பழ.நெடுமாறன் பிரத்யேக பேட்டி

ஈழப்பிரச்சனை: இந்திராகாந்திக்கு புரிந்தது...இப்போது உள்ளவர்களுக்கு புரியவில்லை!



மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்த மாநகராட்சி பள்ளி மாணவன் மாதிரி, எளிமையும் பெருமையாக நிற்கிறது அந்த வீடு! கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறோம்... குரல்வளைக்கு குறிவைக்கும் டாபர்மேன்கள் இல்லை. யாரது? போன்ற தோரணையான கேள்விகள் இல்லை. 'உள்ளே வாங்க' என்று அழைத்தது பழ.நெடுமாறனின் குரலேதான். அறையெங்கும் கலைந்து கிடக்கும் புத்தகங்களுக்கு நடுவில் பேட்டி துவங்குகிறது.

மதுரையில் இந்திராகாந்தி மீது தி.மு.க வினர் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவரை காப்பாற்றியது நீங்கள்தான். அந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி வைத்துக் கொண்டன. 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று கலைஞர் அழைத்தார். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

இந்திராகாந்தி தாக்கப்பட்ட நிகழ்ச்சி 1978-ல் நடந்தது. இந்த சம்பவம் நடந்து ஓராண்டு முடிவதற்குள்ளாகவே தி.மு.க வுடன் உறவு வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தேன். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் நானும், ஆர்.வி.சாமிநாதனும் டெல்லி சென்று இந்திராகாந்தியை சந்தித்து அரசியல் நிலைமைகள் குறித்து பேசினோம். என்னுடைய நிலைப்பாடு என்பது, தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதான் முடிவு செய்ய வேண்டும். டெல்லியில் முடிவு செய்து எங்கள் மீது அந்த முடிவை திணிக்க முடியாது. அதனால் கட்சி பலவீனப்படும். எங்கள் முடிவு தவறாக இருந்தால் கட்சி மேலிடம் தலையிட்டு அதற்கான காரணங்களை கேட்டு மாற்றும்படி சொல்லலாம். முடிவையே டெல்லி எடுக்குமானால் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்படுவதில் அர்த்தம் இருக்க முடியாது. இதற்கு இந்திராகாந்தி ஒப்புக் கொண்டார். கூட்டணி பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோடு கலந்து பேசிதான் முடிவெடுப்போம் என்றார். நாங்களும் மகிழ்ச்சியோடு திரும்பினோம்.

வந்து சில மாதங்களுக்குள்ளாகவே டெல்லியிலிருந்து செய்தி வருகிறது. கலைஞர் கருணாநிதியும், முரசொலி மாறனும், இந்திராகாந்தியை சந்தித்து பேசி கூட்டணி பற்றி முடிவு செய்துவிட்டார்கள் என்று. அதற்கு பிறகு நாங்கள் திரும்பவும் டெல்லி சென்று இந்திராவை சந்தித்தோம். எங்களிடம் ஒன்று சொல்லிவிட்டு அதற்கு மாறாக செய்துவிட்டீர்களே, இதனால் கட்சி பலவீனப்படுமே? நாம் தனியாக நின்றிருந்தாலே குறைந்த பட்சம் 15 இடங்களை கைப்பற்றி இருக்கலாமே? கூட்டணி சேர்ந்து அதே 15 தொகுதியை வாங்கி என்ன பயன்? இப்படி எவ்வளவோ வாதாடி பார்த்தும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. முடிவு செய்தால், செய்ததுதான். அதை மாற்றிக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு நான் என்னுடைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை அன்றைய தினமே ராஜினாமா செய்தேன். இதுதான் நடந்தது. எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அன்று என்னுடைய முடிவை எதிர்த்து என்னுடைய நண்பர் மூப்பனாரும், ப.சிதம்பரமும் எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுக்கிற முடிவுகளை எதிர்ப்பவர்கள் உண்மை காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியாது என்று சொன்னார்கள்.

ஆனால் அதே மூப்பனார் 16 வருடம் கழித்து நான் என்ன காரணத்தை சொல்லிவிட்டு காங்கிரசிலிருந்து வெளியேறினேனோ அதே காரணத்தை சொல்லிவிட்டு காங்கிரசிலிருந்து வெளியேறினார். நரசிம்மராவ் எங்களை கேட்காமல் அ.தி.மு.க வுடன் உறவு வைத்துக் கொண்டதாக காரணம் சொன்னார். அவர் இந்த சிந்தனைக்கு வருவதற்கு 16 வருடங்கள் ஆனது.

இந்திராகாந்தியை காப்பாற்றியவர் என்ற முறையிலும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற முறையிலும் சோனியாவை சந்தித்து இலங்கை பிரச்சனை குறித்து நீங்கள் பேசியிருக்கலாமே?

அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கருதுகிறேன். உண்மையில் ஈழப் பிரச்சனையில் இந்திராகாந்தி என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தார். அதற்கு நேர்மாறாக இப்போது என்னென்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் காரர்களே புரிந்து கொண்டார்களா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. 1977-ல் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக அமிர்தலிங்கம் இருந்தார். அவரும் அவருடைய துணைவியாரும் சென்னைக்கு வந்தார்கள். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர். இங்கு எல்லா தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டார். அப்போது அவரை நானே நேரில் சென்று சந்தித்து, 'நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தமிழர்கள் என்ற முறையில் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு' என்று தெரிவித்தேன். 'நீங்கள் டெல்லியிலே சென்று இதற்கான லாபியை நடத்துங்கள். அப்போதுதான் இந்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என்றேன். அவர், 'டெல்லியில் யாரையும் தெரியாது' என்று சொன்னதற்கு, 'நானே டெல்லியில் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன்' என்றேன். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டபின் டெல்லி சென்றோம்.

அப்போது மொரார்ஜிதேசாய் பிரதமராக இருந்தார். நான், ஜனார்த்தனம், அமிர்தலிங்கம், அவரது துணைவியார் நான்கு பேரும் இந்திராவை சந்தித்தோம். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டவர் அமிதலிங்கத்திடம், 'முதலில் இந்த பிரச்சனையை நீங்கள் சர்வதேச அளவில் விளக்க வேண்டும்' என்றார். 'வெளிநாடுகளில் யாரையும் தெரியாதே' என்று கூறிய அமிர்தலிங்கத்துக்கு ஒரு பள்ளி ஆசிரியை போல பாடம் எடுத்த இந்திராகாந்தி, வெளிநாடுகளில் யார், யாரை சந்திக்க வேண்டும், எதைப்பற்றி எப்படியெல்லாம் பேச வேண்டும், என்பதையெல்லாம் சுமார் ஒரு மணிநேரம் விளக்கமாக எடுத்துக் கூறினார். பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ஏ.ஆர்.அந்துலேவை அழைத்து பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட செய்து அதில் அமிர்தலிங்கத்தை பேச வைத்தார். சுமார் ஒரு மணிநேரம் ஈழப்பிரச்சனை குறித்து ஆங்கிலத்தில் அருமையாக விளக்கினார் அமிர்தலிங்கம். முடிந்ததும் கட்சி தலைவர்கள் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் என்று கூறப்பட்டது. அப்போது, காங்கிரசின் எதிர்கட்சி தலைவராக இருந்தவர் எஸ்.பி.சவான். அவர் ஒரு கேள்வி கேட்டார். 'நீங்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து அங்கு போனவர்கள்தானே? அங்கு போய் தனிநாடு கேட்டால் என்ன நியாயம்?' என்று அவர் கேட்டபோது, நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் அவர் மூன்றாண்டு காலம் வெளிநாட்டு அமைச்சராக இருந்தவர். இலங்கை பக்கத்து நாடு. அங்கு ஈழத்தமிழர்கள் பூர்விக குடிகள் என்பது கூட அவருக்கு தெரியவில்லை.

அமிர்தலிங்கம் சவானின் கேள்விக்கு விளக்கமாக பதில் சொன்னார். இந்த கூட்டத்தை பற்றி நான் இந்திராகாந்தியிடம் விளக்கமாக சொன்னேன். யார் யார் என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பது பற்றி சொல்லிவிட்டு சவான் கேட்ட கேள்வியையும் சொன்னேன். 'மூன்றாண்டு காலம் வெளிநாட்டு அமைச்சராக இருந்தவர் இந்த உண்மையை கூட தெரிந்து வைத்திருக்கவில்லையே, மிகவும் வருத்தமாக இருக்கிறது' என்று நான் சொன்னபோது இந்திராகாந்தி விழுந்து விழுந்து சிரித்தார். 'என்ன செய்வது? இப்படிப்பட்ட ஆட்களை வைத்துக் கொண்டுதான் நாமும் அரசியல் பண்ண வேண்டியிருக்கிறது' என்று சொன்னார். அன்று தொடங்கி நான் பார்க்கிறேன். இந்திராகாந்தி இந்த பிரச்சனையில் தெளிவாக இருந்தார்.

1983-ம் ஆண்டு ஜுலை மாதம் கொழும்பிலே கலவரம் ஏற்பட்டு அங்கு மூவாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அன்று வெளிநாட்டு அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்மராவையும், ராஜாங்க அமைச்சர் ஜி.பார்த்தசாரதியையும் அனுப்பி வைத்தார். இலங்கை ஒரு சின்ன நாடு. அங்கு நடந்த பிரச்சனைக்கு அவர் அனுப்பி வைத்த இருவரும் அன்றைக்கு இந்தியாவின் மிக முக்கியமான அமைச்சர்கள். இதன்மூலம் அவர் ஜெயவர்த்தனாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கு உணர்த்திய விஷயம் என்னவென்றால், ஈழத்தமிழர் பிரச்சனையை இந்தியா முக்கியமான பிரச்சனையாக கருதுகிறது என்பதுதான்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துவிட்டு பிரதமர் இந்திராகாந்தி ஆற்றிய உரையில், 'இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கிறது' என்றார். அதன்பின் இந்திராகாந்தியின் ஆலோசைனை பேரில், பார்த்தசாரதி பல முறை இலங்கை அரசோடு பேசினார். இலங்கை தமிழர்களுக்கும் அரசுக்கும் இடையில் வட்டமேஜை மாநாடு நடந்தது. அனெக்ஸ் சி என்ற ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஜெயவர்த்தனா அதை ஒப்புக் கொள்ள தயங்கினார். பிறகு இந்திராகாந்தியின் நிர்பந்தத்தின் பேரில் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்தார். ஆனால் அதை அவர் நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை.

உடனே இந்திராகாந்தி, அனைத்து தமிழ் போராளி குழுக்களையும் அழைத்து அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்க செய்தார். இந்திய ராணுவம்தான் அந்த பயிற்சியை அளித்தது. அதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை வருதற்குள்ளாகவே இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு பிறகு ராஜீவ்காந்தி பிரதமராக வந்தார். அவருக்கு இந்த பிரச்சனை பற்றி மட்டும் அல்ல, அரசியலை பற்றியும் எதுவும் தெரியாது. இந்த பிரச்சனை பற்றி எல்லாம் தெரிந்த பார்த்தசாரதி ராஜினாமா செய்துவிட்டு போகும்படி செய்யப்பட்டார். வெளியுறவு அதிகாரியாக இருந்த ஏ.பி வெங்கடேஸ்வரன் பற்றி வெளிப்படையாக செய்தியாளர்கள் கூட்டத்தில் ராஜீவ்காந்தி விமர்சனம் செய்ய, அவரும் பதவி விலகி போய்விட்டார். ஆக இந்த பிரச்சனையை தெளிவாக புரிந்து வைத்திருந்த ஆலோசகர்கள் அவருக்கு அருகில் இல்லை.

அதற்கு பிறகு வெளியுறவு செயலாளர் பதவியேற்ற பண்டாரி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பேச்சு வார்த்தைக்கு. இந்த வேறுபாட்டை நீங்கள் நன்கு அறிய வேண்டும். இந்திராகாந்தி காலத்தில் இரண்டு சீனியர் டிப்ளோமேட் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ராஜீவ் காலத்தில் ஒரு அதிகாரி அனுப்பி வைக்கப்பட்டார். இப்படி செய்ததன் மூலம் இந்த பிரச்சனைக்கு உள்ள முக்கியத்துவத்தை தெரிந்தோ தெரியாமலோ குறைத்துவிட்டார். அன்றிலிருந்து இன்று வரை அதிகாரிகளை வைத்துதான் பேசுகிறார்கள். இன்னமும் சிவசங்கரமேனமும், எம்.கே.நாராயணனும்தான் அனுப்பப்படுகிறார்கள். இந்திய அரசில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் யாரும் அங்கு அனுப்பப்படவில்லை. ஆக, இந்தியா இந்த பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாக கருதவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இப்போது ஏற்பட்டுள்ள அவ்வளவு குழப்பங்களுக்கும் இதுவும் ஒரு காரணம்.

ஈழத்தமிழர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலமாக மருந்து பொருட்கள் அனுப்புவது குறித்து உண்ணாவிரதம் இருந்தீர்கள். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கலைஞர் கேட்டுக் கொண்டும் அதற்கு ஒப்புக்கொள்ளாத நீங்கள், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டதும் ஒப்புக் கொண்டது ஏன்?

இந்த பிரச்சனை சென்ற ஆண்டு ஜனவரியில் இருந்து நடந்து வருகிறது. ஏழு மாத காலமாக நாங்கள் சேகரித்த உணவுப் பொருட்களையும், மருந்து பொருட்களையும் ஈழத்தமிழர்களுக்கு அனுப்ப அனுமதி கேட்டு வருகிறோம். அதற்கு எந்த வித அனுமதியும் அளிக்கப்படவில்லை. நாங்கள் அரும்பாடு பட்டு சேகரித்த பொருட்களை வைக்க கூட இடமில்லாமல் பாதுகாக்க வேண்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் அவற்றை நாங்களே எடுத்துச் செல்வது என்று முடிவு செய்தோம். நாங்கள் அங்கு சென்றபோது எங்களுக்கு படகுகள் கொடுக்கக்கூடாது என்று மீனவர்கள் தடுக்கப்பட்டார்கள். யாரும் எங்களுக்கு படகு கொடுக்க முன்வராத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை கைது செய்யவும் உத்தரவிடாமல், எங்களை அவமானப்படுத்தியது இந்த அரசு. நான் உடனே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டேன். அதற்கும் அனுமதிக்கப்படாத நிலையில் சென்னை கோயம்பேட்டில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டேன். அப்போது உண்ணாவிரதத்தை தடுக்க முயன்ற காவல்துறை என்னை கைது செய்ய முயன்றது. 'இது எங்களுக்கு சொந்தமான இடம். பொது இடத்தில் உண்ணாவிரதம் இருந்தால்தான் என்னை கைது செய்ய முடியும்' என்று நான் வாதிட்டேன். அதற்குள் விஷயத்தை கேள்விப்பட்ட பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, வைகோ, திருமாவளவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் என்னை கைது செய்யாமல் திரும்பி போனது காவல்துறை. இல்லையென்றால் அந்த உண்ணாவிரதம் தடுக்கப்பட்டிருக்கும். அதன்பின் எனக்கு கடிதம் அனுப்பிய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, உண்ணாவிரதத்தை கைவிடும்படியும், நேரில் இதுகுறித்து பேசலாம் என்றும் கூறியிருந்தார். அதன்பின் ராமதாஸ், வைகோ போன்றவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க உண்ணாவிரதத்தை கைவிட்டேன். ஆனால், இன்றுவரை என்னை அழைத்து பேசுவதாக வாக்குறுதியளித்த தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் இன்னும் அழைக்கவில்லை. நானும் அவரை சந்திக்க முறைப்படி நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதோடு இந்த பிரச்சனையை நாங்கள் விடப்போவதில்லை. எப்படியும் நாங்கள் சேகரித்த பொருட்களை ஈழத்தமிழர்களுக்கு அனுப்பியே தீருவோம்.

அனுமதியில்லாமல் இந்த பொருட்களை எடுத்துக் கொண்டு உங்களால் இலங்கைக்கு சென்றிருக்க முடியும். அந்த துணிச்சல் உங்களிடம் இருக்கும்போது அரசிடம் அனுமதி கேட்காமலே அவற்றை இலங்கைக்கு கொண்டு சென்றிருக்கலாமே?

நிச்சயமாக முடிந்திருக்கும். இதற்கு முன்பு பலமுறை இலங்கைக்கு அனுமதியில்லாமல் சென்றிருக்கிறேன். நான் வந்தபிறகு பத்திரிகைகளுக்கு அளிக்கிற பேட்டிகளை வைத்துதான் நான் இலங்கை சென்ற தகவலே போலீசுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இது எனக்கு பெரிய விஷயமல்ல. ஆனால், ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களும், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் கிடைக்காமல் அவர்கள் படுகிற வேதனைகளையும் மக்களுக்கு புரியவைக்கவும், ஈழப்பிரச்சனை குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும்தான் இந்த போராட்டம்.

கலைஞர் தலைமையிலான தி.மு.க, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.முக இரண்டுமே ஈழத்தமிழர்கள் விஷயத்தில் ஆதரவாக இல்லை என்று சொல்கிறீர்கள். தி.மு.க-அ.தி.மு.க வை விட்டால் வேறு கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாத சூழ்நிலையில், ஈழப்பிரச்சனையில் எதிர்காலத்தில் தமிழக அரசின் ஆதரவை எப்படி பெறுவீர்கள்?

அதற்கு ஒரு மாற்று வேண்டும் என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம். தொடர்ந்து பேசி வருகிறோம்.

உங்கள் இயக்கமும் தேர்தலில் நின்று அதிகாரத்தை கைப்பற்றினால் இன்னும் அழுத்தமாக உரிமைக்குரல் எழுப்பலாமே?

தமிழர் தேசிய இயக்கம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், தி.மு.க, அ.தி.மு.க வுடன் சேர்ந்து நிற்க விரும்பவில்லை. நாங்கள் வலிமையடையும் வரை பொறுமையாக இருப்போம். அல்லது மூன்றாவது அணியை உருவாக்குவது பற்றி யோசிப்போம். தமிழர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் இந்த இரண்டு இயக்கங்களும்தான். சட்டமன்றத்தில் மக்கள் பிரந்ச்சனையை பற்றியா இவர்கள் பேசுகிறார்கள். இந்த அம்மா வீட்டில் யாரோ நுழைந்து விட்டானாம். அதை பற்றி பேசி இருவரும் அடித்துக் கொள்ளத்தான் நேரம் ஒதுக்குகிறார்கள். நாங்கள் மக்கள் பிரச்சனைகளை மையமாக வைத்து போராடிக் கொண்டிருக்கிறோம். எல்லா கட்சிகளையும் எங்களுடன் இணைத்துக் கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் சட்டமன்றத்துக்கு போனால் கூட எங்கள் கருத்துக்களை முன் எடுத்து செல்ல அந்த மன்றத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவோமே தவிர, பதவி சுகத்துக்காக அங்கே செல்ல வேண்டும் என்று நினைக்க மாட்டோம்.

வைகோ, ராமதாஸ், திருமாவளவன், இவர்களை தொடர்ந்து தற்போது புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறாரே?

நல்லதுதானே? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அதை வரவேற்போம்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த வன்னி அரசு என்பவர் மீது விடுதலைபுலிகளுக்கு ஆயுதங்கள் கடத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டாரே?

மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. பால்ரஸ் கடத்தினார்கள், 500 சி.சி என்ஜினை கடத்தினார்கள் என்று சிலர் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். இன்றைக்கு கவனித்தீர்களா? அநுராதபுரத்தில் இலங்கை விமான படையினர் மீது வான் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் புலிகள். அவர்களா 500 சிசி என்ஜினையும், பால்ரஸ் குண்டுகளையும் கடத்திவர சொல்லியிருப்பார்கள்? உண்மையில் நடப்பது வேறு. புலிகளுக்கு எதிரான தடை சட்டம் விரைவில் காலாவதியாக இருக்கிறது. அந்த நேரத்தில் இதுபோன்ற சில பொய் வழக்குகளை போட்டு, அந்த சட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வைப்பதற்காக புனையப்படுகிற சம்பவங்கள்தான் இவைகள்.

சிங்களப்படம் எடுப்பேன் என்று நடிகை ராதிகா சொல்லியிருக்கிறாரே?

சினிமாக்காரர்களை பற்றி நான் என்ன கருத்து சொல்வது? வேண்டாம், விடுங்கள்...

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு பாதுகாப்பு இருக்காது என்று அந்நாட்டு அரசு கருதுகிறது. தற்போது எழுப்பப்படும் பிரச்சனைகளில் இலங்கை அரசின் மறைமுக பங்கு இருக்கும் என்று கருதுகிறீர்களா?

ஆங்கிலேயர்கள் காலத்திலேயே பேசப்பட்ட திட்டம் இது. பின்பு நேரு தலைமையில் மந்திரி சபை கூடி ஒப்புக் கொண்ட முடிவு இது. அப்போது சிறிமாவோ பண்டாரநாயகா அங்கே பிரதமராக இருந்தார்கள். அவர்கள் உடனே நேருவுக்கு கடிதம் எழுதினார்கள். 'இந்த கால்வாய் திட்டம் வந்தால் கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவமே போய்விடும். எங்கள் பொருளாதாரமே அழிந்து போய்விடும். ஒரு சின்ன நாட்டினுடைய பொருளாதாரத்தை நீங்கள் அழிக்கலாமா?' என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அந்த திட்டத்தை தொடராமலே விட்டுவிட்டார் நேரு. பிறகு நான் அப்போது சட்டமன்றத்தில் இந்த திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும் என்று பேசினேன். அதன்பிறகும் இலங்கையின் நெருக்கடி காரணமாக சேது கால்வாய் திட்டத்தை அப்படியே விட்டுவிட்டார்கள்.

இந்த திட்டம் தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம். சேது கால்வாய் திட்டம், ஈஸ்ட் கோஸ்ட் ரோடு திட்டம், அகல ரயில்பாதை திட்டம், இவை தென்மாவட்டங்களில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட திட்டங்கள். இதில் சேது கால்வாய் திட்டத்தை தவிர, மற்றவை நிறைவேற்றப்பட்டு விட்டன. சேது கால்வாய் திட்டமும் நிறைவேறினால்தான் தென் மாவட்டங்களில் நாம் நினைக்கிற வளர்ச்சியை அடைய முடியும். இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். சில பத்திரிகைகள் கூட இந்த திட்டத்திற்கு எதிராக எழுதுகின்றன. இலங்கை அரசின் பின்னணி இல்லாமல் இந்த செயல்கள் இல்லை. இப்போது மதரீதியாக இந்த திட்டத்தை முடக்க நினைக்கிறார்கள். இராமர் பாலம் என்பதெல்லாம் அந்த வகையில் கிளப்பப்படுகிற விஷயங்கள்தான்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் சுனாமி வந்ததனால் புலிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டு அதனால் சில பின்னடைவுகள் ஏற்பட்டுவிட்டதா? சுனாமி வராமல் இருந்திருந்தால் இலங்கை ராணுவத்தை இன்னும் பலமாக தாக்கியிருப்பார்களா?

இதுபோன்ற இயற்கை பேரழிவுகள் மட்டுமல்ல... இந்திய ராணுவம் அங்கு போயிருக்காவிட்டால் கூட எப்போதோ ஈழப்பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கும். இந்திய ராணுவத்தையும், இலங்கை ராணுவத்தையும் ஒரே நேரத்தில் அவர்கள் சமாளிக்க வேண்டியதாகிவிட்டது. எல்லாவற்றையும் மக்கள் துணையோடு தடுத்து இன்னமும் புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பொடா சட்டம் திரும்ப பெறப்பட்டு விட்டது. சிறையில் நீங்கள் சந்தித்த அனுபவங்களை எழுதும் எண்ணம் இருக்கிறதா?

பொடாவின் போது சிறையில் இருந்த அனுபவங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன். பல உண்மைகளை அது உலகுக்கு சொல்லும்.

இலங்கை பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் பிரச்சனை மட்டுமல்ல இது. இந்தியாவின் பாதுகாப்பையும் பொறுத்த பிரச்சனை இது. இந்திரா காந்திக்கு புரிந்தது. தற்போது உள்ளவர்களுக்கு புரியவில்லை. பாகிஸ்தான், சீன அரசுகளோடு இந்தியாவுக்கு சண்டை வந்தபோது நேரு காலத்திலேயே ஒரு முடிவு எடுத்தார்கள். பெரிய கனரக தொழிற்சாலைகள், குறிப்பாக ராணுவ ஆயுத தொழிற்சாலைகளை வட இந்தியாவில் அமைக்கக்கூடாது. பாதுகாப்பாக இருக்காது. ஒருபக்கம் பாகிஸ்தான் தாக்கலாம். அல்லது சீனா தாக்கலாம். அதை தென்னிந்தியாவில் அமைப்பதுதான் பாதுகாப்பானது என்று கருதி விமான உற்பத்தி தொழிற்சாலையை பெங்களுரிலும், ஆவடி டாங்கி தொழிற்சாலையை சென்னையிலும், ஹெவி பாய்லர்ஸ் தொழிற்சாலையை திருச்சியிலும், அமைத்தார்கள்.

இப்படி பாதுகாப்பு கருதி அனைத்தும் இங்கே அமைக்கப்பட்டது. தற்போது இலங்கையில் சீனாக்காரனும், பாகிஸ்தான்காரனும் ஊடுருவி நிற்கிறானே? தென்னிந்தியாவில் பாதுகாப்பற்ற சூழ்நிலை வந்ததற்கு யார் காரணம்? சென்னையிலோ, பெங்களுரிலோ, கல்கத்தாவிலோ சில நாடுகளின் துணை தூதரகங்களை அமைக்க அனுமதி கொடுத்திருக்கிறது இந்தியா. பாகிஸ்தான் தூதரகத்தை மட்டும் சென்னையில் வைப்பதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. பிடிவாதமாக மறுத்தது. ஏனென்றால் தென்பகுதியில் பாகிஸ்தானின் ஊடுருவல் வந்துவிடக்கூடாது என்பதால்தான்.

இந்திராகாந்தி இருக்கும்போது திரிகோணமலையில் அமெரிக்காவின் கடற்படை தளம் அமைக்கும் முயற்சி நடந்தது. 'இந்துமாக்கடல் பகுதியில் எந்த வல்லரசாவது ராணுவ தளம் அமைக்க முற்பட்டால், அது இந்தியாவுக்கு எதிரான செயல். இதை அனுமதிக்க முடியாது' என்று இந்திராகாந்தி எச்சரித்தார்கள். ஜெயவர்த்தனா அடங்கிவிட்டார். அது மாதிரியல்லவா இப்போது இந்தியா எச்சரிக்க வேண்டும்? 'நீ பாகிஸ்தானில் ஆயுதம் வாங்கிவிடுவாயா?' என்று எச்சரித்தால் இலங்கை அடங்கிவிடுமே. இலங்கை ஏன் இவ்வளவு ஆயுதங்களை வாங்குகிறது. பல கோணத்தில் ஏன் இந்தியா பார்க்கவில்லை. இதன் விளைவு மிக மோசமாக இந்தியாவை தாக்கும். பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கவியரசு கண்ணதாசனோடு நெருங்கி பழகியவர் நீங்கள். அவரைப்பற்றிய நினைவுகளில் ஏதாவதொன்றை பகிர்ந்து கொள்ளுங்களேன்?.

கண்ணதாசன் என்னுடைய நெருங்கிய நண்பர் மட்டுமல்ல. என்னை தன் சொந்த சகோதரன் போல் வைத்திருந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்திரா காங்கிரசிற்கு அவர் போனபிறகு, நான் காமராஜரோடு இருந்த போதிலும் எங்கள் நட்பு அப்படியே இருந்தது. பல நேரங்களில் அரசியலில் எனக்கு பெருந்துணையாக இருந்தார். இறுதிகாலத்தில் நடந்த சம்பவம் மறக்க முடியாது. அவருக்கு உடம்பு சரியில்லாமல் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்கிற நேரம். நான் ஈரோட்டில் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு திரும்ப தாமதாமாகிவிட்டது. தொலைபேசியில் அவரிடம் வழியனுப்ப வர முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்தேன்.

'பரவாயில்லை. வரும்போது உனக்கு என்ன வாங்கி வரவேண்டும்?' என்று கேட்டார். 'ஒன்றும் வேண்டாம். நீங்கள் நல்லபடியாக போய் வாருங்கள்' என்றேன். 'சொல்லுங்க ஏதாவது?' என்றார் பிடிவாதமாக. 'சொல்லட்டுமா?' என்றேன். 'சொல்லுங்க!' என்றார். 'நீங்க வரும்போது ஏதாவது அமெரிக்க பொண்ஜாதியோடு வந்திடாதீங்க' என்றேன். தொலைபேசியில் அவர் சிரித்த சிரிப்பு இருக்கிறதே... இன்னும் கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

சந்திப்பு- ஆர்.எஸ்.அந்தணன்
படங்கள்- பிரகதீஷ்வரன்.
தரவு - தமிழ்சினிமா.காம்

இராமாயணத்தில் கூறப்படுவது இந்த இலங்கை அல்ல - 2

பாகம் 1

காலால் நடந்துதான் செல்லவேண்டும் என்ற சூழலில், காட்டில் திரிந்த இராமன், இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.
மேலும், இந்தியாவில் பல அரசுகள், பல மன்னர்களால் ஒவ்வொரு பகுதியும் ஆளப்பட்டு அந்தக் காலத்தில், ஒரு நாட்டைவிட்டு, மற்றொரு நாட்டிற்கு இராமன் முதலானோர் வர வாய்ப்பும் இல்லை; வரவேண்டிய கட்டாயமும் இல்லை; வருவதும் கடினம். எனவே, அயோத்தியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த காட்டில்தான் அவர்கள் வாழ்ந்திருக்க முடியும்.

5. பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்துவிட்டு வா! என்பதுதான் தசரதனின் கட்டளை. ஒரு அரசன் காட்டுக்குப் போ என்று கட்டளை யிட்டால் என்ன அர்த்தம்? அவனது ஆளுகைக்கு உட்பட்ட காட்டுக்குப் போ என்பதுதானே? ஒரு அரசு - நாடு, காடு என்ற இருபெரும் பகுதிகளை உடையது. மன்னர்கள் காடுகளுக்குச் சென்று வேட்டையாடுவர். முனிவர்கள் காடுகளுக்குச் சென்று தவம் மேற்கொள்வர் என்பதே மரபாகச் சொல்லப்படும் செய்தி. அதன் வழி நோக்கின், தசரதனின் ஆளுகைக்கு உட்பட்ட, அவனது நாட்டை ஒட்டியுள்ள காட்டிற்கு மரவுரி போன்ற தவக்கோலத்துடன் இராமன் சென்றான் என்பதுதானே பொருள். அப்படியாயின் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழகத்திற்கு எப்படி வரமுடியும்? ஏன் வரவேண்டும்? எனவே, இராமாயணத்தில் சொல்லப்படும் இலங்கை தென்னிலங்கை அல்ல அது வடக்கேயுள்ள இலங்கை என்பது உறுதி செய்யப்படுகிறது.

6. இராமாயணத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்களாகச் சொல்லப்படும் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன், மண்டோதரி, இந்திரஜித், சூர்ப்பநகா போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் அல்ல. வட இலங்கையில் வாழ்ந்தவர்கள் என்பதாலே அவர்களுக்கு இப் பெயர்கள் இருந்தன. தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களாயின் அவர்கள் பெயர் தமிழில் இருந்திருக்கும். இதன் வழி நோக்கினும் இந்த இலங்கையல்ல என்பது உறுதி.

7. காட்டில் இராமன் இருக்கும் இடத்திற்கு சூர்ப்பநகா சென்றாள், என்று இராமாயணத்தில் கூறப்படுகிறது. தென்னிலங்கையிலிருந்த சூர்ப்பநகா வடநாட்டிலுள்ள இராமனை எவ்வாறு அறிந்தாள்? எதற்காக வடநாட்டிற்குச் சென்றாள்? காரணமே இல்லை. அப்படியிருக்க தென் னிலங்கையிலிருந்து சூர்ப்பநகா சென்றதாகக் கூறுவது முற்றிலும் தவறு.

மேலும், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் பேசிய மொழி தமிழ். அப்படியிருக்க இவள் எப்படி வடநாட்டு இராமனுடன், லட்சுமணனு டன் பேசியிருக்க முடியும்? சவால் விட்டு வந்திருக்க முடியும்? இராமன் லட்சுமணன் தமிழ் தெரியாதவர்களாயிற்றே! சுருக்கமாகச் சொன்னால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள இராமனைப் பற்றி சூர்ப்பநகா கேள்விப்பட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை!

8. வடநாட்டில் உள்ள காட்டில் மூக்கறு பட்டு மார்பறு பட்டு மீண்டும் தென்னிலங்கைக்கு வர எத்தனை மாதங்கள் ஆகும். தன் அண்ணன் இராவணனிடம் நடந்ததைச் சொல்லி, இராவணன் சீதையைக் கவர்ந்து வர வடநாட்டிற்குச் செல்ல எத்தனை மாதங்கள் ஆகியிருக்கும். பல மாதங்களுக்குப் பிறகே இராவணன் வடநாட்டைச் சென்றடைந்திருக்க முடியும். அந்த கால இடைவெளியில் இராமன், இலட்சுமணன், சீதை ஆகிய மூவரும் காட்டில் வேறு பகுதிக்குச் சென்றிருப்பர். அப்படியிருக்கையில் இராவணன் சீதையைக் கண்டு பிடித்து எப்படி தூக்கி வந்திருக்க முடியும்?

இவ்வளவும் நடக்க வேண்டும் என்றால், அயோத்திக்கு அருகில் அயல்நாடாயிருந்த வட இலங்கையில்தான் இவை நடந்திருக்க முடியும்.

சூர்ப்பநகை ராமனை அறியவும், அவள் அவமானப்படவும், அண்ணனிடம் உடனே வந்து சொல்லவும், அண்ணன் இராவணன் உடனே புறப்பட்டு போய் சீதையைக் கொண்டு வரவும், இராமன் உடனே தூது அனுப்பி விடுவிக்கக் கேட்டுக் கொள்ளவும் அருகிலுள்ள இலங்கையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம். தென்னிலங்கையிலிருந்து இத்தனை முறை போய்வர வாய்ப்பே இல்லை. எனவே, இராமாயணத்தில் சொல்லப் படுவது தென்னிலங்கையல்ல. என்பது உறுதியாகிறது.

9. சீதையைத் தூக்கிச் சென்ற இராவணன் வான்வழியாகச் சென்றான், ஜடாயு எதிர்த்துப் போரிட்டது என்றெல்லாம் இராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அப்படியாயின் அந்தக் காலத்திலே விமானம் இருந்திருந்தால், இராமன் இலங்கைக்குச் செல்லுகையில் விமானத்திலே சென்றிருக்கலாமே. ஏன் பாலம் கட்ட வேண்டும்?

அதுமட்டுமல்ல, இலங்கையில் போர் முடிந்து இராமன் திரும்பும்போது அயோத்தியில் விமானத்தில் வந்தான் என்று சொல்லப்படுகிறது. அப்படியாயின் போகும் போது விமா னத்தில்தானே போயிருக்க வேண்டும்? ஏன் பாலம் கட்ட வேண்டும்? அப்படியாயின் இராமர் பாலம் என்பதே கட்டுக்கதை அல்லவா?

10. சஞ்சீவி மலையையே தூக்கி வரக்கூடிய வலுப் படைத்த அனுமான் இருக்கும் போது இவர்கள் ஏன் பாலம் கட்ட வேண்டும்? இராமன், இலட்சுமணன் இவர்களை பல்லக்கில் அமரச் செய்து அப்படியே அலேக்காசு தூக்கிச் சென்று அனுமார் இலங்கையில் விட்டிருப்பாரே. அப்படியிருக்க பாலம் கட்டினார்கள் என்றால், முட்டாளைத் தவிர எவன் நம்புவான்?

11. இராமர் பாலங்கட்டிய போது குரங்குகள் மலைகளைச் சுமந்து சென்று போட்டதாக இராமாயணம் சொல்கிறது. அப்படியாயின் இலங்கைக்கு எதிரிலுள்ள தமிழகக் கடலோரப் பகுதியில் அதாவது இராமேஸ்வரம் பகுதியில் மலைகள் இருக்க வேண்டும். ஆனால் இல் லையே! அப்படியிருக்க எப்படி மலைகளை பாறைகளை எடுத்துச் சென்று போட்டிருக்க முடியும்?

எனவே, மலை சூழ்ந்த வட இந்தியாவிலுள்ள இலங்கையில்தான் அது சாத்தியம். எனவே இராமாயணத்தில் குறிக்கப்படுவது இந்த இலங்கை அல்ல!

12. இராவணன் கைலாய மலையைத் தூக்கினான் என்று அவனது வல்லமையைப் பற்றிச் சொல்லப்படுகிறது. அப்படியாயின் இராவணன் வட இந்தியாவில் வாழ்ந்தவன் என்பது உறுதியாகிறது. அப்படியாயின் இராமாயணத்தில் வருவது வட இந்தியாவிலுள்ள இலங்கை யேயன்றி தென்னிலங்கையல்ல!

13. மேலும் சேதுக் கால்வாய்ப் பகுதியிலுள்ள மணல் திட்டை தோண்டிப் பார்த்தால் 20 மீட்டர்களுக்கு மேல் மணலே செல்கிறது. பாறைகளைக் கொண்டு பாலம் அமைந்திருந்தால் பாறைகள் அல்லவா வரவேண்டும். எனவே, இது இயற்கையான மணல் மேடு என்பது மலை மேல் விளக்காக விளங்குகிறது.

14. வால்மீகி இராமாயணத்தில், இலங்கையில் போர் முடிந்த பின் நாடு திரும்பிய இராமன், தான் கட்டிய (பாலத்தை) அணையைத் தானே அழித்துவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருக்க இராமன் கட்டிய பாலம் இன்னமும் இருக்கிறது என்பது மோசடியல்லவா?

இராமாயணத்தையும், இராமனையும் மக்கள் நம்புகிறார்கள் என்றால், இராமர் பாலமும் இன்னமும் இருக்கிறது என்று கூறுவது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது அல்லவா? அப்படியாயின் இராமர் பாலம் இருக்கிறது; அதை இடிக்கக்கூடாது என்பவர்கள் தானே இராமனுக்கு எதிரானவர்கள்? விந்திய மலைப் பகுதி அல்லது மஹாநதிப் பகுதிகளை ஆய்வு செய்தால், இராமாயணத்தில் குறிக்கப் படும் இலங்கையை அடையாளங்காண முடியும். அமர்க் கண்ட் அல்லது சோட்டா நாக் பூர் பகுதியில்தான் இலங்கை இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் பலன் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்ல, கடல் பகுதியில் இராமர் பாலம் அமைக்கப்பட்டதாக இராமாயணம் அறிவிக்கவில்லை. கடல் பகுதியில் பாலம் அமைக்கவும் இயலாது.

எனவே, அயோத்தியின் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டின் அண்டை நாடாகவே இலங்கை இருந்திருக்க முடியும். மாறாக, இந்தியாவின் தென்கோடியில் உள்ள தென் இலங்கையாக இருக்க வாய்ப்பே இல்லை.

மேற்கண்ட தடயங்களை ஒரு முறைக்கு பல முறை படித்தால் யாரும் இவ்வுண்மையை அய்யமற அறிந்து தெளிய முடியும்.

அப்படியிருக்க சம்பந்தமில்லாத தென் இலங்கையோடு இராமாயணத்தை முடிச்சுப் போட்டு, இயற்கையான மணல் திட்டை இராமர் பாலம் என்று வீண்சிக்கலை உருவாக்குவது, சுயநலமிகள் மற்றும் மத வெறியை ஊட்டி, மக்களை உசுப்பி, அதை வாக்காக மாற்றி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அலையும் ஆதிக்கக் கூட்டத்தினரின் அடாவடிச் செயல்பாடாகும். இதற்கு உச்ச நீதிமன்றம் உடந்தையாகக் கூடாது என்பதே நீதியாளர்களின் எண்ணம். நாட்டின் நலன் விரும்புவோரின் நாட்ட மும் அதுவேயாகும்.

இல்லாத ஒரு கற்பனைக் காரணத்திற்காக ஒரு இணையற்ற திட்டத்தை முடக்காமல், தடை ஆணை விரைவில் நீக்கப்பட்டு, திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட அனைத்து மக்களும் துணை நிற்க வேண்டும். அதற்கு இக்கருத்துகள் தீவிரமாகப் பரப்பட்டு மக்களுக்கு தெளிவு உண்டாக்கப்பட வேண்டும்; உண்மை விளக்கப் பட வேண்டும்.

(நிறைவு)

மஞ்சை வசந்தன்


தரவு - விடுதலை

இராமாயணத்தில் கூறப்படுவது இந்த இலங்கை அல்ல

சேதுக் கால்வாய்த் திட்டம் நீண்ட நாளைய முயற்சி. செயல் திட்டம் கூடிவரும் வேளையில் மதவெறிக்கூட்டமும், சுயநலக் கூட்டமும் எதையெதையோ சொல்லி, எப்படியெப்படியோ எதிர்த்து, இறுதியில் அவர் களின் கடைசிப் புகலிடமாக உச்சநீதிமன்றத்தில் நின்று உருக்குலைக்கப்பார்க்கிறார்கள்.

இதற்கு, இராமர் பாலம் என்ற இல்லாத கற்பனை அவர்களின் கையாயுதம்; இராமாயணம் அவர்களின் கவசம்; நம்பிக்கை என்று வாதிடுவது அவர்களின் வலிமை.

நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்டக் கருத்து; அது உண்மையை உறுதி செய்ய உதவாது. அவன்தான் கொலை செய்தான் என்று ஒருவருக்கு நம்பிக்கையிருக்கலாம். அவரது நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டனை வழங்க முடியுமா? என்று கேட்டால்,பெருவாரியான மக்கள் நம்புகிறார்கள் - என்ற வாடிக்கையான வாதத்தை வைப்பார் கள்.

நாவரசு என்ற, அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவ மாணவரை, ஜான் டேவிட் என்பவன்தான் கொலை செய்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை அனைவரும் நம்பினர். ஆனால், ஆதாரம் இல்லையென்று நீதி மன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்துவிட்டதே!

அப்படியென்றால் நீதிமன்றத்திற்குத் தேவை ஆதாரமேயன்றி, நம்பிக்கையல்ல.

ஆனால் அவாள் வழக்கு என்று வந்துவிட்டால், ஆதாரம் எதுவும் தேவையில்லை சட்டம், நடைமுறை, விதிமுறை எதுவும் வேண்டாம்! மனுதர்ம காலந்தொட்டு, மக்களாட்சிக் காலம் வரை இதுதான் நிலை!

செத்துப்போன பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (பெரியவாள்) கோமா நிலையில் இருந்தபோது நடந்த கனகாபிஷேகத்திற்கு வெளி நாட்டிலிருந்து தங்கம் வந்த போது அப்பெட்டியை எச் சோதனையும் செய்யாமல் அப்படியே அனுப்ப வேண்டுமென்று சுங்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இன்றளவும் அத்தங்கத்திற்கு கணக்கில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு இது தெரிந்தாலும் அது கண்டு கொள்ளாது. காரணம் இது அவாள் சமாச்சாரம்!

ஆனால், குப்பனும் சுப்பனும் அரை பவுன் எடுத்து வந்தால், சுங்கத் துறை சுற்றி வளைத்து அவனைப் பங்கம் செய்து பத்திப் பத்தியாய் செய்தி வெளியிட்டு விடும்.

மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்த இடம் இருக்கிறது என்பர். ஆதாரம் என்னவென்று கேட்டால், அது இந்துக்களின் நம்பிக்கை என்பர்.மதுராவில் உள்ள மசூதியை இடிக்க வேண்டும் என்பர். ஏன் என்று கேட்டால், கண்ணன் பிறந்த சரியான இடம் மசூதிக் குள்தான் உள்ளது என்று காரணம் கூறுவார்கள். ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், ஆதாரம் எல்லாம் எதுவும் இல்லை, எங்கள் நம்பிக்கை என்பர்.

பாமர மனிதன்கூடப் பட்டென்று சொல்வான். இது பச்சை அயோக்கியத்தனம் என்று. ஆனால், நீதிமன்றங்களுக்கு மட்டும் அது நியாயமாகவே படுகிறது!

சிவபெருமான் தலையில் நிலவு இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. சிவன் இந்திய நாட்டுக் கடவுள், எனவே, நிலவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறினால், அமெரிக்கா, இரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒத்துக் கொள்ளுமா?

இந்திய நாட்டுக் கடவுள் திருமால், பூமியை ஒரு காலால் அளந்து தனக்கு உரிமையாக்கிக் கொண்டார். ஆகாயத்தை இன்னொரு காலால் அளந்து உரிமையாக்கிக் கொண்டார். எனவே, ஆகாயம், பூமி இரண்டுமே இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தம், அதுவும் வைணவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடினால், உலக நாடுகள் ஒத்துக் கொள்ளுமா?

குறிப்பாக சிவனை வணங்குகிறவர்கள் ஒத்துக் கொள்வார்களா

பூமாதேவி என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. எனவே, அதில் துளைபோட்டு குழாயை விடக் கூடாது என்று கூறமுடியுமா? அந்த நம்பிக்கையைத் தகர்த்துத்தானே பூமாதேவியைக் குடைகிறார்கள்!

பூமாதேவி கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை. அது பூமி தெய்வம். எனவே, அதில் ஓட்டை போடக்கூடாது என்று ஒருவர் வழக்குப் போட்டால், உச்ச நீதிமன்றம் தடை கொடுக்குமா?

இவையெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்றால், இராமர் பாலம் என்பது வெறும் நம்பிக் கையின் அடிப்படையிலானது, அதுவும், புதிதாய்ப்புனையப் பட்ட நம்பிக்கையிலானது என்னும் போது, அதற்கு மட்டும் என்ன தடையாணை? எந்த அடிப்படையில் தடையாணை வழங்கப்படுகிறது?

அப்படியே நம்பிக்கையென்று கொண்டாலும், இராமர் பாலம் என்பதும் இலங்கையென்பதும் வடஇந்தியாவிலுள்ளதா? தென்னிந்தியாவிலுள்ளதா? அதையே விளங்கிக் கொள்ளாமல் ஆர்ப்பாட்டம், அடாவடித்தனம் அன்றாடம் அரங்கேற்றுவது அசல் மோசடித்தனமல்லவா?

இந்த இலங்கையா?

1. வடபுலத்தில் உள்ளது போலவே தென்புலத்திலும் (தமிழகத்திலும்) நகரங்கள் உண்டு.
வடக்கே காசி - தெற் கேயுள்ளது தென்காசி
வடக்கேயுள்ளது மதுரை - தெற்கேயுள்ளது தென்மதுரை.
வடக்கேயுள்ளது தான் இலங்கை- தெற்கேயுள்ளது தென்னிலங்கை.
தற்போது ஸ்ரீலங்கா என்று அழைக்கப்படும் பகுதிக்கு, தென்னிலங்கை என்றுதான் பெயரேதவிர இலங்கை என்பது அல்ல.

தமிழகத்தில் உள்ள மதுரை தென்மதுரைதான். மதுரை என்பது கண்ணன் பிறந்த பகுதிதான்.
தெற்கத்திக் கள்ளனடா தென்மதுரைப் பாண்டியன்டா என்ற திரைப்படப் பாடல் கூட இவ்வழக்கத்தை; இவ்வுண்மையை உறுதி செய்யப் போதிய சான்றாகும்.

அதுபோல்தான், நமக்கு அருகிலுள்ள இலங்கை தென்னிலங்கை என்றே நீண்ட நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வருகிறது.

இது தென்னிலங்கை என்றால், வடக்கேயுள்ளது இலங்கை என்பது உறுதியாகிறது.
எனவே, இராமாயணத்தில் சொல்லப்படுவது வட இந்தியாவில் உள்ள இலங்கையே தவிர, இந்த இலங்கை இல்லை.

2. இலங்கைத் தீவு பின்னால் உருவானது.இராமாயணம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இலங்கை தனித்தீவாக இல்லை. அது தமிழ்நாட்டைச் சேர்ந்த நிலப்பகுதியாகவே இருந்தது.

தாமிரபரணி ஆறு தென்னிலங்கை வரை ஓடியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. இந்த இலங்கையின் பழைய பெயர் தாமிரபரணி என்பதேயாகும். அசோகர் கல்வெட்டில் இந்த இலங்கையானது தாமிரபரணி என்றே குறிக்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் அதை தாப்ரோபேன் என்று அழைத்தனர்.

ஆறு எங்குச் சென்று முடிகிறதோ அந்த இடத்தை வைத்து அந்த ஆற்றை அழைப்பது வழக்கில் உள்ளது. சிதம்பரம் வட்டத்தில், ஒரு வாய்க்கால் உடையூர் என்ற ஊரில் சென்று முடிவடைவதால் அதற்கு உடையூர் வாய்க்கால் என்றே பெயர் வழங்குகிறது.

அதைப்போல், மற்றொரு வாய்க்கால் அரியகோஷ்டி என்ற ஊரில் சென்று முடிவடைவதால் அதற்கு அரிய கோஷ்டி வாய்க்கால் என்று பெயர் வழங்குகிறது.

அவ்வாறுதான், தாமிர பரணி என்ற பகுதியில் சென்று முடிவடைந்ததால் அந்த ஆறு தாமிரபரணி ஆறு என்று அழைக்கப்பட்டது. இலங்கையின் பழைய பெயர், தாமிர பரணி என்பதுதான் - என்பதை தாமிரபரணி ஆற்றின் பெயரே அய்யமின்றி விளக்கிக் கொண்டு இருக்கிறது. இலங்கை அப்போது தனித்தீவாக இல்லையென்பதற்கும் இது அசைக்க முடியாத சான்றாகும்.

3. இராமாயணம் நடந்த தாகக் கூறப்படும் காலத்தில் இலங்கை, தமிழகத்தோடுதான் சேர்ந்திருந்தது என்கின்ற போது, குறுக்கே கடல் இருக்க வாய்ப்பில்லை. அதனால், அணைகட்ட (பாலங்கட்ட) வேண்டிய அவசியம் இல்லை. அணை கட்டியதாக இராமாயணம் கூறுவதால், இராமாயணத்தில் கூறப்படும் இலங்கை இதுவல்ல; வடக்கே அணை கட்ட வேண்டிய அவசியச் சூழலில் இருந்த, வட இந்தியாவில் உள்ளது இலங்கை தான் என்பது உறுதியாகிறது.

4. இராமன் பிறந்த இடம் வடநாட்டில் உள்ள அயோத்தி என்னும்போது, இராமன் பாலம் அமைத்ததாகக் கூறப் படும் இலங்கை, வட இந்தியாவில் உள்ள இலங்கைதான் என்பது உறுதியாகிறது.

-தொடரும்

தரவு -விடுதலை
கட்டுரையாளர் - மஞ்சை வசந்தன்

இந்திய ஜனநாயகம் சிறப்பாக உள்ளது- பாக். சுப்ரீம் கோர்ட் பாராட்டு

இந்திய ஜனநாயகம் சிறப்பாக செயல்படுவதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர் பெர்வஸ் முஷாரப் ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்யாமல் மீண்டும் அதிபராக பதவியேற்றுக் கொள்வதை எதிர்த்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ஜாவேத் இக்பால் உட்பட 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள நீதிபதி அஜாஸ் அகமது வழக்கு விசாரணையின் போது இந்தியா குறித்து தெரிவித்த கருத்துகள்:

இந்திய அரசியலுக்கும் பாகிஸ்தான் அரசியலுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இந்திய அரசியல் தலைவர்களுக்கு சகிப்புதன்மை உள்ளது. பாகிஸ்தான் தலைவர்களிடம் இது இல்லை. ஜனநாயக நாட்டுக்கு இந்தியா மிகச்சிறந்த உதாரணமாகும். அதிகாரப் பரவல் மற்றும் பகிர்வுக்கு உதாரணமாக இந்திய ஜனநாயகம் விளங்குகிறது. அங்கு நடைபெறும் தேர்தல்களில் உளவுத்துறையின் தலையீடுகள் கிடையாது.

ராணுவ தளபதிகளுக்கு இந்திய அரசியல்வாதிகள் விருந்துகள் வைப்பதில்லை.

தரவு - தமிழ்முரசு

புத்தம் புதிய காப்பியாக புரட்சித்தலைவர்!

பாதியில் ஓடிய மோடி...!


CNNIBN தொலைகாட்சியில் பிரபலமான நேர்காணல் நிகழ்ச்சியான Devils Advocate நிகழ்ச்சிக்காக குஜராத் முதலவ்ர் திரு.மோடியின் பேட்டி நிகழ்ச்சியின் ஒளிப்பதிவின் போது பேட்டிகண்ட கரண் தாப்பரின் கேள்விகளால் எரிச்சலான மோடி பாதியில் பேட்டியை முடித்துக் கொண்டு வெளியேறினார்.

WE(A)eKEND



இயக்குனர் சாமி ஒரு சைக்கோ!-பத்மபிரியாவின் அழுகை பேட்டி!



டைரக்டர் சாமியிடம் அறைவாங்கிய பத்மப்ரியா, பத்திரிகையாளர்களை சந்தித்தார். நடந்த சம்பவம் குறித்து படபடப்புடன் பேச ஆரம்பித்தார்.

படப்பிடிப்பு முடிந்து காரில் ஏறப்போன என்னை அழைத்த சாமி, அத்தனை பேர் முன்னிலையிலும் பளார் என்று கன்னத்தில் அறைந்தார். அவரின் இந்த செயல், பல நாட்களாக பிளான் பண்ணி செய்தது போல் இருந்தது. நான் ஒரு மிடில்கிளாஸ் பொண்ணு. அப்படியே நடுங்கி போய்விட்டேன். நானும் 21 படங்களில் நடிச்சு முடிச்சுட்டேன். பல விருதுகள் வாங்கியிருக்கேன். இப்படி ஒரு மோசமான அனுபவம் என் வாழ்க்கையில் நடந்ததே இல்லை. எனக்கு அழுகை சரியா வரலை. அழ வைக்கதான் அடித்தேன் என்று பத்திரிகைகளில் சொல்லியிருக்கிறார். என்னை அறையும்போது எந்த கேமிராவும் ஓடவில்லை. எந்த லைட்டுகளும் ஆன் செய்யப்பட்டிருக்கவில்லை. நான் டைரக்டரிடம் அடிவாங்கிதான் அழ வேண்டும் என்ற அவசியமும் இல்லை. என்னை வைத்து படம் எடுத்த டைரக்டர் சேரனிடம் கேட்டுப்பாருங்கள். அவர் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்திற்கு 8 மாதங்கள் கால்ஷீட் கொடுத்தவள் நான். அந்த படத்தில் நான் அழாத அழுகையா? பல டைரக்டர்களிடம் வொர்க் பண்ணியிருக்கேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். எல்லா டைரக்டர்களுக்கும் வொர்க் நேரத்தில் கோபம் வரும். ஆனால், இப்படி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை. இது திட்டமிட்ட தாக்குதல். அவர் ஒரு சைக்கோ. மூச்சுவிடாமல் பேசுகிறார் பத்மபிரியா. தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும்-

இப்படி திட்டமிட்டு அவர் உங்களை தாக்குவதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே? வேறு ஏதாவது செக்சுவல் டார்ச்சர் கொடுத்து அது நிறைவேறவில்லை என்பதால் இப்படி செய்தாரா?

அதை எப்படி நான் வெளிப்படையா சொல்லமுடியும். நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அவர் எனக்கு டார்ச்சர் கொடுத்தார். திரும்ப திரும்ப டார்ச்சர் கொடுத்தார். படப்பிடிப்பில் என்னுடைய அம்மா அப்பாவை கூட என்னோடு வரக் கூடாது என்றார். ஏன் அப்படி சொல்லணும்? நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

உங்களை அடித்ததற்காக போலீசில் புகார் செய்வீர்களா?

இல்லை. நான் நடிகர் சங்கத்திலும், பெப்சியிலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கேன். அவங்க என்ன சொல்றாங்களோ, அதுக்கு கட்டுப்படுவேன். இந்த விஷயத்தில் அவங்க நிச்சயமா நல்ல முடிவை எடுப்பாங்கன்னு நம்புகிறேன்.

ஒரு பெண்ணாகிய உங்களை கைநீட்டி அடிச்சிருக்காரு? மாதர் சங்கம், பெண்ணுரிமை சங்கம் போன்ற அமைப்புகளின் உதவியை நாடுவீர்களா?

இது முழுக்க முழுக்க ஒரு நடிகைக்கும், டைரக்டருக்கும் உள்ள பிரச்சனை. இதை எதுக்கு அங்கெல்லாம் கொண்டு போகணும்? நான் பெண்ணியவாதி இல்லை. இந்த விஷயத்தை திசை திருப்பாதீங்க. ப்ளீஸ்...

முடிவா என்ன சொல்றீங்க?

அந்த டைரக்டருக்கு எல்லார் கூடவும் பிரச்சனை இருக்கு. அந்த படத்தின் புரடக்ஷன் மேனேஜரை கேளுங்க, அவர் கூடவும் பிரச்சனை. மறுபடியும் சொல்றேன் அவர் ஒரு சைக்கோ. இந்த படத்திற்கு இதுவரைக்கும் 67 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கேன். என்னுடைய போர்ஷன் எல்லாத்தையும் எடுத்து முடிச்சதுக்கு பிறகுதான் என் மீது கைநீட்டியிருக்கார். இன்னும் என்னுடைய போர்ஷன் பாக்கியிருக்கிறதா பேட்டியிலே சொல்லியிருக்காரு. மறுபடியும் படப்பிடிப்புக்கு அழைச்சா போய் நடிச்சு கொடுப்பேன். என்னால படம் நிற்க கூடாது. ஆனா, படப்பிடிப்புக்கு நான் திரும்பவும் போகிற பட்சத்தில் என் உயிருக்கு பாதுகாப்பு வேணும்!

மறுபடியும் ஒருமுறை கண்களை துடைத்துக் கொள்கிறார் பத்மபிரியா. பேட்டியின்போது நடிகர் சங்க பொருளாளர் கே.என்.காளை மற்றும் பெப்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தரவு - தமிழ்சினிமா.காம்

செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாரா டைரக்டர் சாமி?

செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்ற நடிகை பத்மப்ரியாவின் புகாரை டைரக்டர் சாமி மறுத்தார்.
மதுரை கொரண்டி கிராமத்தில் இருதினங்களுக்கு முன் 'மிருகம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து புறப்பட்ட பத்மப்ரியாவை, இயக்குனர் சாமி திரும்ப அழைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பத்மப்ரியா நேற்று அளித்த பேட்டியில், ‘படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முடிந்து 'பேக் அப்' சொன்னபிறகுதான் ஷ¨ட்டிங்கிலிருந்து புறப்பட்டேன்.

திடீரென்று க்ளோசப் காட்சி எடுக்க வேண்டும் என்று கூறி என் கன்னத்தில் டைரக்டர் அறைந்தார்' என்றார். ‘கதறி அழும் காட்சிக்காக அடித்தேன் என்று சாமி கூறி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் ஏன் அழ வேண்டும்? என்னை அவர் திட்டமிட்டே அடித்தார். படம் ஆரம்பத்திலிருந்தே சாமி என்னிடம் வரம்பு மீறி நடந்துகொண்டார். என்னை ரொம்ப மோசமாக நடத்தினார். செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாரா என்பதையெல்லாம் சொல்ல முடியாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்' என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இயக்குனர் சாமி இன்று கூறியதாவது:

இந்தப் படத்தில் பத்மப்ரியாவின் கேரக்டர் பெயர் அழகம்மாள். நந்திதா தாஸ் மாதிரி அவரை ஆக்க வேண்டும் என்பதற்காக என் படத்துக்கு அவரை தேர்ந்தெடுத்தேன். ஆனால் ரூ. 13 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு இஷ்டத்துக்கு வருவார், போவார் என்றால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அதையும் பொறுத்துக்கொண்டுதான் இவ்வளவுநாள் படமாக்கினோம். கிளைமாக்ஸ் காட்சி. கணவன் இறந்து கிடக்கிறான். மனைவி கண்ணீர் விட்டு கதற வேண்டும். சுடுகாட்டில் பிணம் கிடக்கும்போது ஷாம்பு போட்டு குளித்த தலை முடியுடன் மனைவி வந்தால் நன்றாக இருக்குமா? அதற்காக டல் மேக்கப் போடுங்கள் என்றேன். ‘நான் மும்பை செல்ல வேண்டும். சீக்கிரமா எடுங்கள். இதற்கு மேல் மேக்கப் போட்டால் நேரமாகிவிடும்' என்றார்.

இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதை பிரபல நடிகரும், எங்கள் படத்தின் எக்ஸ்சிகியூட்டிவ் புரொடியூசருமான சங்கிலி முருகனும் சொன்னார். அவரையும் எடுத்தெறிந்து பேசினார் பத்மப்ரியா. சரி அழுகையாவது நன்றாக வரவேண்டும் என்பதற்காக அடித்தேன். அவர் செய்த தவறை அப்படியே மாற்றி இப்போது செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்கிறார். இது, தவறான பெண்கள் தங்கள் தவறை மறைக்க ஆண்கள் மீது சுமத்தும் சீப்பான புகார்.

எனக்கும் அம்மா இருக்கிறார். குடும்பம் இருக்கிறது. இதை படித்துவிட்டு அவர்கள் எப்படி மன வேதனை அடைந்திருப்பார்கள்? அந்தளவுக்கு கீழ்த்தரமானவன் அல்ல நான். நிறைய விஷயங்களை பேச வேண்டாமென்றே இருக்கிறேன்.

இன்றும் எங்கள் படக்குழு மதுரையில்தான் இருக்கிறது. படப்பிடிப்பு நடக்கவில்லை. தயாரிப்பாளருக்கு ரூ. 3 லட்சம் நஷ்டம். இன்றிரவு சென்னை வருகிறோம். நாளை காலை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் கவுன்சிலில் பேசுகிறோம். முடிவு தெரியவில்லை என்றால் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். எங்கு இருக்க போகிறோம் என்பதை நாளை சொல்கிறேன்.

இவ்வாறு சாமி சொன்னார்.

அக்கிரகாரத்தின் சினம்

மனுதர்ம சாத்திரத்துக்கே வக்காலத்து வாங்கி எழுதும் திருவாளர் சோ ராமசாமி, செல்வி ஜெயலலிதாவுக்காக வக்காலத்து வாங்கி கலைஞரைப் பழி தூற்றுவதில் அதிசயம் இருக்க முடியாதுதான்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.என். அகர்வால் ஆணை, வாய் வார்த்தைகள் அனைத்துக்குமே சிவப்புக் கம்பள வரவேற்பினைத் தாராளமாக அளித்துள்ளார் அவர்.

நீதிமன்றங்கள் தங்கள் மனம்போன போக்கில் ஆணை பிறப்பிப்பதே முதல் தவறு. வேலை நிறுத்தம் கூடாது என்பதெல்லாம் நீதிபதிகளின் சொந்த அபிப்பிராயங்கள்தானே - அரசமைப்புச் சட்டத்தின் சரத்துக்களை எடுத்துக்காட்டியா ஆணைகளைப் பிறப்பிக்கிறார்கள்? உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு போராட்ட முறையை - உரிமைக்கான வெளிக்காட்டுதலை தடை செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

அதிகாரம் உள்ள பதவி நாற்காலியில் உட்கார வாய்ப்புக் கிடைத்ததற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்றால், அதன் எதிர் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியதுதான். `சோ போன்ற ஞாயிற்றுக்கிழமை வக்கீல்கள் (இனிமேல் இந்த வார்த்தையையும் கூற முடியாது - காரணம் நீதிபதியே ஞாயிறு அன்று நீதிமன்றத்தைத் திறக்கச் சொல்லி விசாரித்து இருக்கிறாரே!) தான் இதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும்.

வேலை நிறுத்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் வேலை நிறுத்தத்தை நடத்த முடிவு செய்து இருக்கலாமா என்ற வினாவைத் தொடுத்துள்ளார்.
நீதிமன்றத்தின் அத்தகு தடைகளுக்குப் பிறகும் நாடு தழுவிய அளவில் அத்தகைய போராட்டங்கள் நடக்கத்தான் செய்திருக்கின்றன. தமிழ்நாட்டில்கூட இவ்வாண்டு மார்ச் 31 ஆம் தேதி இதே தி.மு.க., தோழமைக் கட்சிகளின் சார்பில் நடத்தப்பட்டுள்ளதே - மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங் களில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து அத்தகைய போராட்டம் நடத்தப்பட்டது. ஆந்திராவிலும்கூட நடத்தப் பட்டதுண்டு.

அதற்கு `சோ கூறும் சமாதானம் - அந்த வேலை நிறுத்தம்பற்றி (பந்த்) உச்சநீதிமன்றத்திற்கு யாரும் கொண்டு செல்லவில்லை என்கிறார் - எத்தனையோ வழக்குகளை நீதிமன்றங்கள் தாமாக விசாரிக்க முன்வந்துள்ளனவே - அதுபோலவே இதிலும் தலையிட்டு இருக்கலாமே! ஏன் செய்யவில்லை?

தி.மு.க., என்றால் மட்டும் ``இனந்தெரியாத எரிச்சலா? இன்னொன்றையும் வலிந்து வாதாடுகிறார். உச்சநீதிமன்றம் `பந்த்க்குத் தடை என்றவுடன் தி.மு.க., தோழமைக் கட்சிகள் போராட்ட வடிவத்தை மாற்றிவிட்டன. உண்ணாவிரதம் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு `சோ எழுதுவது என்ன தெரியுமா? ``உண்ணாவிரதம் என்ற முகமூடி அணிந்து வந்த பந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.

பந்த் என்பது தடை செய்யப்பட்ட ஒன்று; உண்ணா விரதம் அப்படியல்லவே! மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும், முடிச்சுப் போடுவானேன்?

போராட்டமே நடத்தக்கூடாது என்பது நீதிமன்றத்தின் நிலைப்பாடா? உச்சநீதிமன்ற வழக்குத் தொடர்பாக விலா வாரியாக தலையங்கம் தீட்டும் திரு. `சோ ஓர் இடத்தில் தலையில் துண்டு போட்டுக்கொண்டு தலைமறைவாகி விடுகிறார்.

வாதியைப் பார்த்து நீதிபதி, நீதிமன்ற அவதூறு மனு போடுங்கள் என்று கூறினாரே, அதுபற்றி ஏன் `சோவின் பேனா வாய் திறக்கவில்லை?சு.சாமி, சோ, ஜெயலலிதா என்ற ஒரு கோடு நீண்டு கொண்டே போகிறது - இதற்குள்ளிருக்கும் பந்த பாசம் நாடு அறிந்த ஒன்றாகும்.
கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்று, சமூகநீதி உணர்வோடு செயல்பட்டுக் கொண்டு வருகிறார். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஆ(ச)ண நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். பெரியார் அரசு நடக்கிறது என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மக்கள் மத்தியில் மேலும் செல் வாக்குப் பெருகும். பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு? எனவேதான் எது கிடைத்தாலும் அதனை தி.மு.க., ஆட்சிக்கு எதிராகப் பயன்படுத்தும் ஓர் அரட்டையில், ஆத்திரத்தோடு ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது அக்கிரகாரக் கூட்டம் - தமி ழர்கள் உன்னிப்பாக கவனிப்பார்களாக! புரிந்து கொள்வார்களாக!!

தரவு - விடுதலை

WE(A)eKEND



'பசுபதி' - திரை விமர்சனம்

ராசக்காபாளையத்திலிருந்து சென்னைக்கு வரும் ஒரு பாசக்காரனின் கதை. வருகிற இடத்தில் காதல், கண்றாவி என்று கதையை சொதப்பாமல் வேறு திசையில் பயணப்பட்டிருக்கும் இயக்குனருக்கு முதல் சபாஷ். இரண்டாவது சபாஷ், விவேக்கிற்கு! நீண்ட இடைவேளைக்கு பிறகு விவேக்கின் ராஜ்ஜியம். வெட்டுபட்ட அரிவாளில் இருந்து வழியும் ரத்தத்தை, ஒரு சொட்டு எடுத்து உதட்டில் வைத்து 'பி பாஸிட்டிவ்' என்று ரிசல்ட் சொல்கிற அளவுக்கு அனுபவமுள்ள(!) ஹெட் கான்ஸ்டபிள்.

வந்த இடத்தில் பெட்டியை பறிகொடுத்துவிட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடையும் பசுபதியான ரஞ்சித்தும், விவேக்கும் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் டியூட்டி போலீசுக்குக்கூட வலி எடுக்கும் வயிற்று பிரதேசத்தில்.

அப்பாயின்மென்ட் இல்லாத போலீஸ்காரராக அங்கேயே தங்கிவிடும் ரஞ்சித்தின் வீரம், விவேக்கிற்கு புரமோஷன் வாங்கிக் கொடுக்கிறது. 'அண்ணே, அண்ணே' என்று விவேக்கின் மீது அன்பை பொழியும ரஞ்சித் அம்மா செல்லம் என்பதும், அம்மாதான் ரஞ்சித்துக்கு உயிர் என்பதும் இடையிடையே சொல்லப்படுகிறது. நினைத்தமாதிரியே பின்பாதியில் அம்மாவுக்கு இதயநோய். அறுவை சிகிச்சைக்கு ஐந்து லட்சம் தேவை. என்ன செய்வார் ரஞ்சித்? நன்றாக போய் கொண்டிருந்த திரைக்கதை மழைக்கால தார் சாலை மாதிரி ஆகிறது. ஆயுதக்கடத்தல்... போலீஸ் லாக்கப் என்று தடுமாறி முடிவை நெருங்கும்போது ரஞ்சித் அமரர் ஆகிறார். அம்மாவை பிழைக்க வைத்து பிள்ளை உயிரை கொடுக்கும் இந்த க்ளைமாக்ஸ், சென்டிமென்ட் பாரம் தாங்காமல் நொண்டியடிப்பது தவிர்க்க முடியாததாகிறது.

அடிக்கடி விவேக்கை வைத்து ரஞ்சித்தின் பாரத்தை கிண்டலடிக்கிறார்கள். ஆனால், பாரத்தை தாண்டிய 'அபார' நடிப்பு ரஞ்சித்திடம். முதியோர் இல்லத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களை பார்த்து அழுது தவிப்பதை சொல்லலாம். தன் முன்பாகவே விவேக்கை தள்ளிவிடும் வில்லனை போட்டுத்தாக்குவது ஹீரோயிசத்தை தாண்டிய ஈர்ப்பு. ஆபரேஷன் ஃபெயிலியர் ஆகி வெளியே கொண்டுவரப்படும் அம்மாவின் முகத்தை பார்க்க சகிக்காமல், அம்மாவுக்கு என்னாச்சு? என்று கூடியிருக்கும் அத்தனை பேரிடமும் கேட்டு தேம்புவதிலும் ரஞ்சித்தின் நடிப்பில் முழுமை. எல்லாம் ஓ.கே. என்ன கொடுமை சார் இது? எல்லாவற்றையும் மீறி நிற்கிறதே, வில்லனுக்காகவே பிறப்பெடுத்த அந்த முகம்!

முதல் முறையாக சிரிக்க வைத்திருக்கிறார் தியாகு. பருப்பு வியாபாரி என்று நம்பி ரஞ்சித்துக்கு வாடகைக்கு வீடு கொடுத்த அப்பாவி. டேய்.. பருப்பு. தப்பிச்சு போகாதடா. என் தோலை உரிச்சிடுவாங்க என்று அழுது புலம்புவதும், தெரியும்னு சொன்னாலும் அடிக்கிறாங்க, தெரியாதுன்னு சொன்னாலும் அடிக்கிறாங்க என்று அரற்றுவதும் வெடிச்சிரிப்பு.

ராசாக்காபாளையத்திலிருந்து கிளம்பி வரும் கஞ்சா கருப்புவும் தன் பங்குக்கு பட்டையை கிளப்புகிறார். வசதியாக இவருக்கும் ரீல்களை பகிர்ந்தளித்து சில நிமிடங்கள் ஒதுங்கிக் கொள்கிறார் விவேக்! கதாநாயகி வேண்டும் என்பதற்காகவே சிந்துதுலானி. அதிகம் வேலையில்லை. அந்த அம்மா நிஜமாகவே அம்மாவின் பாசத்தை ஊட்டியிருக்கிறார்.

ஆனால், ஜெயிலில் இருக்கும் ஒரு குற்றவாளியின் அம்மாவுக்காக நாடே கவலைப்படுகிற அளவுக்கு பில்டப் கொடுத்திருப்பதும், இதய நோயாளியான அவரை தெரசா ரேஞ்சுக்கு உயர்த்தியிருப்பதும்தான் நெருடல்.

எப்படியிருந்தாலும், கண்ணை மினுக்கும் நட்சத்திரங்களை நம்பாமல்... தாயே தெய்வம் என்ற உயர்ந்த தத்துவத்தை தைரியமாக (இந்த காலத்தில்) சொன்னதற்காக இயக்குனருக்கு ஒரு விசேஷ 'முகவரி' தரலாம்.....

செல்வபாரதி மே/பா நல்ல படங்கள்!

தரவு - தமிழ்சினிமா.காம்

மதநம்பிக்கையும்,வரலாறும் இணைந்துசெயல்படமுடியாது!

இன்றைய இந்தியாவின் பொது வாழ்வில், மதநம்பிக்கை மற்றும் வரலாறு ஆகிய இரண்டுக்கும் இடையேயான போராட்டம் மறுபடியும் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிலிருந்து மற் றொன்று முற்றிலும் முரண்பட்டது என்பதையும், அவை இணைந்து செயல்பட முடியாதவை என்பதையும் புரிந்து கொண்டால், இவற்றிற்கிடையே போராட்டம் என்று எதுவும் இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் மாறுபட்டவை இவை. அவற்றின் அனுமானங்கள், ஆய்வு நடை முறைகள், முடிவுகள் வேறுபட்டவை. அவற்றில் ஒற்றுமையைக் காண முயற்சிப்பதற்கு பதிலாக, அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு, அவற்றைத் தனித்தனியே பிரித்துக் காண்பதே சிறந்தது.

வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை இன்றைய சிறீலங்கா அல்ல
ஒருவரைப்பற்றியோ, ஓர் இடம் அல்லது ஒரு நிகழ்வைப் பற்றியோ வரலாற்றாசிரியர்கள் கூறும்போது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சான்றுகள், ஆதாரங்கள் அவர்களுக்குத் தேவை. அவை பற்றிய காலம், மற்றும் இடம் ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த சான்றுகள், ஆதாரங்கள் அந்த நிகழ்வை மெய்ப்பிக்க வேண்டும். வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு முக்கிய இடங்கள் அயோத்தியாவும், இலங்கையும் ஆகும். ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை எங்கே இருந்தது என்பதை பற்றி வரலாற்று ஆசிரியர்கள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, இதில் குறிப்பிடப் படும் இலங்கை எங்கே இருந்தது என்பது பற்றி கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்திய வரலாற்றாசிரியர்களிடையே முரண்பட்ட கருத்து நிலவி வருகிறது; உறுதியாக அதைப் பற்றி அடையாளம் காண முடியாமலேயே இருந்து வருகிறது. விந்திய மலைப் பகுதியில் அமர்கண்டக் அல்லது சோட்டா நாக்பூர் அருகே அது இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள்; மஹாநதி டெல்டா பகுதியில் இருந்தது என்று மற்ற சிலர் கூறுகின்றனர். ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையை இன்றைய சிறீலங்காவுடன் அடையாளம் காண்பது என்பது சிக்கல் நிறைந்ததாக உள்ளது. மவுரிய சாம்ராஜ்யம் மற்றும் அதற்குப் பிந்தைய காலத்தில், இந்திய, கிரேக்க, லத்தீன் மொழிகளில் குறிப்பிடப் பட்டுள்ளதை வைத்துப் பார்த்தால் தற்போதைய சிறீலங்காவின் அப்போதைய பெயர் தாம்ரபரணி. ( கிரேக்க மொழியில் தாப்ரோபேன் என்ற குறிப்பு உள்ளது).

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தனது சாம்ராஜ்ய எல்லையில் அசோக மன்னர் பொறித்துள்ள சாசனம் ஒன்றில் தாமிர பரணி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் பெரும்பாலும் சிறீலங்காவுக்கு சிங்களா அல்லது சிங்கள-த்வீபா என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வந்தது. (சிலாம் அல்லது சீலதீப் என்பது இதன் கிரேக்கக் குறிப்பு). இலங்கை என்ற பெயர் கிறிஸ்து பிறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பின் வழங்கத் தொடங்கிய பெயர் என்றே தோன்றுகிறது.
வரலாற்றாசிரியருக்கு இது திகைப்பை ஏற்படுத்துவதாக உள்ளதாகும்.

இன்றைய சிறீலங்காவைத்தான் வால்மீகி குறிப்பிட்டதாகக் கொண்டோமானால், தாம்ரபரணி அல்லது சிங்களா என்ற பெயரையே அவர் பயன் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் இலங்கை என்ற பெயரையே பயன்படுத்தியுள்ளார். ஆனால் அக் காலத்தில் இன்றைய சிறீலங்காவுக்கு இலங்கை என்ற பெயர் இருந்திருக்க வில்லை. அப்படியெனின், வால்மீகி குறிப் பிடும் இலங்கை வேறு எங்கேயோ இருந்திருக்க வேண்டும். ராமர் சேது இருந்த இடம் எது என்பது மறுபரிசீலனை செய்யப் படவேண்டிய ஒன்றாகும். இந்த ராமர் சேது மத்திய இந்தியாவில் உள்ள ஒரு சிறு நீர்நிலையில் இருந்திருக்க வேண்டும் என்றும், அது பாக் ஜலசந்தியில் இருந்திருக்க முடியாது என்றும் வரலாற்றாசிரியர்கள் வாதிடுகின்றனர். மேலும் சேது பற்றி வால்மீகிக்குப் பின் எழுதப்பட்ட அனைத்து ராமாயண நூல்களிலும் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கை இன்றைய சிறீலங்காவாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறுவார்களேயானால், இந்தத் தீவு இலங்கை என்று அழைக்கப்படத் தொடங்கிய காலத்திற்குப் பின் வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். இத்தகைய உறுதியற்ற செய்திகள் ஒருபுறம் இருக்க, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் கடலில் நீண்ட தூரத்திற்கு ஒரு பாலம் எவ்வாறு கட்டப்பட்டிருக்க முடியும் என்ற தொழில்நுட்ப சாத்தி யக் கூறு பற்றிய கேள்வியும் எழுகிறது.

ராமர்சேது இயல்பான புவியியல் தோற்றமாக இருந்தாலும் சரி, மனிதரால் உருவாக்கப்படாததாக இருந்தாலும் சரி, அது புராதனச் சின்னம் என்று கூறப்படுகிறது. இந்தக் கருத்து ஒன்றே புராதனச் சின்னமாக ஆக்கிடுமா? தற்போது உண்மையில் இல்லாத, மனிதரால் கட்டப் படாத ஒரு பாலத்தைத் தேடுவது என்பது, ஒரு மாயத் தோற்றத்தின் கற்பனைத் தாவலைத் தடுப்பதுடன், மக்களின் மரபு வழி நம்பிக்கை தர இயன்ற ஆர்வத்தையும் போக்கிவிடுகிறது. பாக். ஜலசந்தியில் இயற்கையாக கடலுக்கு அடியில் தோன்றியுள்ள இந்த மணல் மேடுகளைப் புராதனச் சின்னமாக ஏற்றுக் கொண்டு அப் பகுதியைப் பாதுகாப்பது இன்னும் பொருத்தமாகவும் இருக்கக்கூடும்.

நிலத் தின் மீது காணப்படும் இயற்கை அமைப்புகளைப் போன்றே இத்தகைய கடல் பூங்காக்களும் நமது எதிர்காலச் சுற்றுச் சூழலுக்கு முக்கியமானவை என்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை.நூற்றுக்கணக்கான ராமாயணக் கதைகளில் ராமன் என்ற மய்யக் கருத்து ஒன்றே போதுமான வரலாற்றுச் சான்றாகவோ, ஆதாரமாகவோ ஆக முடியாது. இவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கதைகளைச் சொல்லிக் கொண்டு இருப்பதால், அவற்றில் ஒரே ஒரு கதைதான் உண்மையானது என்று நம்புபவர்களுக்கு அது பல பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். கடந்த கால வரலாறு என்ன கூறுகிறது அல்லது இக் கருத்து வேறுபாடுகள் எதைக் குறிக்கின்றன என்பது பற்றி வரலாற்று ரீதியாகவும், ஒப்பீட்டு ஆய்வு ரீதியாகவும் இந்த முரண்பட்ட ஒவ்வொரு கதையை யும் மதிப்பிடுவதில் உள்ள ஆர்வத்தை இந்த பல்வேறுபட்ட கதைகள் அதிகரிக்கச் செய்கின்றன.

வால்மீகி ராமாயணத்திற்கு மிக நெருங்கிய காலத்தில் உருவான இரண்டு வேறு ராமாயணக் கதைகள் என்று புத்த மற்றும் சமணக் கதைகளைக் கூறலாம். தசரத ஜாதகா என்ற புத்தமதக் கதை வால்மீகி ராமாயணத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். அதன்படி வாரணாசி மன்னரின் மகனான ராமன் இமய மலைக்கு நாடு கடத்தப்படுகிறான்; இதில் ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றது பற்றி எதுவும் இல்லை.

பல்வேறு சமணக் கதைகளில் காலத்தில் முற்பட்டதான விமலசூரி என்பவர் எழுதிய பத்மசரிதம் என்ற நூல் அதற்கு முந்தைய அனைத்துக் கதைகளுக்கும் மாறுபட்டதாக அமைந்துள்ளது; உண் மையில் நடந்தது என்ன என்பது பற்றி மக்களுக்குத் தெரிவிக்கவே இக் கதை எழுதப்பட்டதாக அதில் கூறப்பட்டுள் ளது. வால்மீகியின் கதையில் இருந்து இது பெருமளவில் வேறுபட்டதாக உள்ளது. ராவணன் ஒரு கொடிய அரக்கனல்ல; அவன் ராமனை எதிர்த்த ஒரு நாயகனே ஆவான். பாரம்பரியமான சமண வடிவமைப்பில் இக்கதையை இந்நூல் அளிக்கிறது.
வால்மீகி ராமாயணத்தை மட்டுமே நம்பும் ஒருவர் இதைப் போன்ற மற்ற ராமகதைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளவற்றிற்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம் அல்லது மறுக்கலாம். வரலாற்றாசிரிய ருக்கு ஆர்வம் அளிப்பது பல்வேறுபட்ட வடிவங்களில் அளிக்கப்பட்டுள்ள ராம கதை அல்ல; ஆனால் இக்கதைகளில் ஏன் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதே அவருக்கு ஆர்வமளிப்பதாகும்.

புத்தர், ஏசு, நபிகள் போன்றவருக்கு உள்ள வரலாற்று ஆதாரங்கள் ராமனுக்கு உண்டா?
மதநம்பிக்கை முறைகளை (மதங்களை)த் தோற்றுவித்த புத்தர், ஏசு கிறிஸ்து, முகமது நபி போன்ற நாமறிந்த வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றில் இத்தகைய முரண்பாடுகள் இல்லை. அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒரே மாதிரியான கதையைத்தான் தெரிவிக்கின்றன. அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய அதிகாரப் பூர்வமான விளக்கத்தை ஏற்றுக் கொள்ள இது உதவுகிறது. அவர்கள் உயிர் வாழ்ந்தது பற்றி மற்ற ஆதாரங்களிலும் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன; அவை அவர்களின் வாழ்க்கையைப் பற்றி மட்டும் தெரிவிக்காமல், அவர்கள் கொண்டிருந்த பல்வேறு தொடர்புகளைப் பற்றியும் தெரிவிக்கின்றன. எடுத்துக் காட்டாக, புத்தரின் வரலாற்றில், அவர் இறந்த ஒரு சில நூற்றாண்டுகள் கழிந்த பின், புத்தர் பிறந்த லும்பினிக்குச் சென்ற அசோக மன்னர் அங்கு புத்தரின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பினார் என்ற உண்மை அவர் நாட்டிய ஸ்தூபியிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.

இப்போது எழுந்துள்ள விவாதம், உண்மை ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற உணர்வில் தோன்றியிருப்பின், நிச்சயமாக வரலாற்றாசிரியர்களும் அதில் பங்கேற்றுக் கொண்டிருப்பர். மனிதரின் செயல்பாடுகள் ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை என்பதால், வரலாற்று ரீதியான விமர்சனத்துக்கு உட் பட்டவையே அவை. ஆனால், மதநம்பிக்கையின் பெயரால் மக்களின் ஆதரவு திரட்டுபவர்கள் மற்றும் இவ்வாறு ஆதரவு திரட்டுவதை எதிர்ப்பவர்கள் மேற்கொண்ட அரசியல் உத்திக்கான செய்தியாகவே ராமர் சேது ஆகிவிட்டது என்பது நன்றாகவே தெரிகிறது.

தொல் பொருள் ஆய்வு மற்றும் வரலாறு ஆகிய வற்றின் கண்ணோட்டத்தில், ராமரின் வரலாற்றை மெய்ப்பிப்பதற்கான உறுதியான சான்று, ஆதாரம் இது வரை இல்லை என்று இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கூறியது சரியானதுதான். இந்த அறிக்கையை நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெற்றதும் ஓர் அரசியல் செயலே. வரலாற்றைப் பொறுத்தவரை மெய்ப்பிக்கப்பட்ட ஆதாரம், சான்று மிகவும் முக்கியமானது; ஆனால் வெறும் மதநம்பிக்கைக்கு இவை தேவையில்லை. வரலாற்று அடிப்படையில் மதநம்பிக்கையின் உண்மைத் தன்மையில் சந்தேகம் கொள்வது தெய்வ நிந்தனையாகாது.

மதநம்பிக்கையை எதிர்ப்பவராலும் நமது புராதனப் பண்பாடு வளம் பெற்றுள்ளது
வரலாற்றாசிரியர் மதநம்பிக்கையின் உண்மைத் தன்மையைப் பற்றி அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சூழலில், ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கை எவ்வாறு ஆதரவு பெறுகிறது என்பதை வரலாற்றுப் பின்ன ணியில் விளக்கிக் கூற வரலாற்றாசிரியரால் இயலும். இந்த மதநம்பிக்கையால் மட்டுமே நமது புராதனப் பண்பாடு வளம் பெற்றுவந்துவிடவில்லை என்பதையும், அதை எதிர்ப்பவர்களாலும் வளம் பெற்றுள்ளது என்பதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் பலமான மத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால், பெரும் கூட்டமாகக் கூடிப் போரா டியோ அல்லது ஏதுமறியா அப்பாவிகளைக் கொன்றோ, அரசியல் செல்வாக்கு தேடியோ அந்த நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பது தேவையே இல்லாதது.

அந்த மதநம்பிக்கையைப் பாதுகாக்க தொல் பொருள் ஆய்வோ, வரலாறோ பயன்படுத்தப்படத் தேவையுமில்லை. மதநம்பிக்கை தனக்கே உரித்தான இடத்தையும், செயல்பாட்டையும் கொண்டதாகும்; அதே போன்று தொல் பொருள் ஆய்வும், வரலாறும் அவற்றிற்கு உரிய இடத்தையும் செயல்பாட்டையும் கொண்டவை. இவைகளின் இடங்களும், செயல்பாடுகளும் வெவ்வேறானவை.

மணல்மேடுகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் அளவுக்கு இந்து மதம் பலமற்றதா?
கடலுக்கு அடியில் உள்ள மணல்மேட்டில் ஒரு பகுதியை நீக்குவது லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும் என்று கூறுவது, அந்த மத நம்பிக்கைக்கு உரிய மரியாதை அளிப்பதாக ஆகாது. ஒரு கடவுள் அவதாரம் கட்டியதாக நம்பப்படும், கடலுக்கு அடியில் காணப்படும் ஒரு புவியியல் அமைப்பின் (மணல்மேடு) உதவி தேவைப் படும் அளவுக்கு இவர்களின் மத நம்பிக்கை பலமற்று இருக்கிறதா? தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மத நம்பிக் கையை ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்குவது என்பதே அந்த மத நம்பிக்கைக்கு இழிவு சேர்ப்பதாகாதா?

இப்போது உள்ள பிரச்சினை என்னவென்றால் ராமன் இருந்தானா, இல்லையா என்பதோ, அல்லது கடலுக்கு அடியில் உள்ள மணல்மேடு ராமனின் முயற்சியால் கட்டப் பட்ட பாலத்தின் ஒரு பகுதியா என்பதோ அல்ல. ஆனால் இப்போது நம் முன் உள்ள முக்கியமான வேறு கேள்விகள் , மதநம்பிக்கை பற்றியவையோ, அல்லது தொல் பொருள் ஆய்வு பற்றியவையோ அல்ல; நுண்ணிய அறிவுபூர்வமாக அறிந்து கொள்ள வேண்டி யவை பற்றிய கேள்விகள்தாம். மத நம்பிக்கையை வேண்டு மென்றே கொண்டு வந்து புகுத்தி பிரச்சினையில் மக் களின் கவனத்தை திசை திருப் பியது பற்றிய கேள்விகள். இயற்கையாக உருவான இந்த மணல்மேடுகளின் ஒரு பகுதியை அகற்றுவது, சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கிழைத்து, தென்னிந்திய மற்றும் இலங்கைக் கடற்கரைப் பகுதிகளை எதிர்காலத்தில் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்கு உள்ளாக்கக் கூடுமா? இத்தகைய பேரழிவுகளைத் தவிர்க்கும் வண்ணம் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா?

இத்திட்டத்தினால் தகவல் தொடர்பு, அன்னியச் செலாவணி அதிகரிப்பது போன்ற பயன்கள் என்னென்ன கிடைக்கும்? இப்பயன்கள் உள்ளூர் பாமர மக்களைச் சென்றடையுமா? ஆம் எனில், எவ்வாறு? அனைத்திலும் முக்கியமானது, பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் உள்ள அவற்றின் கூட்டாளிகளும் இத்திட்டத்தில் என்ன பங்கு பெற உள்ளனர்? இது போன்றதொரு பெரிய திட்டத்திற்கு யார் நிதி அளிக்கப்போகிறார்கள்? திட்டத்தின் செயல்பாடுகளை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள்? இத்தகைய விவரங்கள் வெளிப் படையாகத் தெரிய வரும் போதுதான் ஏற்கெனவே நடந்து வரும் அகழ்வுப் பணி கள் பற்றிய சில உண்மைகளை நம்மால் அறிய இயலும். இத் திட்டத்தைப் பற்றி கேட்கப் படவேண்டிய, மக்களின் கவ னத்தை இந்த நேரத்தில் ஈர்க்க வேண்டிய கேள்விகள் இவை தான்.

(நன்றி: `தி இந்து, 28.9.2007; தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)

தலைமை நீதிபதிக்கு கி.வீரமணி கடிதம்

சட்ட விரோதமாக நடந்துகொண்டிருக்கும் நீதிபதி அகர்வால் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கக் கூடாது - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கடிதம்



உச்சநீதிமன்ற நீதிபதி பி.என் அகர்வால் சட் டத்தை மீறி நடந்துகொண்டு இருப்பதால், ராமன் பாலம், தமிழகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்தம் தொடர்பான வழக் குகளை விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். கடிதம் வருமாறு:


பெறுதல்
மாண்பமை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள்
உச்சநீதிமன்றம், புதுடெல்லி.
மதிப்புக்குரிய இந்தியத் தலைமை நீதிபதி அவர்களுக்கு,

வணக்கம்.

வழக்கு ஒன்றை விசாரிக்கும்பொழுது, உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர், வேண்டாத, ஆழமான கருத்து இல்லாத சில எண்ணங்களை வெளிப்படுத்தியிருப்பதைக் குறித்து கனத்த மனத்துடன் இக்கடிதத்தை உங்களுக்கு எழுத வேண்டியவனாக இருக்கிறேன்.

தி.மு.க.வின் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு அணி பந்த் (முழு அடைப்பு) நடத்த வேண்டும் என முடிவு செய்து அறிவித்தது. தமிழ்நாடு அரசிற்கு அதில் எவ்விதப் பங்கும் இல்லை. உண்மையில் அந்தக் குறிப்பிட்ட நாளில் அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
தமிழ்நாடு அரசை நீக்கவும், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவரவும் தான் பரிந்துரைக்கப்போவதாக திரு நீதிபதி பி.என்.அகர்வால் 2007 அக்டோபர் முதல் தேதியில் குறிப்பிட்டதாகச் செய்தித் தாள்கள் வெளியிட்டுள்ளன.

மேற்கூறிய கருத்துகள், எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானவை; அத்துடன் அர சமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் கூறியிருப்பதற்கும் எதி ரானவை. மாநில அரசைப் பதவி நீக்கம் செய்வது, குடியரசுத் தலைவர், மற்றும் நாடாளுமன்றம் எடுக்கவேண்டிய நடவடிக்கையாகும். குறிப்பிட்ட படி நடந்துகொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறமுடியாது; ஏன் எனில் பாதிக்கப்பட்ட மாநிலம் தனக்கு ஏற்பட்ட குறையை நீக்கிக்கொள்ள உச்சநீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும்.

