரு. பிறகு நான் அப்போது சட்டமன்றத்தில் இந்த திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும் என்று பேசினேன். அதன்பிறகும் இலங்கையின் நெருக்கடி காரணமாக சேது கால்வாய் திட்டத்தை அப்படியே விட்டுவிட்டார்கள்.
இந்த திட்டம் தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம். சேது கால்வாய் திட்டம், ஈஸ்ட் கோஸ்ட் ரோடு திட்டம், அகல ரயில்பாதை திட்டம், இவை தென்மாவட்டங்களில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட திட்டங்கள். இதில் சேது கால்வாய் திட்டத்தை தவிர, மற்றவை நிறைவேற்றப்பட்டு விட்டன. சேது கால்வாய் திட்டமும் நிறைவேறினால்தான் தென் மாவட்டங்களில் நாம் நினைக்கிற வளர்ச்சியை அடைய முடியும். இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். சில பத்திரிகைகள் கூட இந்த திட்டத்திற்கு எதிராக எழுதுகின்றன. இலங்கை அரசின் பின்னணி இல்லாமல் இந்த செயல்கள் இல்லை. இப்போது மதரீதியாக இந்த திட்டத்தை முடக்க நினைக்கிறார்கள். இராமர் பாலம் என்பதெல்லாம் அந்த வகையில் கிளப்பப்படுகிற விஷயங்கள்தான்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் சுனாமி வந்ததனால் புலிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டு அதனால் சில பின்னடைவுகள் ஏற்பட்டுவிட்டதா? சுனாமி வராமல் இருந்திருந்தால் இலங்கை ராணுவத்தை இன்னும் பலமாக தாக்கியிருப்பார்களா?
இதுபோன்ற இயற்கை பேரழிவுகள் மட்டுமல்ல... இந்திய ராணுவம் அங்கு போயிருக்காவிட்டால் கூட எப்போதோ ஈழப்பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கும். இந்திய ராணுவத்தையும், இலங்கை ராணுவத்தையும் ஒரே நேரத்தில் அவர்கள் சமாளிக்க வேண்டியதாகிவிட்டது. எல்லாவற்றையும் மக்கள் துணையோடு தடுத்து இன்னமும் புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பொடா சட்டம் திரும்ப பெறப்பட்டு விட்டது. சிறையில் நீங்கள் சந்தித்த அனுபவங்களை எழுதும் எண்ணம் இருக்கிறதா?
பொடாவின் போது சிறையில் இருந்த அனுபவங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன். பல உண்மைகளை அது உலகுக்கு சொல்லும்.
இலங்கை பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் பிரச்சனை மட்டுமல்ல இது. இந்தியாவின் பாதுகாப்பையும் பொறுத்த பிரச்சனை இது. இந்திரா காந்திக்கு புரிந்தது. தற்போது உள்ளவர்களுக்கு புரியவில்லை. பாகிஸ்தான், சீன அரசுகளோடு இந்தியாவுக்கு சண்டை வந்தபோது நேரு காலத்திலேயே ஒரு முடிவு எடுத்தார்கள். பெரிய கனரக தொழிற்சாலைகள், குறிப்பாக ராணுவ ஆயுத தொழிற்சாலைகளை வட இந்தியாவில் அமைக்கக்கூடாது. பாதுகாப்பாக இருக்காது. ஒருபக்கம் பாகிஸ்தான் தாக்கலாம். அல்லது சீனா தாக்கலாம். அதை தென்னிந்தியாவில் அமைப்பதுதான் பாதுகாப்பானது என்று கருதி விமான உற்பத்தி தொழிற்சாலையை பெங்களுரிலும், ஆவடி டாங்கி தொழிற்சாலையை சென்னையிலும், ஹெவி பாய்லர்ஸ் தொழிற்சாலையை திருச்சியிலும், அமைத்தார்கள்.
