பிளாட்பார கடைகளை விடவும் மலிவான சரக்குகள் விற்கப்படும் கோலிவுட்டில், எப்போதாவது ஐ.எஸ்.ஐ சரக்குகளும் எட்டிப்பார்க்கும். இந்த படம் அந்த வரிசையில் சேர்த்தி. முதல் காட்சியே இயக்குனர் நிஷிகாந்தின் கௌரவத்தை சொல்லும் அசத்தலான தோரணவாயில்! வேலைக்கு கிளம்பும் மாதவன், மகளுக்கு முத்தம் கொடுக்கிற நேரத்தில் பின்னணியில் ஒலிக்கும் ரயிலின் சப்தமும், திரும்ப திரும்ப வரும் ஒரே காட்சியில் ஒரே மாதிரியான வாழ்க்கை சுழற்சியால் சலிப்புக்குள்ளாகி கிடக்கும் ஹீரோவின் மனசையும் அழகாக வெளிப்படுத்தி விடுகிறார். அந்த மனசுக்குள் இராணுவ கம்பீரத்தோடு ஒரு அகிம்சை அரசன் புகுந்துவிட, நடக்கிற களேபரங்கள்தான் கதை.
வங்கியில் வேலை பார்க்கும் மாதவனுக்கு ரயிலில் ஜன்னலோர சீட்டை பிடித்து அலுவலகத்திற்கு போய் சேருவதே பெரிய சவால். தன்னை சுற்றி நடக்கிற சின்ன சின்ன அநியாயங்களை தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு சூழ்நிலை சோகங்கள். தண்ணீர் லாரிக்காரனை கூட கண்டிக்க முடியாத அளவுக்கு வேகத்தடை வாழ்க்கை. நல்ல ஸ்கூலில் பிள்ளையை சேர்க்க வேண்டும் என்றால், டொனேஷன் நிர்பந்தங்கள். மனைவி சங்கீதாவின் ஒருசொல் மாதவனுக்கு மதம் பிடிக்க வைக்கிறது. பிறகென்ன, வெண்கலக்கடைக்குள் புகுந்து துவம்சம் செய்வது மாதிரி செய்கிறார் சுற்றி நடக்கிற அவலங்களை. கணவனுக்கு மனநோய். கலங்கிப் போகிற மனைவியால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில், தீவிரவாதியாக கருதப்படும் அவனை என்ன செய்கிறது போலீஸ்? பல இடங்களில் பின்னணி இசையே மௌனமாகி போகிற அளவுக்கு, மனசை பிசைந்து வணக்கம் போடுகிறார்கள்.
இரண்டு ரூபாய் அதிகம் வாங்கும் கூல் டிரிங்ஸ் கடைக்காரனையும், அவன் கடையையும் துவம்சமாக்கும் மாதவனின் ஆக்ரோஷம், மெல்ல மெல்ல துப்பாக்கி லெவலுக்கு உயர்வது எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. சிறிய பிரச்சனைதான் என்றாலும் தண்ணீர் லாரிக்காரனின் அலட்சியத்திற்கு அவர் கொடுக்கிற தண்டனை நரம்பை முறுக்கேற்றுகிறது. மருத்துவமனையில் அவர் கேட்கிற கேள்விகளில் இருக்கிற நியாயம் சாமானிய மக்களின் அன்றாட அறிக்கை! கையில் கிரிக்கெட் பேட் ஒன்றை எடுத்துக் கொண்டு அவர் நடக்கிற ராஜநடை பயங்கரம்.
பட்டுப்புடவையின் சரிகை மாதிரி மாதவனின் கேரக்டர் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ரூபாய்க்கு சண்டை போடுகிற கஞ்சன் அல்ல என்பதை, பிளாட்பார சிறுவனிடம் அவர் காட்டுகிற தாராளம் உணர்த்துகிறது. நட்ட நடுநிசியில், அதுவும் நடுரோட்டில் நின்று கொண்டு அண்ணாந்து பார்த்தபடி, இறைவனுக்கு கடிதம் எழுதும் மாதவனின் நடிப்பிற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அவரே எழுதியிருக்கும் வசனங்கள். மகளின் புகைப்படத்தை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு வருகிறாரே மாதவன், அங்கேதான் க்ளைமாக்சில் நடக்கும் விபரீதத்தை இன்னும் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்கள்.
மனைவியாக உயிர் சங்கீதா. இந்த பத்து வருடத்தில் என்ன சுகத்தை கண்டேன்? என்று புலம்பும் லட்சத்து ஓராவது மனைவி. அவரை தடுத்து நிறுத்தியிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது என்று அழுது புலம்பி பரிதாபத்தை சேர்த்துக் கொள்கிறார்.
காவல் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கம்பீரமாக உணர்த்தியிருக்கிறார் சீமான். பெண்களிடம் போலீஸ் விசாரணை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அவர் சங்கீதாவிடம் நடத்தும் விசாரணை உதாரணம். பேசாம என்னுடைய காக்கி சட்டையை கழற்றி அவனை போட்டுக்க சொல்லலாம்னு தோணுது என்கிறபோது கைத்தட்டல்களில் அதிர்கிறது தியேட்டர். தன்னுடைய தமிழ் பற்றை தூய தமிழ் வசனங்களாலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பல காட்சிகளில் மௌனத்தையே இசையாக்கி அழகு சேர்த்திருக்கிறார் பி.சமீர். பின்னணி இசையோடு ஒளிப்பதிவும் கைகோர்த்து கொள்ள... நடுநிசியும், அரையிருட்டும் சொல்கிற சங்கதிகள் அநேகம். ஒளிப்பதிவாளர் சஞ்சய் யாதவ் பிரமிக்க வைத்திருக்கிறார். ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்திருக்கிறார் ஜி.பி.பிரகாஷ். பெரிதாக ஒன்றுமில்லை.
மீடியாவின் அவசியங்களை சொல்கிற அதே நேரத்தில், அவைகளின் அவசரங்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஒரே நேரத்தில் பல சேனல்காரர்களின் அறிவிப்புகள் மக்களுக்கு தலைச்சுற்றலையே ஏற்படுத்தும் என்பதையும் ஒரே பிரேமில் வெளிப்படுத்துகிறார். இப்படி சின்ன சின்ன நகாசு வேலைகள் இயக்குனரின் புத்திகூர்மைக்கு வெளிச்சம் போடுகிறது.
தமிழ்சினிமாவை தூர்வார, 'எவனோ வருவான்' என்று நம்பியிருந்தோமல்லவா?அவன்,
வந்துட்டான்...!
-ஆர்.எஸ்,அந்தணன்
0 comments:
Post a Comment