ஆகையால், 356ஆம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம், கட்டாயப்படுத்தவோ, பரிந்துரைக்கவோ, யோசனை கூறவோ முடியாது. மத்திய அரசு, மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரத்திலும், நடவடிக்கைகளிலும் தலையிடும் வகையில் கற்றறிந்த நீதிபதியின் கருத்துக்கள் இருக்கின்றன.

தன்னுடைய நடத்தையின் மூலம், தனக்கு இருக்கும் அளவுக்கு மீறிய ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளார். அதன் மூலம், தன்னை விமர்சனத்திற்கு உள்ளானவராக்கிக் கொண்டார். ஆகையால் நீதியின் நலன் கருதி, கற்றறிந்த இந்த நீதிபதி, ராமர் சேது, மற்றும் பந்த் பற்றிய வழக்குகளை நடத்துவது பொருத்தமற்றதாகும்.

தலைமை நீதிபதியான தாங்கள் இதைக் கவனித்துத் தேவையானதைச் செய்து நீதி வழங்க வேண்டிக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.


தரவு - விடுதலை

கலைஞர் கவிதை...

காந்தியடிகளின் கணக்கைத் தீர்த்தவர்களுக்கு
இடுகாட்டிலும் இடம் அளிக்கலாமா?



கலைஞர் கவிதை காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி (2.10.2007) கலைஞர் தொலைக்காட்சியில் ``காந்தியடிகள் என்ற சிறப்பு கவியரங்கத்திற்குத் தலைமை வகித்த முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள் வழங்கிய கவிதையிலிருந்து....


இன்று இந்தியா சுதந்திர பூமி -
இல்லாதவன்; வரிகட்ட வக்கு வகை இல்லாதவன்; அவனே
காந்தி கணக்கு வைக்கத் தகுதியானவன் - இதில்
இரு வேறு கருத்துக்கு இடமில்லை - ஆனால்
காந்தியின் கணக்கையே தீர்த்த கும்பலுக்கு
இடுகாடு, சுடுகாட்டில் கூட இம்மண்ணில் இடமளிக்கலாமா?

மதவெறியரால் மகாத்மா நீ மாய்க்கப்பட்டபோது
இதற்கு `காந்தி தேசம் என்று பெயர் வைப்போம் என்றார் பெரியார்!
எதிர்ப்புக்கிடையிலேயும் வேலை மாநகரில் உன் சிலையைத்
திறந்தார் அண்ணா!
இவ்விரு தலைவர் வழிவந்த நான் இக்கவியரங்கை
உமக்குக் காணிக்கை ஆக்குகிறேன்

ஒரு மனிதர் அறிவித்த உண்ணா நோன்பு; இந்த உலகையே
உலுக்கிற்று - அந்த
உத்தமரின் வழி நின்று அறப்போர் தொடுத்தோம்;
அது அநீதியாளர் வயிற்றைக் கலக்கிற்று

ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்

முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் விவரம் வருமாறு:-

கேள்வி:- "நுணலும் தன் வாயால் கெடும்'' என்பதைப் போல வாய்க்கொழுப்பெடுத்து அதிகார போதையில் தரம் கெட்ட வார்த்தைகளால்''-ஜெயலலிதாவின் அறிக்கையின் துவக்கம் இது. எப்படி?


பதில்:- "வாய்க்கொழுப்பு'' எங்கே அதிகம் என்பதற்கு இந்தக் கேள்வியின் துவக்க வார்த்தைகளே போதுமே!

கே:- கருணாநிதி முகத்தில் உச்சநீதி மன்றம் கரி- அ.தி.மு.க.விற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றும் ஜெயலலிதா அறிக்கைக்கு தலைப்பு அவரே கொடுத்து ஏடுகளுக்கு அனுப்பியிருக்கிறாரே?

ப:- தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகவும் தேவையான ஒரு திட்டத்தை வலியுறுத்தி நடைபெறுவதாக இருந்த வேலை நிறுத்தம் கூடாது என்றுதான் ஜெயலலிதா நீதிமன்றம் சென்றார்.

அந்த வழக்கிலே அவர் வென்றது என் முகத்திலே கரி என்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்து, அதிலே வெற்றி கிடைக்காதது என் முகத்திலே கரி என்றால், அதை நான் கேவலமாக நினைக்கவில்லை.

தமிழ்நாட்டு மக்களின் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற ஜெயலலிதா பற்றியும், அதிலே கிடைத்த வெற்றியை மகத்தான வெற்றி என்றும் அவர் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழ் நாட்டு மக்கள் தங்களுக் குள்ளாக நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்று குரல் கொடுத்தவர் யார்? அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர் யார்? என்று புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களா தமிழ்நாட்டு மக்கள்.

கே:- ஜெயலலிதா அறிக்கையில்- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ராமர் பாலம் என்று குறிப்பிட்டு இருந்ததைக் காட்டினால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று நீங்கள் கூறியதை கோயபல்ஸ் முயற்சி என்று சொல்லியிருக்கிறாரே?

ப:- நான் கூறியதை கோயபல்ஸ் முயற்சி என்று கூறும் ஜெயலலிதா அறிக்கையில் இத்தனையாவது பக்கத்தில் ராமர் பாலம் என்று குறிப்பிட்டிருக்கிறேன் என்று பதில் அளித்திருந்தால் அது ஏற்கத்தக்கதாக இருந்திருக்கும். அந்தக் கேள்விக்குப்பதில் சொல்ல முடியாத அவர் நழுவி ஓடி விட்டு, கோயபல்ஸ் என்றெல்லாம் அறிக்கை விட்டு விட்டால் போதுமாப அதனைப்படிக்கும் பத்திரிகையாளர்கள், கலைஞரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கும் ஜெயலலிதாவை எண்ணி மனதிற்குள்ளாகவாவது எள்ளி நகையாட மாட்டார்களா? கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கத் தெரியாமல் ஜெயலலிதா எப்படியெல்லாம் சமாளிக்கப் பார்க்கிறார் என்றுதான் அவர்கள் எண்ணிக் கொள்வார்கள்.

கே:- ஜெயலலிதா தனது அறிக்கையில் உங்களின் சொந்த ஆதாயத்திற்காக சரியாக ஆராயாமல் இத்திட்டம் தொடங்கப்பட்டு விட்டதாக சொல்கிறாரே?

ப:- அவர் இப்படி ஒரு செய்தியைக் கூறும்போது இதற்கான ஆதாரத்தைத் தெரிவித்துச் சொல்ல வேண்டும். அதற்கு யோக்கியதை இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும். சரியாக ஆராயாமல் இத்திட்டம் தொடங்கப்பட்டு விட்டதாகக் கூறுகிறார். சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க சுற்றுச்சூழல் ஆய்வுகளை மேற்கொள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் நியமிக்கப்பட்டது.

இந்த "நீரி'' நிறுவனம் கால்வாய் தோண்டுவதற்கு 5 மாற்றுப்பாதைகளை பரிசீலித்தது. இந்த நிறுவனம் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான தொடக்க சுற்றுச்சூழல் ஆய்வுகள் குறித்து மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சகத்தின் முன்னிலையில் கருத்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

அப்போது புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அப்போது பா.ஜ.க. அமைச்சராக இருந்த அருண்ஜேட்லிதான் ஒப்புதலே அளித்துள்ளார். அந்த ஆய்வுப் பொறுப்பும் "நீரி'' நிறுவனத்திடம்தான் தரப்பட்டது. இந்த நிறுவனம் 2002 அக்டோபரில் தனது ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கைகள் பரிந்துரைகள் எல்லாம் ஆராயப்பட்டு அதன் பின்னர்தான் அதுவும் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியிலே இருந்த போதுதான் தற்போதைய ஆறாவது பாதைதான் உகந்தது என்று முடிவு செய்யப்பட்டது.

இது தவிர 2004 செப்டம்பர் முதல் 2005 பிப்ரவரி வரை ஆறு கடலோர மாவட்டங்களில் 3 சுற்றுகளாக 14 இடங்களில் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அப்போதும் யாரும் ராமர் பாலம் என்ற பெயரை ஒரு முறை யாரும் உச்சரிக்கவில்லை.

இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல், சரியாக ஆராயாமல் தொடங்கப்பட்டது இத்திட்டம் என்று ஜெயலலிதா, திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டுகளுக்குப் பிறகு நன்கு ஆராயாமல் தொடங்கப்பட்டு விட்டது என்று புலம்புகிறார்.

கே:- மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் அ.தி.மு.க. எப்போதும் முன் நிற்கும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

ப:- அவரது ஆட்சியிலே மூடப்பட்ட உழவர்சந்தை திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், எஸ்மா, டெஸ்மா சட்டங்கள், தொழி லாளர்கள், அரசு அலு வலர்களுக்கு போனஸ் மறுப்பு போன்ற திட்டங்கள் எல்லாம் இதற்கு எடுத்துக்காட்டுகள் என்று ஜெயலலிதா கூறிக் கொள்ளலாமாப அவர் ஆட்சியில் மூடப்பட்ட இது போன்ற திட்டங்களையும், தற்போது இந்த ஒன்றரை

ஆண்டுகளில் கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சாதனைகளையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாமே

கேள்வி:- ராமர்பாலத்தை இடிக்காமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஐந்து மாற்றுத் திட்டங்கள் மத்திய அரசுக்கு தரப்பட்டுள்ளதாகவும் ராமர் பாலத்தை இடிக்காமல் வேறு பாதையைப் பரிசீலிக்கலாம் என்றும் ஜெயலலிதா சொல்கிறாரே?

பதில்:- இரண்டு முறை முதல்-அமைச்சராக இருந்தவர் இப்படி அறியாமையாக இருக்கிறாரே! இவர் கூறுகிற ஐந்து பாதைகளும் ஏற்கத்தக்கதல்ல என்று விஞ்ஞான ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், சுற்றுப்புற சூழல் ரீதியாகவும் ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டு விட்டது. இப்போது போய் அந்தத் திட் டங்களை பரிசீலிக்கலாம் என்கிறார் ஜெயலலிதா.

அது மாத்திரமல்ல, திட் டம் தொடங்கப்பட்டு ஓராண் டிற்குப் பிறகு, திட்டத்தை மாற்றலாம் என்றால் எவ்வ ளவு நிதி விரயமாகும் மீண்டும் எவ்வளவு காலம் தாமதமாகும் என்பதை பற்றிய சிந்தனையே இல்லாமல் கூறுகிறார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டிருப்பது இப்போது நடை முறைப்படுத்தப்பட்டு வரும் 6-வது பாதையைத்தானே அப்போது அவர்கள் கேட்டுக்கொண்ட பாதையில் தானே இப்போது திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பாதையை ராமர் பாலம் உள்ளது என்றால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அந்தப் பாதை வழியாக சேது திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டது ஏன்?

கே:- சேது கால்வாய்த் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பொருளாதார மேம்படும் என்பதும் கப்பல் பயணத்தில் செலவுகள் குறையும் என்பதும் உண்மையல்ல என்று ஜெயலலிதா நேற்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறாரே?

ப:-இவ்வாறு கூறும் ஜெயலலிதா இதே சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது என்ன?

சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும், கடலோரப்பகுதிகளில் அமைந் துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும், வாணிபமும் தொழிலும் பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும் அன் னியச்செலாவணி அதிகம் கிடைக்கும்.

கப்பலின் பயணத்தூரம் வெகுவாகக் குறைவதால் எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக ராமநாதபுரம் போன்ற மிக மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும், வேலை வாய்ப்பு பெருகும், தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும்,சுற்றுலா வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா எழுதியிருக்கிறாரா இல்லையா?

அப்போது பொருளாதார வளம் பெருகும் என்று ஜெயலலிதா கூறிவிட்டு தற்போது அதை மாற்றிக் கூறுகிறார்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மன்னாரில் கடும் சண்டை : 17 விடுதலைப்புலி பலி

இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 17 புலிகள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை :

யாழ்ப்பாணம் மாவட்டம் நாகர்கோவிலில் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் நேற்றிரவு விடுதலைப் புலிகள் அத்துமீறி நுழைய முயன்றனர். பீரங்கிகளால் ராணுவம் மீது கடும் தாக்குதல் நடத்தினர். ராணுவமும் திருப்பி தாக்கியது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சண்டை நீடித்தது. இதில், 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவரும் இந்த சண்டையில் உயிரிழந்தார். மேலும், ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் நடந்த மற்றொரு சண்டையில் ஏழு புலிகள் கொல்லப்பட்டனர். இதில், ராணுவ வீரர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் 120 விடுதலைப் புலிகள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவு - தினமலர்

தமிழனாக பிறந்தவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் - கலைஞர்

தமிழனாக பிறந்தவர்கள் சேது சமுத்திர திட்டத்துக்காக இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தலைமைச்செயலகத்தில் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

உண்ணாவிரதம் இருக்க உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறதே?
நாங்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம். அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. அதற்கு எதிரான வழக்கு எதுவும் இல்லை. தமிழனாக பிறந்த எல்லோரும் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியதற்காக ஆட்சி கலைப்பு தொடர்பான கேள்வி உச்சநீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளதே?
அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியதாக உங்களுக்கு வேண்டுமானால் தெரியலாம்.

போக்குவரத்து பாதிப்பு, கடை அடைப¢பால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதா?
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. எந்த ஆட்சி வந்தால் எங்கு அடி விழும். எதால் அடிப்பார்கள். எங்கு அடைப்பார்கள் என்று உங்களுக்கே தெரியும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.