மிருகம் - விமர்சனம்

வானத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து நிற்கிறார் சாமி. சாய்ந்து கொண்டிருக்கிற தமிழ்சினிமாவை, தான் வளர்த்த மிருகத்தின் கொம்புகளால் முட்டுக் கொடுத்திருக்கிறார். எண்பதுகளின் இறுதியில் வாழ்ந்த ஒரு மிருகத்தின் வாழ்க்கை, நரகத்திற்கு போன கதை இது. டாகுமென்டரி அபாயங்கள் இருந்தும், இந்த கதையை எடுக்க துணிந்ததற்காகவே, ஐயா... சாமி அள்ளிக் கொள்ளுங்கள் பாராட்டுகளை!

எண்ணிப்பார்த்தால் எண்பது குடிசைகள் தேறும் அந்த கிராமத்தில். அங்கே பொலிகாளையை தொழிலுக்கு அழைத்து போகும் இளைஞன் அய்யனார், அந்த காளைக்கே உரிய குணங்களோடு வளர்ந்து நிற்கிறான். ஆசைப்படுகிற பெண்களையெல்லாம் அள்ளி திணிப்பதே மற்றொரு வேலை இவனுக்கு. இந்த காளையை அடக்க எவளாவது வரமாட்டாளா என்று ஏங்கித்தவிக்கும் வயதான தாய். ஊரே அஞ்சி நிற்கும் இவனையும் திருமணம் செய்து கொள்கிறாள் ஒருத்தி. முதலிரவே கற்பழிப்பாக முடிந்து போக, யார் இவன்? இவனுக்குள் இந்த மிருகம் வந்து உட்கார்ந்து கொண்டது எப்படி? கேள்வி எழுகிறது. பிளாஷ்பேக்! இரண்டாம் பாதியில் இவன் புரண்டு படுத்த புழுதிகளே வியாதியாக வந்து நிற்க, அப்போதும் குறையாத வேகத்தோடு திரிகிறான் அவன். ஒருகட்டத்தில், வைரம் பாய்ஞ்ச கட்டைடா இது என்று மார்தட்டிய இவன், கரையான் அரித்த விறகாக உருக்குலைந்து போக, அச்சச்சோ என்று முணுமுணுக்க வைக்கிற க்ளைமாக்சோடு முடிகிறது படம்.

அய்யனராக ஆதி. இந்த கதைக்கென்றே பிறந்தவர் மாதிரி அத்தனை பொருத்தம். சுட்ட கருங்கல் மாதிரி நெட்ட நெடுந்தோற்றம். கண்களில் பீறிடும் ஆவேசம். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்கையில் அந்த எருது காளையையே மிரள வைக்கிறது தோற்றம். இந்த இளைஞர் தமிழ் சினிமாவின் கம்பீரமான வரவு. ஊரே சேர்ந்து தண்ணீர் பிரச்சனை பற்றி பேசிக்கொண்டிருக்க, எனக்கென்ன என்று அலட்சியமாக போகும் அய்யனார், இறுதியில் அந்த ஊர் தண்ணீர் பஞ்சத்தை போக்க நிலம் தருவதும், ஊர் மக்கள் அந்த தண்ணீரை குடிக்கிறார்களா என்று ஆவல் பொங்க கேட்பதும் கண்களை குளமாக்கும் காட்சி. அந்த க்ளைமாக்ஸ் எதிர்பாராத வலி.

பனைமரம் ஏறுவாள். ஆடுகளுக்கு காயடிப்பாள். எவன் மறுத்தால் என்ன? என் கணவனின் பிணத்தை நான் ஒருத்தியே சுமப்பேன் என்று பொங்கி எழுவாள்... பத்மபிரியாவின் கேரக்டரை எரிமலையும், பனிமலையும் கலந்து செய்த சிற்பம் போல் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. மருத்துவமனையில் தான் பெற்ற பிள்ளையை தூக்கி எறிய முயலும் அய்யானரை ஓங்கி உதைக்கிறாரே... மெய் சிலிர்த்து போகிறது. சொந்தக்குரலில் பேசியிருந்தால் அவார்டு நிச்சயம்! ஐயோ பாவம்!

கருப்பா... என்று வானத்தை நோக்கி குரல் எழுப்பும் கஞ்சா கருப்பும் ரசிக்க வைத்திருக்கிறார். ஊரே தீண்ட மறுத்த அய்யனாரை வாஞ்சையோடு தன் திருமணத்திற்கு அழைக்கும் போது குணச்சித்திர நடிகராகவும் பிரமோஷன் ஆகிறார். அய்யனாரின் அம்மாவாக நடித்திருக்கும் அந்த மூதாட்டியின் நடிப்பும் அருமை.

பின்னணி இசையிலும், மனசை சுண்டும் பாடல்களிலும் மற்றொரு முறையும் தங்களை நிருபித்திருக்கிறார்கள் சபேஷ்-முரளி சகோதரர்கள். அதிகம் பாராட்டப்பட வேண்டிய மற்றொருவர் ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி.

எண்பதுகளில் விபச்சாரம் அங்கீகரிப்பட்ட தொழிலா? சோனாவின் வீடும், சுற்றி வரும் பைங்கிளிகளும், போலீஸ் பார்வையில் படாமலே போய்விட்டார்களா என்ன? அதேபோல், கற்பை உயிர் போல நேசிக்கும் கிராமத்து பெண்களா அய்யனாரின் ஒரு கண்ணசைவில் அத்தனையையும் பறி கொடுக்கிறார்கள்?

வேலி தாண்டி பயிரை மேய்ந்திருந்தாலும், மிருகம் என்பதால் மன்னிப்போம். மற்றபடி படையலே போடலாம் இந்த சாமிக்கு!

தரவு - தமிழ்சினிமா.காம்

1 comments:

December 18, 2007 at 8:50 PM காட்டாறு said...

வைரமுத்துவின் கருவாச்சி காவியத்தை நினைவு படுத்துதோ?