இராமாயணத்தில் கூறப்படுவது இந்த இலங்கை அல்ல - 2

பாகம் 1

காலால் நடந்துதான் செல்லவேண்டும் என்ற சூழலில், காட்டில் திரிந்த இராமன், இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.
மேலும், இந்தியாவில் பல அரசுகள், பல மன்னர்களால் ஒவ்வொரு பகுதியும் ஆளப்பட்டு அந்தக் காலத்தில், ஒரு நாட்டைவிட்டு, மற்றொரு நாட்டிற்கு இராமன் முதலானோர் வர வாய்ப்பும் இல்லை; வரவேண்டிய கட்டாயமும் இல்லை; வருவதும் கடினம். எனவே, அயோத்தியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த காட்டில்தான் அவர்கள் வாழ்ந்திருக்க முடியும்.

5. பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்துவிட்டு வா! என்பதுதான் தசரதனின் கட்டளை. ஒரு அரசன் காட்டுக்குப் போ என்று கட்டளை யிட்டால் என்ன அர்த்தம்? அவனது ஆளுகைக்கு உட்பட்ட காட்டுக்குப் போ என்பதுதானே? ஒரு அரசு - நாடு, காடு என்ற இருபெரும் பகுதிகளை உடையது. மன்னர்கள் காடுகளுக்குச் சென்று வேட்டையாடுவர். முனிவர்கள் காடுகளுக்குச் சென்று தவம் மேற்கொள்வர் என்பதே மரபாகச் சொல்லப்படும் செய்தி. அதன் வழி நோக்கின், தசரதனின் ஆளுகைக்கு உட்பட்ட, அவனது நாட்டை ஒட்டியுள்ள காட்டிற்கு மரவுரி போன்ற தவக்கோலத்துடன் இராமன் சென்றான் என்பதுதானே பொருள். அப்படியாயின் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழகத்திற்கு எப்படி வரமுடியும்? ஏன் வரவேண்டும்? எனவே, இராமாயணத்தில் சொல்லப்படும் இலங்கை தென்னிலங்கை அல்ல அது வடக்கேயுள்ள இலங்கை என்பது உறுதி செய்யப்படுகிறது.

6. இராமாயணத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்களாகச் சொல்லப்படும் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன், மண்டோதரி, இந்திரஜித், சூர்ப்பநகா போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் அல்ல. வட இலங்கையில் வாழ்ந்தவர்கள் என்பதாலே அவர்களுக்கு இப் பெயர்கள் இருந்தன. தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களாயின் அவர்கள் பெயர் தமிழில் இருந்திருக்கும். இதன் வழி நோக்கினும் இந்த இலங்கையல்ல என்பது உறுதி.

7. காட்டில் இராமன் இருக்கும் இடத்திற்கு சூர்ப்பநகா சென்றாள், என்று இராமாயணத்தில் கூறப்படுகிறது. தென்னிலங்கையிலிருந்த சூர்ப்பநகா வடநாட்டிலுள்ள இராமனை எவ்வாறு அறிந்தாள்? எதற்காக வடநாட்டிற்குச் சென்றாள்? காரணமே இல்லை. அப்படியிருக்க தென் னிலங்கையிலிருந்து சூர்ப்பநகா சென்றதாகக் கூறுவது முற்றிலும் தவறு.

மேலும், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் பேசிய மொழி தமிழ். அப்படியிருக்க இவள் எப்படி வடநாட்டு இராமனுடன், லட்சுமணனு டன் பேசியிருக்க முடியும்? சவால் விட்டு வந்திருக்க முடியும்? இராமன் லட்சுமணன் தமிழ் தெரியாதவர்களாயிற்றே! சுருக்கமாகச் சொன்னால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள இராமனைப் பற்றி சூர்ப்பநகா கேள்விப்பட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை!

