Sunday, October 14, 2007
இயக்குனர் சாமி ஒரு சைக்கோ!-பத்மபிரியாவின் அழுகை பேட்டி!
டைரக்டர் சாமியிடம் அறைவாங்கிய பத்மப்ரியா, பத்திரிகையாளர்களை சந்தித்தார். நடந்த சம்பவம் குறித்து படபடப்புடன் பேச ஆரம்பித்தார்.
படப்பிடிப்பு முடிந்து காரில் ஏறப்போன என்னை அழைத்த சாமி, அத்தனை பேர் முன்னிலையிலும் பளார் என்று கன்னத்தில் அறைந்தார். அவரின் இந்த செயல், பல நாட்களாக பிளான் பண்ணி செய்தது போல் இருந்தது. நான் ஒரு மிடில்கிளாஸ் பொண்ணு. அப்படியே நடுங்கி போய்விட்டேன். நானும் 21 படங்களில் நடிச்சு முடிச்சுட்டேன். பல விருதுகள் வாங்கியிருக்கேன். இப்படி ஒரு மோசமான அனுபவம் என் வாழ்க்கையில் நடந்ததே இல்லை. எனக்கு அழுகை சரியா வரலை. அழ வைக்கதான் அடித்தேன் என்று பத்திரிகைகளில் சொல்லியிருக்கிறார். என்னை அறையும்போது எந்த கேமிராவும் ஓடவில்லை. எந்த லைட்டுகளும் ஆன் செய்யப்பட்டிருக்கவில்லை. நான் டைரக்டரிடம் அடிவாங்கிதான் அழ வேண்டும் என்ற அவசியமும் இல்லை. என்னை வைத்து படம் எடுத்த டைரக்டர் சேரனிடம் கேட்டுப்பாருங்கள். அவர் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்திற்கு 8 மாதங்கள் கால்ஷீட் கொடுத்தவள் நான். அந்த படத்தில் நான் அழாத அழுகையா? பல டைரக்டர்களிடம் வொர்க் பண்ணியிருக்கேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். எல்லா டைரக்டர்களுக்கும் வொர்க் நேரத்தில் கோபம் வரும். ஆனால், இப்படி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை. இது திட்டமிட்ட தாக்குதல். அவர் ஒரு சைக்கோ. மூச்சுவிடாமல் பேசுகிறார் பத்மபிரியா. தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும்-
இப்படி திட்டமிட்டு அவர் உங்களை தாக்குவதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே? வேறு ஏதாவது செக்சுவல் டார்ச்சர் கொடுத்து அது நிறைவேறவில்லை என்பதால் இப்படி செய்தாரா?
அதை எப்படி நான் வெளிப்படையா சொல்லமுடியும். நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அவர் எனக்கு டார்ச்சர் கொடுத்தார். திரும்ப திரும்ப டார்ச்சர் கொடுத்தார். படப்பிடிப்பில் என்னுடைய அம்மா அப்பாவை கூட என்னோடு வரக் கூடாது என்றார். ஏன் அப்படி சொல்லணும்? நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
உங்களை அடித்ததற்காக போலீசில் புகார் செய்வீர்களா?
இல்லை. நான் நடிகர் சங்கத்திலும், பெப்சியிலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கேன். அவங்க என்ன சொல்றாங்களோ, அதுக்கு கட்டுப்படுவேன். இந்த விஷயத்தில் அவங்க நிச்சயமா நல்ல முடிவை எடுப்பாங்கன்னு நம்புகிறேன்.
ஒரு பெண்ணாகிய உங்களை கைநீட்டி அடிச்சிருக்காரு? மாதர் சங்கம், பெண்ணுரிமை சங்கம் போன்ற அமைப்புகளின் உதவியை நாடுவீர்களா?
இது முழுக்க முழுக்க ஒரு நடிகைக்கும், டைரக்டருக்கும் உள்ள பிரச்சனை. இதை எதுக்கு அங்கெல்லாம் கொண்டு போகணும்? நான் பெண்ணியவாதி இல்லை. இந்த விஷயத்தை திசை திருப்பாதீங்க. ப்ளீஸ்...
முடிவா என்ன சொல்றீங்க?
அந்த டைரக்டருக்கு எல்லார் கூடவும் பிரச்சனை இருக்கு. அந்த படத்தின் புரடக்ஷன் மேனேஜரை கேளுங்க, அவர் கூடவும் பிரச்சனை. மறுபடியும் சொல்றேன் அவர் ஒரு சைக்கோ. இந்த படத்திற்கு இதுவரைக்கும் 67 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கேன். என்னுடைய போர்ஷன் எல்லாத்தையும் எடுத்து முடிச்சதுக்கு பிறகுதான் என் மீது கைநீட்டியிருக்கார். இன்னும் என்னுடைய போர்ஷன் பாக்கியிருக்கிறதா பேட்டியிலே சொல்லியிருக்காரு. மறுபடியும் படப்பிடிப்புக்கு அழைச்சா போய் நடிச்சு கொடுப்பேன். என்னால படம் நிற்க கூடாது. ஆனா, படப்பிடிப்புக்கு நான் திரும்பவும் போகிற பட்சத்தில் என் உயிருக்கு பாதுகாப்பு வேணும்!
மறுபடியும் ஒருமுறை கண்களை துடைத்துக் கொள்கிறார் பத்மபிரியா. பேட்டியின்போது நடிகர் சங்க பொருளாளர் கே.என்.காளை மற்றும் பெப்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தரவு - தமிழ்சினிமா.காம்
Labels:
திரையுலகம்
Subscribe to:
Post Comments
0 comments:
Post a Comment