பிரிவோம் சந்திப்போம் - திரை விமர்சனம்

மார்கழி மாசத்து கோலமும், மத்தியில் வைக்கப்பட்ட பூசணிப்பூவும் போன்றவை கரு.பழனியப்பனின் படங்கள். இரைச்சல்களையே விளைச்சல்களாக நினைக்கிற கோடம்பாக்கத்தில், பழனியப்பனின் படங்கள் இதமான தாலாட்டு.

குத்துப்பாட்டு, குத்தீட்டி சண்டை, இரட்டை கூட அல்ல... ஒற்றை அர்த்தமாகவே ஆகிவிட்ட டயலாக்குகள்.. இவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு கமர்ஷியல் படத்தை கொடுத்துவிட முடியுமா? அதெப்படி? என்பவர்கள் பிரிவோம் சந்திப்போம் படத்தை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு உள்ளே நுழையலாம்.

விட்டால், ரங்கநாதன் தெருவை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு உறவுகள் நிறைந்த குடும்பத்தில் சேரன். அதற்கு நேர் எதிராக ஒரே பெண்ணாக பிறந்துவிட்ட சினேகா. இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். தியான மண்டபத்து அமைதியை, திருவிழா கூட்டம் அசத்துகிறது. இந்த உறவுகளும், அவர்கள் தரும் அன்பும் நிரந்தரம் என்று மகிழும் சினேகாவின் ஆசையில் திடீரென்று விழுகிறது டிரான்ஸ்பர். சேரனே விரும்பி ஏற்கும் இந்த டிரான்ஸ்பர் அட்டக்கட்டி மலைப்பிரதேசத்துக்கு தனிக்குடித்தனமாக இடம் பெயர்கிறது. அங்கே...? தமிழ்சினிமாவே பார்த்திராத வில்லன் ஒருவன்! வேறு யாருமல்ல, தனிமை! சேரன் வேலைக்கு போய்விட தனிமையில் இருக்கும் சினேகா படுகிற வேதனையை அப்படியே தியேட்டருக்குள் 'பாஸ்' பண்ணுகிறார் இயக்குனர். இருவரும் மறுபடியும் சொந்த ஊருக்கே திரும்பிவிட மாட்டார்களா என்று ஏங்குகிற நேரத்தில் ஒரு திடுக் திருப்பம். சற்றே தவிக்க வைத்து வணக்கம் போடுகிறார் இயக்குனர்.

எதிரே நிற்பவரின் நடிப்பையும் சேர்த்து பறிக்கும் வாலியின் வலிமை கொண்டவர் சினேகா. விடுவாரா, இப்படி ஒரு கேரக்டர் கிடைத்தால்? தெரியாத மொழிகளிலும் டப்பிங் பேசுகிற ஆற்றல் அவர் கண்களுக்கு உண்டு. மகிழ்ச்சி, ஏமாற்றம், விரக்தி, வெறுமை எல்லாவற்றையும் நொடி பொழுதில் புரிய வைக்கின்றன அந்த கண்கள். 'நமக்கு எல்லாம் தருகிற அந்த கடவுளுக்கு நன்றி சொல்லணும்' என்றபடி, ஒவ்வொரு முறையும் உண்டியலை நிரப்புவது அழகு. பேச ஆளில்லாமல் தன்னை சுற்றி ஒலிக்கிற சப்தங்களை பதிவு செய்து அவற்றோடு பழக ஆரம்பிப்பது பரிதாபம். நல்லவேளையாக அவரை முழு மனநோயாளியாக்காமல் கரை சேர்க்கிறார்கள்.

சேரன்- சினேகா காதலில் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லை. திருமணத்திற்கு முன்பு சினேகாவை தனிமையில் சந்திக்க விரும்பி, அவர் செய்யும் முயற்சிகளும், அது பலிக்காமல் போய் தவிப்பதும் கலகலப்பு.

ஒரு மருத்துவராக மட்டுமல்லாமல், அந்த ஊரின் செல்லப்பிள்ளையாகவே வலம் வரும் ஜெயராம் சட்டென்று சினேகாவின் மன ஓட்டத்தை புரிந்து கொள்வது ஆறுதல். தானாக மருந்து எடுத்துக் கொள்ளும் பலருக்கு ஜெயராமின் அட்வைஸ் ரொம்ப அவசியமான விஷயம்.

எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமணன் டயலாக்குகள் கரு.பழனியப்பன் ஒரு பொறுப்பான பத்திரிகையாளர் என்பதையும் பறைசாற்றுகிறது. 'ஃபாதர் ஆஃப் நேஷனை, ஃபாதர் ஆஃப் ஸ்டேட் ஆக்கிட்டீங்களே' என்று கவலைப்படுவதை சொல்லலாமா? காந்தியும் மதுக்கடைகளும் குறித்த அவரது கேள்வியில் இருக்கிற நியாயம், நெருப்பு! இரட்டை புலவர்கள் கதையையெல்லாம் சினிமாவில் சொல்கிற அளவுக்கு தைரியத்தை பெற்ற விஷயத்தில் பழனியப்பன், படவுலக ராமதாஸ் ஆகியிருக்கிறார்.

'லைட் புரோன்' என்று தன் கலருக்கு விளக்கம் கொடுக்கும் கஞ்சா கருப்புவின் காமெடி தனி ஆவர்த்தனம்.

கதை மனிதர்களில் ஒருவராக நம்மையும் கடத்திச் செல்கிறது எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு. வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் மனசை வருடும் மயிலிறகு!

இரண்டாம் பாதியின் துவக்கத்திலிருந்தே சண்டிக்குதிரையாகி அடம் பிடிக்கிறது திரைக்கதை. நேரம்போகாமல் தவிக்கிறார் சினேகா என்ற ஒரு விஷயம் திரும்ப திரும்ப ரிப்பீட் ஆகி, ரசிகர்களை நெளிய வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
பரிசுத்தமான பனித்துளிதான்... தாகம் தணிக்குமா?

2 comments:

January 18, 2008 at 7:29 PM காட்டாறு said...

விமர்சனம் நீங்களா? நல்லாயிருக்குங்க.

//தெரியாத மொழிகளிலும் டப்பிங் பேசுகிற ஆற்றல் அவர் கண்களுக்கு உண்டு//
அடேய் யாரங்கே.. இங்கே வாங்கப்பா... யாரோ செநேகா ஜொல்லி வடிக்கிறாங்க...:-)

January 18, 2008 at 9:24 PM சேதுக்கரசி said...

இந்தப் படத்தின் ஒரு ஹைலைட்டே செட்டிநாட்டுத் திருமண விழாவின் சிறப்பைப் பெரும்பாலும் இம்மிபிசகாமல் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியதாக இருக்கலாம் என்றொரு கருத்து நண்பர்களிடையே நிலவுகிறது (புகைப்படங்கள் மற்றும் பாடல் காட்சியைத்தான் பார்த்திருக்கிறேன், தவறிருந்தால் சொல்லவும்) - அதைப் பற்றி நீங்கள் ஒன்றுமே குறிப்பிடவில்லையே?