Saturday, December 1, 2007
"ராமேஸ்வரம்" - விமர்சனம்
ராமேஸ்வரத்துக்கு வரும் இலங்கை அகதிகளுக்கு இடம் தந்து உதவுகிறார் உள்ளூர் பெரும்புள்ளி லால். சொந்த நாட்டுக்கு திரும்பும் முயற்சியில் இருக்கும் அகதி ஜீவாவை, காதலிக்கிறார் அவர் மகள் பாவனா. இதை லாலும் பாவனாவின் முறைமாமன் போஸ் வெங்கட்டும் எதிர்க்கிறார்கள். முடிவில் காதல் ஜெயித்ததா என்பது க்ளைமாக்ஸ்.
வழக்கமான காதல் எதிர்ப்புதான் கதை. இலங்கை அகதியின் பின்னணியில் அதை சொல்லியிருப்பதும், அவர்களின் வலிகளை இன்னொரு பரிமாணத்தில் காட்டியிருப்பதும் புதிது.
அகதிகளாக ராமேஸ்வரத்துக்கு கூட்டம் வரும்போது, இலங்கை பிரச்னையை இயக்குனர் தொடப்போகிறார் என நினைத்தால் புஸ். அடுத்தடுத்து வரும் காட்சிகள் காதலை மட்டுமே மையப்படுத்தி செல்கிறது. ஜீவாவை கண்டதுமே காதல் வயப்படும் பாவனா, துரத்தி துரத்தி காதலிக்கிறார்.
"இலங்கைக்கு போனால் ஒரு நாள்கூட உன்னால வாழ முடியாது" என ஜீவா கூற, "சாகவும் தயார்" என்கிறார் பாவ்ஸ். அந்த அளவுக்கு பாவனாவின் காதல் வலுவானது எனக்கூறும் இயக்குனர் அதை காட்சிகளில் விளக்கத் தவறியிருக்கிறார். கேரக்டருக்காக தன்னை வருத்திக்கொள்ளும் ஜீவாவா இது? ஒரே காட்சியில் இலங்கை தமிழையும் லோக்கல் தமிழையும் கலந்து பேசுகிறார். ஒரு காட்சியில் பாவனா காதலை ஏற்றுக்கொள்வதும் இன்னொரு காட்சியில் அவரிடமிருந்து ஒதுங்கிப்போவதும் கிளைமாக்சில் "காதலுக்காக வரல. உன் உயிரை காப்பாத்ததான் வந்தேன்" எனச்சொல்லும்போதும் ஏற்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் அவர் தவிப்பது அழகான கவிதை.
படம் முழுவதும் வந்தாலும் பாவனாவின் நடிப்பை தேட வேண்டியிருக்கிறது. சொந்த மண்ணில் சொந்தங்களை இழந்த மணிவண்ணன், ‘மிஞ்சியிருப்பது பேரன் ஜீவாதான்; அவனை இலங்கைக்கு அனுப்ப மாட்டேன்’ என உருகும் போது மனதில் ஆணியடிக்கிறார். "தீபாவளி"யில் பார்த்த அதே வேடத்தில் லால். பாவனாவின் முறைமாமன் வெங்கட்டின் வில்லத்தனம் ரசிக்கலாம். ஜீவாவை வெங்கட் கைது செய்யும்போது, "நீங்க சொல்லும் நேரத்துல ஜீவா என்கூடத்தான் படுத்திருந்தார்" என பாவனா சொல்வது காட்சிக்கு கனம்.
வெங்கட்- ஜீவா மோதும் அந்த சண்டைக் காட்சி, மினி த்ரில். குருதேவ், வெற்றியின் ஒளிப்பதிவு கச்சிதம். நிருவின் இசையில் கபிலன் எழுதிய "எல்லோரையும் ஏற்றிப் போக கப்பல் வருமா" பாடலில் ஆழம். பின்னணி இசையில் இளையராஜாவின் பழைய படங்களை ஞாபகப்படுத்துகிறார். பாவனாவின் போட்டோவுக்கு பின்னால் கல்யாண தேதியை எழுதியிருக்க, அதை பார்க்கும் போலீசார் அன்றைய தினம் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என கணிக்கிறார்கள். இந்த மாதிரி படத்த¤ல் வரும் பல சீரியஸ் காட்சிகள் காமெடியாக தெரிகிறது.
தரவு - தமிழ்முரசு
Labels:
திரை விமர்சனம்
Subscribe to:
Post Comments
0 comments:
Post a Comment