8. வடநாட்டில் உள்ள காட்டில் மூக்கறு பட்டு மார்பறு பட்டு மீண்டும் தென்னிலங்கைக்கு வர எத்தனை மாதங்கள் ஆகும். தன் அண்ணன் இராவணனிடம் நடந்ததைச் சொல்லி, இராவணன் சீதையைக் கவர்ந்து வர வடநாட்டிற்குச் செல்ல எத்தனை மாதங்கள் ஆகியிருக்கும். பல மாதங்களுக்குப் பிறகே இராவணன் வடநாட்டைச் சென்றடைந்திருக்க முடியும். அந்த கால இடைவெளியில் இராமன், இலட்சுமணன், சீதை ஆகிய மூவரும் காட்டில் வேறு பகுதிக்குச் சென்றிருப்பர். அப்படியிருக்கையில் இராவணன் சீதையைக் கண்டு பிடித்து எப்படி தூக்கி வந்திருக்க முடியும்?

இவ்வளவும் நடக்க வேண்டும் என்றால், அயோத்திக்கு அருகில் அயல்நாடாயிருந்த வட இலங்கையில்தான் இவை நடந்திருக்க முடியும்.

சூர்ப்பநகை ராமனை அறியவும், அவள் அவமானப்படவும், அண்ணனிடம் உடனே வந்து சொல்லவும், அண்ணன் இராவணன் உடனே புறப்பட்டு போய் சீதையைக் கொண்டு வரவும், இராமன் உடனே தூது அனுப்பி விடுவிக்கக் கேட்டுக் கொள்ளவும் அருகிலுள்ள இலங்கையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம். தென்னிலங்கையிலிருந்து இத்தனை முறை போய்வர வாய்ப்பே இல்லை. எனவே, இராமாயணத்தில் சொல்லப் படுவது தென்னிலங்கையல்ல. என்பது உறுதியாகிறது.

9. சீதையைத் தூக்கிச் சென்ற இராவணன் வான்வழியாகச் சென்றான், ஜடாயு எதிர்த்துப் போரிட்டது என்றெல்லாம் இராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அப்படியாயின் அந்தக் காலத்திலே விமானம் இருந்திருந்தால், இராமன் இலங்கைக்குச் செல்லுகையில் விமானத்திலே சென்றிருக்கலாமே. ஏன் பாலம் கட்ட வேண்டும்?

அதுமட்டுமல்ல, இலங்கையில் போர் முடிந்து இராமன் திரும்பும்போது அயோத்தியில் விமானத்தில் வந்தான் என்று சொல்லப்படுகிறது. அப்படியாயின் போகும் போது விமா னத்தில்தானே போயிருக்க வேண்டும்? ஏன் பாலம் கட்ட வேண்டும்? அப்படியாயின் இராமர் பாலம் என்பதே கட்டுக்கதை அல்லவா?

10. சஞ்சீவி மலையையே தூக்கி வரக்கூடிய வலுப் படைத்த அனுமான் இருக்கும் போது இவர்கள் ஏன் பாலம் கட்ட வேண்டும்? இராமன், இலட்சுமணன் இவர்களை பல்லக்கில் அமரச் செய்து அப்படியே அலேக்காசு தூக்கிச் சென்று அனுமார் இலங்கையில் விட்டிருப்பாரே. அப்படியிருக்க பாலம் கட்டினார்கள் என்றால், முட்டாளைத் தவிர எவன் நம்புவான்?

11. இராமர் பாலங்கட்டிய போது குரங்குகள் மலைகளைச் சுமந்து சென்று போட்டதாக இராமாயணம் சொல்கிறது. அப்படியாயின் இலங்கைக்கு எதிரிலுள்ள தமிழகக் கடலோரப் பகுதியில் அதாவது இராமேஸ்வரம் பகுதியில் மலைகள் இருக்க வேண்டும். ஆனால் இல் லையே! அப்படியிருக்க எப்படி மலைகளை பாறைகளை எடுத்துச் சென்று போட்டிருக்க முடியும்?

எனவே, மலை சூழ்ந்த வட இந்தியாவிலுள்ள இலங்கையில்தான் அது சாத்தியம். எனவே இராமாயணத்தில் குறிக்கப்படுவது இந்த இலங்கை அல்ல!

12. இராவணன் கைலாய மலையைத் தூக்கினான் என்று அவனது வல்லமையைப் பற்றிச் சொல்லப்படுகிறது. அப்படியாயின் இராவணன் வட இந்தியாவில் வாழ்ந்தவன் என்பது உறுதியாகிறது. அப்படியாயின் இராமாயணத்தில் வருவது வட இந்தியாவிலுள்ள இலங்கை யேயன்றி தென்னிலங்கையல்ல!

13. மேலும் சேதுக் கால்வாய்ப் பகுதியிலுள்ள மணல் திட்டை தோண்டிப் பார்த்தால் 20 மீட்டர்களுக்கு மேல் மணலே செல்கிறது. பாறைகளைக் கொண்டு பாலம் அமைந்திருந்தால் பாறைகள் அல்லவா வரவேண்டும். எனவே, இது இயற்கையான மணல் மேடு என்பது மலை மேல் விளக்காக விளங்குகிறது.

14. வால்மீகி இராமாயணத்தில், இலங்கையில் போர் முடிந்த பின் நாடு திரும்பிய இராமன், தான் கட்டிய (பாலத்தை) அணையைத் தானே அழித்துவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருக்க இராமன் கட்டிய பாலம் இன்னமும் இருக்கிறது என்பது மோசடியல்லவா?

இராமாயணத்தையும், இராமனையும் மக்கள் நம்புகிறார்கள் என்றால், இராமர் பாலமும் இன்னமும் இருக்கிறது என்று கூறுவது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது அல்லவா? அப்படியாயின் இராமர் பாலம் இருக்கிறது; அதை இடிக்கக்கூடாது என்பவர்கள் தானே இராமனுக்கு எதிரானவர்கள்? விந்திய மலைப் பகுதி அல்லது மஹாநதிப் பகுதிகளை ஆய்வு செய்தால், இராமாயணத்தில் குறிக்கப் படும் இலங்கையை அடையாளங்காண முடியும். அமர்க் கண்ட் அல்லது சோட்டா நாக் பூர் பகுதியில்தான் இலங்கை இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் பலன் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்ல, கடல் பகுதியில் இராமர் பாலம் அமைக்கப்பட்டதாக இராமாயணம் அறிவிக்கவில்லை. கடல் பகுதியில் பாலம் அமைக்கவும் இயலாது.

எனவே, அயோத்தியின் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டின் அண்டை நாடாகவே இலங்கை இருந்திருக்க முடியும். மாறாக, இந்தியாவின் தென்கோடியில் உள்ள தென் இலங்கையாக இருக்க வாய்ப்பே இல்லை.

மேற்கண்ட தடயங்களை ஒரு முறைக்கு பல முறை படித்தால் யாரும் இவ்வுண்மையை அய்யமற அறிந்து தெளிய முடியும்.

அப்படியிருக்க சம்பந்தமில்லாத தென் இலங்கையோடு இராமாயணத்தை முடிச்சுப் போட்டு, இயற்கையான மணல் திட்டை இராமர் பாலம் என்று வீண்சிக்கலை உருவாக்குவது, சுயநலமிகள் மற்றும் மத வெறியை ஊட்டி, மக்களை உசுப்பி, அதை வாக்காக மாற்றி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அலையும் ஆதிக்கக் கூட்டத்தினரின் அடாவடிச் செயல்பாடாகும். இதற்கு உச்ச நீதிமன்றம் உடந்தையாகக் கூடாது என்பதே நீதியாளர்களின் எண்ணம். நாட்டின் நலன் விரும்புவோரின் நாட்ட மும் அதுவேயாகும்.

இல்லாத ஒரு கற்பனைக் காரணத்திற்காக ஒரு இணையற்ற திட்டத்தை முடக்காமல், தடை ஆணை விரைவில் நீக்கப்பட்டு, திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட அனைத்து மக்களும் துணை நிற்க வேண்டும். அதற்கு இக்கருத்துகள் தீவிரமாகப் பரப்பட்டு மக்களுக்கு தெளிவு உண்டாக்கப்பட வேண்டும்; உண்மை விளக்கப் பட வேண்டும்.

(நிறைவு)

மஞ்சை வசந்தன்


தரவு - விடுதலை

1 comments:

October 25, 2007 at 11:04 AM குசும்பன் said...

வட இலங்கை என்றால் என்னங்க? அது போல் எதும் பகுதி இப்பொழுதும் இருக்கா. புரியவில்லையே!