இப்படி பாதுகாப்பு கருதி அனைத்தும் இங்கே அமைக்கப்பட்டது. தற்போது இலங்கையில் சீனாக்காரனும், பாகிஸ்தான்காரனும் ஊடுருவி நிற்கிறானே? தென்னிந்தியாவில் பாதுகாப்பற்ற சூழ்நிலை வந்ததற்கு யார் காரணம்? சென்னையிலோ, பெங்களுரிலோ, கல்கத்தாவிலோ சில நாடுகளின் துணை தூதரகங்களை அமைக்க அனுமதி கொடுத்திருக்கிறது இந்தியா. பாகிஸ்தான் தூதரகத்தை மட்டும் சென்னையில் வைப்பதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. பிடிவாதமாக மறுத்தது. ஏனென்றால் தென்பகுதியில் பாகிஸ்தானின் ஊடுருவல் வந்துவிடக்கூடாது என்பதால்தான்.
இந்திராகாந்தி இருக்கும்போது திரிகோணமலையில் அமெரிக்காவின் கடற்படை தளம் அமைக்கும் முயற்சி நடந்தது. 'இந்துமாக்கடல் பகுதியில் எந்த வல்லரசாவது ராணுவ தளம் அமைக்க முற்பட்டால், அது இந்தியாவுக்கு எதிரான செயல். இதை அனுமதிக்க முடியாது' என்று இந்திராகாந்தி எச்சரித்தார்கள். ஜெயவர்த்தனா அடங்கிவிட்டார். அது மாதிரியல்லவா இப்போது இந்தியா எச்சரிக்க வேண்டும்? 'நீ பாகிஸ்தானில் ஆயுதம் வாங்கிவிடுவாயா?' என்று எச்சரித்தால் இலங்கை அடங்கிவிடுமே. இலங்கை ஏன் இவ்வளவு ஆயுதங்களை வாங்குகிறது. பல கோணத்தில் ஏன் இந்தியா பார்க்கவில்லை. இதன் விளைவு மிக மோசமாக இந்தியாவை தாக்கும். பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கவியரசு கண்ணதாசனோடு நெருங்கி பழகியவர் நீங்கள். அவரைப்பற்றிய நினைவுகளில் ஏதாவதொன்றை பகிர்ந்து கொள்ளுங்களேன்?.
கண்ணதாசன் என்னுடைய நெருங்கிய நண்பர் மட்டுமல்ல. என்னை தன் சொந்த சகோதரன் போல் வைத்திருந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்திரா காங்கிரசிற்கு அவர் போனபிறகு, நான் காமராஜரோடு இருந்த போதிலும் எங்கள் நட்பு அப்படியே இருந்தது. பல நேரங்களில் அரசியலில் எனக்கு பெருந்துணையாக இருந்தார். இறுதிகாலத்தில் நடந்த சம்பவம் மறக்க முடியாது. அவருக்கு உடம்பு சரியில்லாமல் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்கிற நேரம். நான் ஈரோட்டில் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு திரும்ப தாமதாமாகிவிட்டது. தொலைபேசியில் அவரிடம் வழியனுப்ப வர முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்தேன்.
'பரவாயில்லை. வரும்போது உனக்கு என்ன வாங்கி வரவேண்டும்?' என்று கேட்டார். 'ஒன்றும் வேண்டாம். நீங்கள் நல்லபடியாக போய் வாருங்கள்' என்றேன். 'சொல்லுங்க ஏதாவது?' என்றார் பிடிவாதமாக. 'சொல்லட்டுமா?' என்றேன். 'சொல்லுங்க!' என்றார். 'நீங்க வரும்போது ஏதாவது அமெரிக்க பொண்ஜாதியோடு வந்திடாதீங்க' என்றேன். தொலைபேசியில் அவர் சிரித்த சிரிப்பு இருக்கிறதே... இன்னும் கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
சந்திப்பு- ஆர்.எஸ்.அந்தணன்
படங்கள்- பிரகதீஷ்வரன்.
தரவு - தமிழ்சினிமா.காம்
0 comments:
Post a Comment