புதிய கட்சி தொடங்க நடிகர் சிரஞ்சீவி முடிவு

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். வரும் புத்தாண்டு தினத்தில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திராவில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தனிப்பெரும் சக்திகளாக உள்ளன. தேர்தல் சமயத்தில் இவைகளுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளாக பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. இதற்கு மாற்றாக 3-வது பெரும் சக்தியாக உருவெடுக்க நடிகர் சிரஞ்சீவி முடிவு செய்திருப்பதாகவும், இதன் பொருட்டு புதிய கட்சியை தொடங்கும் முடிவுக்கு அவர் வந்திருப்பதாகவும் அவரது நெருங்கிய நண்பர் வட்டாரங்கள் தெரிவித்தன.

நடிகர் சிரஞ்சீவி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். உ.பி.யிலும், பீகாரிலும் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள பிற்படுத்தப்பட்ட யாதவர்களுக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட சமாஜ்வாடியும், ராஷ்டிரிய ஜனதாதளமும் எப்படி மக்களின் அமோக ஆதரவை பெற்று ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்ததோ அதே போல் சிரஞ்சீவியின் கட்சியும் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக சிரஞ்சீவி தனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள் மற்றும் அறிவு ஜீவிகளிடம் ஆலோசனை செய்ததாகவும், அவரது மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் தற்போது விலகி விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர் என கருதப்பட்ட சிரஞ்சீவி தற்போது அரசியலில் குதிக்க முடிவு செய்திருப்பது தெலுங்கு தேசம் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் லேடி சூப்பர் ஸ்டாராக கருதப்படும் விஜயசாந்தி ஆரம்பித்துள்ள கட்சி எவ்வித தாக்கத்தையும் ஆந்திர அரசியலில் ஏற்படுத்தாத நிலையில் சிரஞ்சீவி எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது அடுத்த தேர்தலில் தான் தெரியும் என ஐதராபாத் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments: