எம்.எஸ்.வி. துப்பிய எச்சில்தான் இன்றைய இசை!

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி துப்பிய எச்சில்தான் இன்றைய சினிமா இசை என்று பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கோபமாக பேசினார்.

பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் மற்றும் மோசர்பேர் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் "வெள்ளித்திரை". இந்தப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி கேசட்டை வெளியிட மலையாள நடிகர் மோகன்லால் பெற்றுக் கொண்டார். விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி, பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அவர்களை பாராட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதாவது:

விஸ்வநாதன் ராமமூர்த்திதான் என் குரு. வாழ்வு கொடுத்தவர்கள். அவரை பற்றி ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது பேசாவிட்டால் அந்த நாள் எனக்கு நிறைவாக இருக்காது. அவர் அருகில் நிற்க முடியாதா? அவர் அமர்ந்திருக்கும் மேடையை தொட முடியாதா? என்று ஏங்கிய காலம் உண்டு. இன்று அவர்களால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். 1,700 படங்களுக்கு மேல் இசை அமைத்து உலக சாதனை படைத்தவர்கள் அவர்கள். அவர்களது தாக்கம் இல்லாமல் இப்போதும் ஒரு பாட்டு வெளிவருவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் கடித்து துப்பிய எச்சிலைத்தான் இப்போது இசையமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் ஒரே டிராக்கில் அற்புதமான பாடல்களை கொடுத்தார்கள். இப்போது 200 டிராக் இருந்தாலும் அவரது தரத்தை யாராலும் கொடுக்க முடியவில்லை. நவீன இசையமைப்பில், உடன் பாடுபவர்கள் பாடுகிறார்களா என்று கூட தெரியவில்லை. டூயட் பாட்டு என்றால் கூட தனியாக உணர்ச்சியே இல்லாமல் பாட வேண்டியுள்ளது. கூட பாடுவது யார் என்று கேட்டால். Ôஇன்னும் முடிவு செய்யவில்லை. நீங்க உங்க டிராக்க மட்டும் பாடுங்கÕ என்று சொல்கிறார்கள். காலத்துக்கேற்ற மாற்றம் அவசியமாக இருந்தாலும் அது இசையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பேசினார்.

விழாவில் நடிகர் பிருத்விராஜ், இயக்குனர்கள் மணிரத்னம், விஜி, கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர்கள் வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ்குமார், ஆகியோர் பேசினர். இயக்குனர் ஷங்கர், கே.பாக்யராஜ், எம்.ராஜா, சரண், நடிகர்கள் ஜெயம்ரவி, ஜீவா, அர்ஜுன், பிரசன்னா, நடிகை லட்சுமிராய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மோசர்பேர் நிறுவன அதிகாரி தனஞ்செயன் வரவேற்றார். பிரகாஷ்ராஜ் நன்றி கூறினார்.

2 comments:

December 19, 2007 at 4:49 AM யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உண்மையைக் கூறியுள்ளார்.ஆனால் இது வாய்ப்புக் குறைந்த காலக் கருத்தானதால் ;ஆற்றமை என விமர்சிக்க வாய்ப்பு உண்டு.
எம்.எஸ்.வி யுடன் அவர் சமகால கே.வி.எம் போன்றோரையும் கூறுதல் வேண்டும்.

December 19, 2007 at 7:48 AM ✨முருகு தமிழ் அறிவன்✨ said...

யோகன்,SPB வாய்ப்பு குறைந்ததால் அப்படிப் பேசினார் என்று சொல்ல வாய்ப்பில்லை(அடடா,என்ன மோனை?????),ஏனெனில் காபி வி அனுவில்(சுமார் 3 மாதங்களுக்கு முன் ஒளிபரப்பானது) வந்த அவரின் தங்கை சைலஜா,அண்ணன் இனிமேலும் இளமைக்கால்ம் போலவே நினைத்துக்கொண்டு மிகவும் உழைக்கிறார்,அவர் வேலை செய்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
எந்தஒரு துறையிலும் சிகரம் தொட்டவர்கள் அவரவர் துறைகளில் தரம் நீர்த்துப் போகும்போது இவ்வகையான கோப வெளிப்பாடுகள் வருவது இயற்கைதான்.
யோசித்துப் பாருங்கள்,ஒரே ட்ராக்கில் அவர்கள் பாடல்கள் கொடுத்திருக்கிறார்கள் எனில்,எத்தனைவித பிண்ணணி இசைக்கருவிகள் இருக்கிறதோ,அத்தனையுடன் பாடும் மக்களும் இணைந்து ஒரே சமயத்தில் quality இசை கொடுக்கவேண்டும்;இன்று 200 டிராக் இருந்தும் தரம் இல்லையெனும் போது,அவரின் கோபம் தார்மீகமானது,உண்மையானது.