சூடான செய்திகள்...


இமாச்சல பிரதேசத்தில் இறுதி கட்ட ஓட்டுப்பதிவில் சுறுசுறுப்பு


சிம்லா : இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. 65 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவில், 5,946 மையங்களில் வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு அளிக்கின்றனர். மாநிலத்திற்கு நவ. 14ம் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவுடன் துவங்கி, இறுதி கட்ட ஓட்டுப்பதிவு இன்றுடன் முடிவடைகிறது. 324 தொகுதிகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலின் முடிவுகள் டிச. 28ம் தேதி வெளியிடப்படுகிறது. ஓட்டுப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை பம்பைக்கு சிறப்பு பஸ் : விரைவு போக்குவரத்து கழகம்

மதுரை : சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து பம்பைக்கு தினமும் இரவு 10 மணிக்கு சிறப்பு பஸ் புறப்படுகிறது. பயணிகள் வருகையை பொறுத்து பம்பையில் இருந்து மதுரைக்கு பஸ் புறப்படும். மதுரை பம்பை இடையே டிக்கெட் ஒன்றுக்கு ரூ.250 கட்டணம். முன்பதிவுக்கு கூடுதலாக ரூ.15 செலுத்த வேண்டும். பக்தர்கள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. விவரங்களுக்கு 0452 2585 838 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


சாப்பாட்டுக்கே கஷ்டமாக உள்ளது: இலங்கை அகதிகள்


ராமேஸ்வரம்: உணவு பொருட்களின் விலை ஏற்றத்தால் அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டமாக உள்ளதாக ராமேஸ்வரம் வந்த அகதி கூறினார். இலங்கை கிளிநொச்சி மற்றும் மன்னாரை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் படகில் வந்திறங்கினர். தனுஷ்கோடி போலீசார் விசாரணை செய்து மண்டபம் முகாம் அனுப்பி வைத்தனர். அகதி கணேசன் கூறுகையில்,சூஇலங்கையில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பதால் அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டமாக உள்ளது. வெளியில் நடமாடுவதும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் நகைகளை விற்று படகுக்கு தலா ரூ. 15 ஆயிரம் கட்டணம் செலுத்தி இங்கு வந்தோம். இரவில் வரும்போது நடுக்கடலில் பலத்த காற்று வீசியதால் இரண்டு முறை படகு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. அபாயத்திலிருந்து தப்பித்து தனுஷ்கோடி வந்து சேர்ந்தோம்' என்றார்.


மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் நி‌லச்சரிவு


மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பரலியாறு பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையத்திலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் பரலியாறு பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ‌போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து சரியான தகவல் இல்லை.

48 மணி நேரம் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்


சென்னை : வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை , திருவாரூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்ள் மற்றும் தமிழகம் முழுவதும் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று ( 19 ம் தேதி ) விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து 48 மணி நேரம் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தரவு - தினமலர்

0 comments: