சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்கும் !

விலையை குறைக்காவிட்டால் சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்கும் -தமிழக அரசு எச்சரிக்கை

சிமென்ட் விலையை குறைக்காத தனியார் சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இப்போது தனியார் ஆலைகள் உற்பத்தி செய்யும் சிமென்ட் ஒரு மூட்டை ரூ.245க்கு விற்கப்படுகிறது. சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சிமென்ட் விலையை குறைக்க அரசு பல முறை எச்சரித்தும், தனியார் ஆலைகள் அசைந்து கொடுக்கவில்லை. பல்வேறு எதிர்க்கட்சிகளும் சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்து, குறைந்த விலைக்கு விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்னும் தனியார் நிறுவனங்கள் விலையை குறைக்க முன் வரவில்லை.

இந்நிலையில், சிமென்ட் விலையை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கனிம வளத் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் திரிபாதி, நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் சண்முகம், தமிழ்நாடு சிமென்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் சத்யகோபால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் பணீந்திர ரெட்டி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் கனிமப் பொருள் மற்றும் உலோகங்கள் வணிகக் கழகம் (எம்.எம்.டி.சி.) மூலம், அரசு நிறுவனமான டான்செம் நிறுவனம் உடனடியாக ஒரு லட்சம் டன் சிமென்ட் இறக்குமதி செய்வதற்கான ஆணையை உடனே பிறப்பிப்பது என்று முடிவு செய்யப் பட்டது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சிமென்டை, மாவட்ட மற்றும் வட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 200க்கும் மேற்பட்ட கிடங்குகளில் இருப்பு வைத்து நேரடியாக நுகர்வோருக்கு அடக்க விலையில் லாபம் ஏதுமின்றி விற்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், டான்செம் தேவைக்கேற்ப நேரடி ஒப்பந்தப் புள்ளி மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஏற்பாட்டினை விரைவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவைகளுக்கெல்லாம் பிறகும் தனியார் சிமென்ட் ஆலை அதிபர்கள் தங்கள் விலையைக் குறைத்துக் கொள்ள முன்வரவில்லை என்றால், பொது மக்கள் நலன் கருதி தமிழகத்திலே உள்ள தனியார் சிமென்ட் தொழிற்சாலைகளை அரசே நாட்டுடமையாக்கிட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments: